அமெரிக்காவில், ஓடும் காரில் இருந்து விழுந்து `கோமா’ நிலைக்கு ஆளான தமிழ்ப்பெண்; ஆம்புலன்ஸ் விமானத்தில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டார்

Read Time:4 Minute, 10 Second

indusa-acc.jpgஅமெரிக்காவில் வாழ்ந்த தமிழ் பெண், ஓடும் காரில் இருந்து விழுந்து பலத்த காயம் அடைந்து, `கோமா’ நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்தார். நேற்று அவர், ஆம்புலன்ஸ் விமானம் மூலம், அமெரிக்காவில் இருந்து, சென்னை கொண்டு வரப்பட்டார். திருச்சியை சேர்ந்தவர் எவாஞ்சலின் அந்தோணிசாமி. இவரது மகள் மெக்ளின் ஜெனிதா (வயது26). எம்.பி. ஏ. படித்தவர். இவருக்கும் அமெரிக்க குடிஉரிமை பெற்று, அங்கு வசித்து வரும் திருச்சியை சேர்ந்த சேவியர் என்பவரது மகன் கிறிஸ்டி டேனியல் (28) என்ற கம்ப்ïட்டர் என்ஜினீயருக்கும், கடந்த 28-8-2006-ம் தேதி, திருச்சியில் திருமணம் நடந்தது. அப்போது பெண் வீட்டார் வரதட்சணையாக 50 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் கொடுத்தனர். திருமணம் முடிந்த 5-வது நாளில், கிறிஸ்டி டேனியல், தனது அக்காள் லீனாவுடன் அமெரிக்கா சென்று விட்டார். வடக்கு கரோலினாவில், அங்கு அவர் தனது தந்தை சேவியர், தாய் செல்லம், அக்காள் லீனா ஆகியோருடன் வசித்து வந்தார். பின்னர் 6 மாதங்கள் கழித்து கிறிஸ்டி டேனியல் திருச்சி வந்து, தனது மனைவி ஜெனிதாவை அமெரிக்காவுக்கு அழைத்து சென்றார்.

போனில் தகவல்

கடந்த ஜுலை மாதம் 31-ந் தேதி, கிறிஸ்டி டேனியல், திருச்சியில் உள்ள ஜெனிதாவின் தந்தை அந்தோணி சாமிக்கு டெலிபோன் செய்து, “உங்கள் மகள் கார் விபத்தில் காயம் அடைந்து, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருக்கிறாள்” என்ற திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.

உடனே அந்தோணிசாமி அவசர விசா எடுத்துக்கொண்டு, அமெரிக்காவுக்கு சென்று, ஆஸ்பத்திரியில் இருக்கும் தனது மகள் ஜெனிதாவை பார்த்தார். அப்போது ஜெனிதா சுய நினைவு இன்றி, `கோமா’ நிலையில் இருந்தார்.

பின்னர் சில நாட்களில் ஜெனிதா, சுய நினைவுக்கு திரும்பினார். அப்போது அவர், தனது தந்தையிடம், “நான் அமெரிக்கா வந்தது முதல் என்னை கொடுமை படுத்தினார்கள். கூடுதலாக ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் 100 சவரன் நகை கேட்டு எனது கணவர், மாமியார், நாத்தனார் ஆகியோர் என்னை சித்ரவதை செய்தனர். ஒரு நாள் என்னை காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர். காரில் வைத்தும் என்னை அடித்தார்கள். பின்னர் காரில் இருந்து என்னை கீழே தள்ளி விட்டனர். இதில் நான் பலத்த காயம் அடைந்து, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருக்கிறேன்” என்று கூறியதாக தெரிகிறது.

ஆம்புலன்ஸ் விமானம்

இந்த நிலையில் நேற்று இரவு, அமெரிக்காவில் இருந்து, ஆஸ்பத்திரியின் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் ஜெனிதா, சென்னை கொண்டு வரப்பட்டார். அந்த விமானத்தில் டாக்டர் ஒருவர், நர்சு ஒருவர், அந்தோணி சாமி ஆகியோரும் வந்தனர்.

பின்னர் ஜெனிதா, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

indusa-acc.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அரசு சம்பந்தப்பட்ட மதக் குழுவினரால் குழப்பமடைந்திருக்கும் கிழக்கு
Next post மதுவுக்கு எதிரான போராட்டம் தொடரும்; நடிகை ரோஜா பேட்டி