By 1 November 2015 0 Comments

பதுங்கு குழிகளும், நிலக்கீழ் மாளிகைகளும்.. -முருகபூபதி (கட்டுரை)

timthumbபதுங்கு குழிகளும், நிலக்கீழ் மாளிகைகளும்… வடக்கிலும் தெற்கிலும் நிலத்தின் கீழ் அமைந்த பாதுகாப்பு அரண்களும் அதிகார வர்க்கமும் –முருகபூபதி

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்து இனவிடுதலைப்போராட்டம் தொடங்கியதும் இலங்கைத்தமிழ் சமூகத்தினரிடம் பதுங்கு குழிகள் பேசுபொருளானது. உயிருக்கு அச்சுறுத்தல் வரும்பொழுது ஒவ்வொருவரும் தம்மைப்பாதுகாத்துக்கொள்ள இருப்பிடங்களைவிட்டு ஓடுவார்கள். முடியாதவர்கள், எங்காவது பதுங்குவார்கள். அப்படி ஒரு சூழ்நிலையில் வட இலங்கையில் ஆயுத நெருக்கடி வந்ததும் பதுங்குகுழிகள் தோன்றின.

ஆயுதப்படையினரும் மறைந்திருந்து தாக்கும் கெரில்லாக்களும் தம்மை மறைத்துக்கொள்ள சில போர்த்தந்திரங்களை கையாளுவார்கள். இலை – தழைகள் – தாவரங்களின் கொடிகளை தம்முடலில் சுற்றிக்கொண்டுதான் தாக்குதல்களில் இறங்குவர்.

முகத்தை மறைக்க சாயம் பூசிக்கொள்வர். போர் சம்பந்தப்பட்ட திரைப்படங்களிலும் இந்தக்காட்சிகளை நாம் பார்க்கமுடியும்.

அண்மையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு கருதி ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்ட நிலக்கீழ் மாளிகை பற்றிய செய்திகள் படங்களுடன் ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது.

இப்படி ஒரு சுரங்க இல்லம் அங்கு அல்லது அலரி மாளிகையில் இருப்பதாகவே சில வருடங்களுக்கு முன்னர் பேசிக்கொண்டனர். ஆனால் , அதனை எந்தவொரு ஊடகங்களினாலும் ஊர்ஜிதம் செய்யமுடியவில்லை. இதுபோன்று முன்னர் வெளியான பல ஊர்ஜிதமற்ற செய்திகள், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக அண்மைக்காலத்தில் வெளியாகத் தொடங்கியிருக்கிறது.

புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் நல்லாட்சியில் ” எது நடந்ததோ… அது நன்றாகவே… நடந்தது…” என்ற கீதையின் வாசகம் போன்று நடக்கவேண்டிய பல நல்ல விடயங்கள் நடக்காமல், இப்படி பூதங்கள் கிளம்பிக்கொண்டிருக்கின்றன.

இலங்கையில் பதுங்கு குழிகள், போர் உக்கிரமடைந்த பின்னர்தான் உருவாகின என்று சொல்லமுடியாது. வல்வெட்டித்துறையில் பல வர்த்தக விடயங்களுக்கும் இந்து சமுத்திரத்தை நம்பி வாழ்ந்த பல செல்வந்தர்களின் பெரிய வீடுகளிலும் நிலக்கீழ் இல்லங்களாக இருந்ததாக முன்னர் பேசிக்கொண்டார்கள்.

அவர்கள் அந்த சமுத்திரத்தை தமிழ்நாடு சென்று புதிய திரைப்படங்கள் பார்ப்பதற்கு மட்டுமல்ல, வேறு விடயங்களுக்கும் நம்பியிருந்தார்கள். அத்துடன் அவர்கள் வீடுகளில் அமைந்த நிலக்கீழ் இல்லங்களையும் நம்பியிருந்தார்கள்.

அதனால் அவர்களுக்கும் வருமானம். போர் இல்லாத அக்காலத்தில் அப்பகுதியிலிருந்த சுங்கத் திணைக்களத்திலிருந்தவர்களுக்கும் காவலர்களுக்கும் வருமானம்.

