எஸ்.எம்.எஸ்.,சை செயற்கையாக திருத்தலாம் : மகாஜன் வழக்கில் செய்முறை விளக்கம்

Read Time:3 Minute, 46 Second

“மொபைலில் அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்.,சை திட்டமிட்டு செயற்கையாக உருவாக்க முடியும்’ என்பது குறித்து சாப்ட்வேர் நிபுணர் ஒருவர் நீதிபதி முன்பு கோர்ட்டில் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தார். பா.ஜ.,முன்னணி தலைவராக இருந்த பிரமோத் மகாஜனை, கடந்த ஆண்டு அவரது தம்பியான பிரவீன் மகாஜன் சுட்டு கொன்றார். பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கு மும்பை கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. பிரமோத் மகாஜன் கொலை செய்யப்படுவதற்கு முன் அவரது மொபைலுக்கு பிரவீன் மகாஜன் மிரட்டல் எஸ்.எம்.எஸ்., அனுப்பியிருந்தார். இவ்வழக்கில் இந்த எஸ்.எம்.எஸ்., ஒரு ஆதாரமாக உள்ளது. “இது போலியானது; திட்டமிட்டு செயற்கையாக உருவாக்கப்பட்டது என்றும் “மெமரி’யில் உள்ள எஸ்.எம்.எஸ்.,சை திருத்தம் செய்யலாம்” என பிரவீனின் வக்கீல் ஹர்ஷத் பாண்டா கூறினார்.இதை நிரூபிக்க சாப்ட்வேர் நிபுணர் ஹரி கிருஷ்ணா என்பவரையும் சாட்சியாக கோர்ட் முன்நிறுத்தினார். ஹரி கிருஷ்ணா இது சம்மந்தமாக செயல் முறை விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாக கோர்ட்டில் தெரிவித்தார். இதற்கு அரசு வக்கீல் நிதின் பிரதான், “”ஹரிகிருஷ்ணா வேறொரு தொழில் நுட்பத்தை கொண்ட மொபைலை பயன்படுத்துகிறார்,”என்று கூறி இதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்.

பிரமோத் மகாஜன் பயன்படுத்திய மொபைலை போன்ற தொழில்நுட்பத்துடன் கூடிய மொபைலில் செயல் முறை விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.இவ்வழக்கு கடந்த 12 ம் தேதி விசாரணைக்கு வந்த போது நீதிபதி எஸ்.பி.தாவ்ரே,””எஸ்.எம்.எஸ்.,சை திருத்தம் செய்யலாமா என்பதை நிரூபிக்க பிரமோத் மகாஜன் பயன் படுத்தியது போன்ற மொபைல் அல்லது அவரது மொபைலையே பயன்படுத்தி செயல் முறை விளக்கம் அளிக்கலாம்” என்று ஹர்ஷத் பாண்டாவுக்கு அனுமதி அளித்திருந்தார்.

இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது எஸ்.எம்.எஸ்.,சை திருத்தி காண்பிக்கும்படி ஹரிகிருஷ்ணாவுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து ஹரிகிருஷ்ணா எஸ்.எம்.எஸ்.,சை திருத்தம் செய்யும் முயற்சியை துவக்கினார்.அவர் தன்னுடைய முதல் முயற்சியில் தோல்வியடைந்தார்.

பின்னர்,தனது இரண்டாவது முயற்சியில் லேப்டாப் உதவியுடன் மொபைலில் உள்ள எஸ்.எம்.எஸ்சை அவர் வெற்றிகரமாக திருத்தி காட்டினார். பிரமோத் மகாஜன் பயன்படுத்தியதை போன்ற மோட்டாரோலா ஹேண்ட்செட்டில் தான் அவர் இதை செய்து காட்டினார். ஹரிகிருஷ்ணாவிடம் வரும் 19ம் தேதி வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்துவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இந்த வார ராசிபலன் (16.11.07 முதல் 22.11.07 வரை)
Next post ரெயில்வே ஊழியர் தற்கொலை