எத்தனை காலம்தான் கடலை நம்பி வியாபாரம் செய்வது. காலம் மாறியது. இயக்கங்கள் தலையெடுத்ததும் அந்தக்கடல் வேறு தேவைகளுக்கு பயன்பட்டது. இன்று இந்திய மீனவர்களை வேட்டையாடுவதற்கும் அவர்களின் வலைகளையும் படகுகளையும் அவர்கள் பிடிக்கும் மீன்களையும் பறித்தெடுக்க அந்தக்கடல் பலருக்கும் பயன்படுகிறது. அந்த இந்திய மீனவர்களும் தொடர்ந்து பாடம் படித்த பின்னரும், சளைக்காமல் வந்து இலங்கை மீனவர்களின் கடல்வளத்தை சுரண்டிச்செல்கின்றனர்.

இது அன்றாடச்செய்தியாகிவிட்டது.

இலங்கையில் 1977 – 1981 – 1983 காலப்பகுதிகளில், தென்னிலங்ககையில் இனக்கலவரம் வந்தபொழுது அங்கிருந்தவர்கள் – சிங்கள இனவாத சக்திகளிடமிருந்து தமது உயிரைப்பாதுகாக்க பதுங்கு குழிகள் அமைக்கவில்லை. மாறாக சிங்கள – முஸ்லிம் நண்பர்களின் வீடுகளுக்கும் கொழும்பில் சரஸ்வதி மண்டபத்திற்கும் கதிரேசன் கோயிலுக்கும் இடம்பெயர்ந்தார்கள்.

அப்படியும் முடியாதவர்கள் தாம் வாடகைக்கு இருந்த சிங்கள முஸ்லிம் இல்லங்களின் அன்பர்களினால் பாதுகாக்கப்பட்டனர்.

எப்படித்தெரியுமா….? அந்த வீடுகளின் மேல்தளத்தில் சீலிங்கிற்குள் தஞ்சம் புகுந்துகொள்ள வழிசமைத்துக்கொடுத்தனர். இரவில் வரும் சிறுநீர் உபாதைக்கும் கீழே இறங்கி வராமல், பிளாஸ்ரிக் கிண்ணங்களையும் மிளகாய்த்தூள், சரக்குத்தூள் வைக்கும் தகர டின்களையும் பாவித்தனர்.

ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா… என்றும் முடியாண்ட மன்னரும் பிடி சாம்பராகுவர் என்றும் சொல்லப்பட்டதெல்லாம் சத்தியவாக்குகள்தான்.

உயிர்பாதுகாப்பு என்று வந்துவிட்டால் சுப்பன் என்ன குப்பன் என்ன மன்னர்களும் தேசங்களின் அதிபர்களும் ஓடி ஒளிவதற்குத்தான் தோதான இடம் தேடுவார்கள். வீரபாண்டிய கட்டபொம்மனும் தன்னை பாதுகாக்க மறைந்து வாழ்ந்து காட்டிக்கொடுக்கப்பட்டு, ” தூக்குமேடை பஞ்சுமெத்தை ” என்று தெலுங்கில் சொன்னவர்தான். (அவருடைய தாய்மொழி தெலுங்கு – ஆனால் – சக்திகிருஷ்ணசாமி தனது வசனங்களினால் அவரை ஒரு தமிழனாக்கியேவிட்டார்)

ஈராக் அதிபர் சதாம் ஹ_சேய்னும் அல்கெய்தா ஒசாமா பின்லாடனும் வேலுப்பிள்ளை பிரபாகரனும் நிலக்கீழ் இல்லங்களில் பதுங்கியவர்கள்தான். அவர்களுக்கு நிலக்கீழ் இல்லம் அமைக்கும் பண பலமும் ஆட்பலமும் இருந்தது.

வன்னியிலும் போர் சூழ்ந்த இடங்களிலும் சாதாரண மத்தியதர வர்க்க மற்றும் ஏழை எளிய மக்களுக்கும் பங்கர் எனப்படும் பதுங்குகுழிகள்தான் அமைக்கமுடிந்தது.

கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கான வடக்கு நோக்கிய ரயில் சேவையை பல வருடங்கள் நிறுத்திய – ஏன் ஒரு தலைமுறையின் கண்களுக்கே தெரியாமல் மறைத்த பெருமையும் விடுதலைப்புலிகளையே சாரும். அவர்கள் அமைத்த பங்கர்களுக்கு பொதுமக்களின் வரிப்பணத்திலும் அவர்கள் அதுவரை காலமும் தமது பயணச்சீட்டுக்களுக்காக வழங்கிய பணத்திலும் அமைக்கப்பட்ட தண்டவாளங்களையும் சிலிப்பர் கட்டைகளையும் தமது பாதுகாப்பு அரண்களுக்காக பங்கர் அமைக்க பிடுங்கி எடுத்துச்சென்றனர். இது உலகறிந்த செய்தி.

தற்பொழுது இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவும் தமது பாதுகாப்பு கருதி மக்களின் வரிப்பணத்திலும் அரச நிதியிலிருந்தும் பணம் எடுத்து நிலத்துக்குகீழ் மாளிகை அமைத்துள்ள செய்தி வெளியாகியிருக்கிறது.

ஆனால், புலிகளுக்கும் இவருக்கும் இடையே சிறு வித்தியாசமும் உண்டு. புலிகள் தமக்காகவும் தமது தலைவருக்காகவும் மாத்திரம் பங்கர்களை அமைத்தனர். ஆனால், மகிந்தருக்காக அமைக்கப்பட்ட நிலக்கீழ் மாளிகை அவருக்காக மாத்திரம் அல்ல – அவருக்கு பின்னர் வரவிருக்கும் அதிபர்களுக்காகவும் என்று அவருடைய தம்பியும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள பதுங்கு குழி பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டதனால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற இராணுவப் பேச்சாளர் ஜயனாத் ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.

காங்கேசன் துறையில் முன்னைய அதிபர் காலத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான ஜனாதிபதி வந்து தங்கிச்செல்லும் மாளிகையை சில மாதங்களுக்கு முன்னர் பார்த்துவிட்டு பிரதமர் ரணிலும் வியப்புத்தெரிவித்தார்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் இருக்கிறது. குறிப்பிட்ட நிலக்கீழ் மாளிகை அலரிமாளிகையில் அமையவில்லை. அந்த மாளிகைக்கு முன்னர் கொள்ளுப்பிட்டியில் காலிமுகவீதிக்கு முன்பாகத்தான் பிரதான வாசல் இருந்தது.

ஆனால் , ராஜபக்ஷ பதவிக்கு வந்ததும் அதன் வாசல் மூடப்பட்டு பின்புறம் திறக்கப்பட்டது. அதற்கு புலிகள் கடலால் வந்து தாக்கிவிடுவார்கள் என்ற அச்சம் அக்காலப்பகுதியில் சொல்லப்பட்டது.

அந்த அலரிமாளிகையில் இலங்கையின் முதல் பிரதமர் முதல் பல பிரதமர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஸ்ரீமாவின் ஆட்சிக்காலத்தில் நடந்த அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு வருகை தந்த பாரதப்பிரதமரும் ஸ்ரீமாவின் நல்ல சிநேகிதியுமான இந்திராகாந்தி தங்குவதற்காக அந்த அலரி மாளிகையை ஒதுக்கிக்கொடுத்துவிட்டு ஸ்ரீமா தமது ரோஸ்மீட் பிளேஸ் மாளிகையில் தங்கினார்.

ஒரு பொதுத்தேர்தலில் தோற்றுவிட்ட முன்னாள் பிரதமர் தகநாயக்கா, தேர்தல் முடிவு அறிந்ததும் சபாநாயகருக்கு மாத்திரம் சொல்லிவிட்டு, தமது சின்னஞ்சிறிய சூட்கேசில் தனது சில உடைகளை மாத்திரம் எடுத்துக்கொண்டு காலி வீதியை கடந்து நடந்த வந்து இ.போ.ச. பஸ்ஸில் ஏறி புறக்கோட்டை வந்து காலி செல்லும் பஸ்ஸில் ஏறியதும் அந்த அலரிமாளிகையிலிருந்துதான்!!!!.

புதிதாக பதவிக்கு வந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தாம் அலரி மாளிகையில் தங்கப்போவதில்லை என்றார். அதுபோன்று பிரதமர் ரணிலும் தாமும் அங்கே தங்கமாட்டேன் அதனை தமது அலுவலகமாகத்தான் பயன்படுத்துவேன் என்றார்.

கடந்த ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கு தனது சோதிடர்களை நம்பி நாள் குறித்தவர் ராஜபக்ஷ. அதேசமயம், காணமல்போய்விட்ட பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலியகொடவின் மனைவி, அந்தத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் கையில் தேங்காயும் கற்பூரமும் ஏந்திச்சென்று, அலரி மாளிகையின் முன்பாக கற்பூரம் கொளுத்தி தேங்காய் உடைத்து கதறி அழுது சாபம் இட்டுவந்தார்.

அந்தச்சாபம் பலித்துத்தான் மகிந்தர் தோற்றாரா…? அல்லது மக்களின் தீர்ப்புத்தான் மகேசன் தீர்ப்பானதா…? என்பது தெரியவில்லை. ஒரு பெண்ணின் கண்ணீர் சாபம் விழுந்த மாளிகையில் குடியிருக்கத்தானா மைத்திரியும் ரணிலும் அஞ்சினார்கள்…??!! என்பதும் தெரியவில்லை.

இலங்கை அரசியல்வாதிகள் செய்வினை, சூனியம், சகுனம், சாத்திரம், மந்திரத் தாயத்து முதலானவற்றில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்கள். அவர்களில் பலருடைய கரங்களில் கட்டப்பட்டிருக்கும் மந்திரிக்கப்பட்ட கயிறுகளைப் பார்த்திருப்பீர்கள். மகிந்தர் திருப்பதி சென்று வரும்பொழுது தம்முடன் கொண்டுவந்த தங்கத்தினாலான ஒரு சிறிய யந்திரத்தைதான் தன்னை சந்திக்கவருபவர்களுடன் உரையாடும்பொழுது உருட்டிக்கொண்டிருந்தார்.

இலங்கையிலிருந்து கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் ஊடாக வெளிநாடுகளுக்கு செல்லும் அமைச்சர்களுக்கு அந்தப்பயணம் பாதுகாப்பாக அமையவேண்டும் என்பதற்காக பொளத்த பிக்குகள் சிலர் அங்கு வந்து பிரித் ஓதி நூல் கட்டுவார்கள். அவர்கள் பதியூதீன் முகம்மத் கல்வி அமைச்சராக இருந்தபொழுதும் அவரையும் விட்டுவைக்கவில்லை. இஸ்லாமியரான அவருக்கு அந்த நூலில் நம்பிக்கை இருந்ததோ இல்லையோ… ஒரு பௌத்த அரசின் நம்பிக்கைக்கு அவர் கட்டுப்பட்டிருந்தார்.

ஆனால், சிறையிலிருந்து விடுதலையாகி வந்த ரோகன விஜேவீரா , கியூபாவில் நடந்த உலக இளைஞர் மாணவர் விழாவுக்கு செல்லும்பொழுது அவ்வாறு எவரும் வந்து அவருக்கு நூல் கட்டவில்லை.

ஆனால் , சில புலனாய்வாளர்கள் சிவில் உடையில் வந்து, அங்கு என்ன நடக்கிறது…? என்பதை நூல்விட்டுப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

வேலுப்பிள்ளை பிரபாகரன், அவர்களைப்போன்று கரத்தில் நூல் கட்டியிருக்கவில்லை. அவர் கழுத்தில் மாத்திரம் சயனைற்றை கட்டியிருந்தார். ஆனால், அது அவருக்கு இறுதி நேரத்திலும் உதவவில்லை.

மகிந்தர் அமைத்திருந்த பங்கர் மாளிகையில் தொலைக்காட்சி, குளிரூட்டல் சாதனங்களும் சொகுசு மெத்தை ஆசனங்களும் எதற்கு….? என்று தற்பொழுது ஒரு அரசாங்க அமைச்சர் கேள்வி எழுப்புகிறார்.

ஆனால், வன்னியில் பிரபாகரன் இருந்த பங்கர் இல்லத்தில் என்ன என்ன இருந்தது என்பது அதனை போரின்பொழுது கைப்பற்றிய இராணுவத்துக்குத்தான் தெரியும். பின்னர் பொதுமக்களின் பார்வைக்கு அவை திறந்துவிடப்பட்டபொழுது அங்கே எந்தப்பொருளும் இல்லை. வெளவ்வால்கள் குடியிருந்தமைக்கான ஒருவகை முடைநாற்றம்தான் இருந்தது.

வன்னியிலிருந்து தங்கம், பணம் மட்டுமல்ல இரும்புகளும் அலுமினியப்பொருட்களும் எடுத்துச்செல்லப்பட்டன.
இதுவரையில் ஒரு தேசியத்தலைவரும் இலங்கை அரசியல் தலைவரும் தத்தமது பாதுகாப்பு கருதி அமைத்துக்கொண்ட பங்கர் இல்லம் – பங்கர் மாளிகை பற்றிப்பார்த்தோம்.

சாதாரண பொதுமக்கள் தமது வீட்டுக்காணிகளில் அமைத்த பங்கர்கள் பற்றிப்பார்த்தால், வேதனையும் கண்ணீரும் சுவாரஸ்யங்களும் நிறைந்த கதைகளை அறியமுடியும். அதில் மறைந்து வாழ்ந்தவர்களிடம் கேட்டும் தெரிந்துகொள்ளமுடியும்.

அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் எனது இலக்கிய நண்பர் ஒருவரும் இந்த பங்கர் பற்றி நல்லதொரு கதை எழுதியிருக்கிறார். அவருடைய பேச்சும் எழுத்தும் மிகவும் சுவாரஸ்யமானது. சமகாலத்தில் நான் அவருடைய ரசிகன் என்றும் சொல்வேன்.

அவர் இந்த பங்கர் வாழ்க்கையை வாழ்ந்திருப்பவர். அதனால் அதனை அவரால் இயல்பாக இலக்கியத்தில் சித்திரிக்க முடிந்திருக்கிறது.

ஹெலி தமது வீட்டுக்கு மேலே வட்டமிடும்பொழுது, அவரும் தாயாரும் சகோதரியும் பங்கருக்குள் செல்வார்களாம். ஆனால், அவருடைய தந்தையார் மாத்திரம் மறுப்புத்தெரிவித்து வெளியே முற்றத்தில் நிற்பாராம்.

” ஏன்…? ” என்று கேட்டால் , தமக்கு சிங்களம் தெரியும் என்பாராம். ஹெலியில் வரும் ஆயுதப்படை தன்னிடம் வைத்துள்ள தொலைநோக்கு கருவியின் மூலம் யாருக்கு சிங்களம் தெரியும் என்று அறிந்துகொள்ளும்போலும்.

அந்த இலக்கிய நண்பரின் நூல் வெளியீட்டில் உரையாற்றிய ஒரு அன்பர் பேசிய உரையை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்புத்தான் வரும்.

அவர் இந்த பங்கர்கள் பற்றி அப்படி என்னதான் சொன்னார்…?

ஊரில் தாங்கள் இளைஞர்களாக வாழ்ந்த அந்தப் போர்க்காலத்தில் வீட்டுக்கு வீடு பங்கர் அமைப்பதற்கு இளைஞர்கள்தான் முன்வருவார்களாம்.

அயல்வீட்டில் பருவக்குமரிகள் இருந்தால், அவர்கள் வீடுசென்று பங்கர் அமைக்காமல், தங்கள் வீட்டு வளவில்தான் முதலில் பங்கர் அமைப்பார்களாம். ஏனென்றால் பிரச்சினையென்று வந்துவிட்டால் அந்தக்குமருகள் முதலில் தங்கள் வீட்டு பங்கருக்குத்தான் ஓடிவருமாம்.

மரண பயத்திலும் வரும் நகைச்சுவை என்று இதனைத்தான் சொல்வது.

ஏழை எளிய மக்கள் இரவு பகலாக தோண்டி அமைத்த பங்கருக்குள் மனிதர்கள் மட்டுமல்ல பாம்புகளும் தேள் – பூச்சிகளும் தஞ்சமடைந்த கதைகள் அறிவீர்கள். அப்படி இருந்தும் அத்தகைய பங்கருக்குள்ளும் பாவிகள் குண்டுபோட்டு அவர்களை சமாதியாக்கினார்கள்.

ஒரு உயிரின் மிக மிக குறைந்தபட்ச ஆசை உயிர்வாழ்வதுதான். அந்த ஆசை மாந்தர்களுக்கு மட்டுமல்ல அனைத்து ஜீவராசிகளுக்கு பொதுவானது.

வீடுகளில் பதுங்கி வாழும் எலிகளும் தமக்கென்று வலையை அமைக்கின்றன. எறும்புகளும் கறையானும்கூட புற்றுக்கள் அமைக்கின்றன. கறையான் அமைத்த புற்றில் பாம்புகளும் குடியேறும்.

இலங்கையில் முற்கால வீடுகளில் பரண் இருந்தது. எங்கள் ஊரில் அதனை அட்டாளை என்பார்கள். உடன் தேவைக்கு அவசியமற்ற பொருட்களை அங்கே வைப்பார்கள். வயல்வெளிகளில் பரண் அமைத்து தமது வெள்ளாமையை விலங்குகளிடமிருந்து பாதுகாக்கும் விவசாயிகள், காடுகளில் மரங்களில் பரண் அமைத்து மான், மரை, முயல், பன்றி வேட்டையாடும் வேட்டைக்காரர்கள், குழிகள் அமைத்து சருகுகளையும் மரக்கிளைகளையும் அதன்மேல் வைத்து மிருகங்களை உயிரோடு பிடிப்பது பற்றியும் அறிவோம்.

வாய்பேச முடியாத ஜீவராசிகளை பிடிக்கவும் வேட்டையாடவும் ஆறு அறிவு படைத்த தந்திர மனிதன் என்னவெல்லாமோ செய்கிறான்.

விலங்குகள் மற்றும் ஜீவராசிகள் விடயத்தில் மனிதர்கள் அப்படி இருக்கும்பொழுது அதே மனிதர்களும் மனிதர்களினால் அதிகாரம் பெற்றவர்களும் தமது உயிரை எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள பங்கர் அமைப்பதும் நிலக்கீழ் மாளிகை இல்லங்கள் உருவாக்குவதும் ஆச்சரியமான விடயம் அல்ல.

சைவம் என்று ஒரு திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அதில் இடம்பெற்ற அழகே… அழகு… பாடலுக்கு தேசியவிருதும் கிடைத்தது.

அந்தப்படத்தில் வரும் ஒரு குழந்தை தனது செல்லப்பிராணியான வீட்டுச்சேவலை, குடும்பத்தினர் ஒரு நேர்த்திக்காக பலியிடத்தயாராவது அறிந்து அதனை பாதுகாக்க அந்த வீட்டின் மேல்தளத்தில் இருந்த பரணில் வைத்து காப்பாற்றுகிறாள். எவருக்கும் தெரியாமல் அதற்கு உணவும் தருகிறாள்.

அந்தக்குழந்தை இந்த உலகிற்கு சொல்லும் எளிமையான செய்தி அந்தப்படத்தை பார்த்திருப்பவர்களுக்குப் புரியும்.

ஆனால், பச்சிளம் குழந்தைகளும் பயத்துடன் பதுங்கியிருந்த பங்கர்களை துவம்சம்செய்து அந்தப்பாலகர்களின் உயிர்களையும் உறிஞ்சிய விமானங்களுக்கும் குண்டுகளை பொழிந்தவர்களுக்கும் உயிரின் பெறுமதி தெரியுமா……?

கேட்டால், ” தேசத்தின் பாதுகாப்புக்காக செய்தோம் ” என்று அதிகார வர்க்கம் சொல்லும்.

ஆனால், அதே அதிகாரவர்க்கத்திற்கும் உயிர் மீது ஆசையிருந்தது. அதிகாரவர்க்கத்த05122012127ை எதிர்த்து களத்திற்கு குழந்தைகளையும் திரட்டியவருக்கும் உயிர் மீது ஆசை இருந்தது. அதனால்தானே தத்தமக்கென மக்களின் பணத்தில் – மக்களின் உழைப்பில் பங்கர் அமைத்தார்கள்.

இன்று அவை ஊடகங்களில் காட்சிப்பொருள். நூதன சாலை.

மெய்ப்பாதுகாவலர்களும் பாதுகாப்பு அங்கியும் இன்றி வெள்ளைக்கதரை அணிந்துகொண்டு ஒரு ஊன்றுகோல் தடியுடன் வலம் வந்த மகாத்மா எங்கே…?, தான் பயணித்த வாகனத்துக்குப்பின்னால் மற்றுமொரு வாகனத்தில் சைரன் ஒலித்துக்கொண்டு வந்த பாதுகாப்பு பணியாளர்களை – நடுவீதியில் நிறுத்தி அந்தச்சத்தம் அமைதியை குலைக்கிறது திரும்பிச்சென்று உருப்படியான வேலைகளைச்செய்யுங்கள் எனச் சொன்ன கர்மவீரர் காமராஜர் எங்கே…?

இவர்களும் அரசியலில்தானே ஈடுபட்டார்கள்….???….!!!

வரலாறுகளிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டியவை அனைவருக்கும் நிறைய இருக்கிறது.

குழந்தைகள் பார்க்காத பங்கர்கள் இல்லாத உலகம் வரவேண்டும். அந்த உன்னத உலகிற்காகவாவது அதிகாரங்களில் அமர்ந்திருப்பவர்கள் மக்களுக்காக தூய சிந்தனையுடன் உழைக்கவேண்டும்.Post a Comment

Protected by WP Anti Spam