By 20 November 2007

புலிகளை ஆதரிப்பதன் மூலம் தமிழகம் வரலாற்றுத் தவறினைப் புரிந்து விடக் கூடாது! -தமிழக அரசியல்வாதிகளுக்கு ஆனந்த சங்கரி வேண்டுகோள்

இந்தியாவின் தமிழகத் தலைவர்கள்; சிலர் இலங்கை பிரச்சினை விடயத்தில் வழங்கும் ஆதரவானது எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும். அது எவ்வித தீர்வுக்கும் உதவாது. ஆகவே ஐக்கிய இலங்கைக்குள் ஒரு நியாயமான தீர்வை காண்பதற்கு தமிழ் நாட்டிலுள்ள சம்பந்தப்பட்ட சகலரும் வேற்றுமைகளை மறந்து செயற்பட வேண்டும். சர்வதேச சமூகம் பிரிவினையை முற்று முழுதாக எதிர்க்கிறது. இலங்கையின் இறைமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை இந்தியாவும் வலியுறுத்தி வருகின்றது. புலிகள் தொடர்ந்து நாட்டுப் பிரிவினைக்காக போராடுவது காலத்தை வீணடிப்பது மட்டுமல்லாது உயிர்ச்சேதங்களையும், சொத்தழிவுகளையும் ஏற்படுத்தும். இதை ஒவ்வொரு இந்திய மகனும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இயங்கும் அரசியல் கட்சிகள் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஊக்கமளிக்கக் கூடாது என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இலங்கைப் பிரச்சனை தொடர்பாக தமிழக அரசியல் வாதிகளுக்கு நேற்று விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது அரசியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மிகுந்த ஈடுபாடு கொண்ட முதிர்ந்த தமிழரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நான் இனப்பிரச்சனை பற்றியும் அதன் தீர்வு பற்றியும் நன்கு அறிவேன். கிளிநொச்சி தொகுதியை பாராளுமன்றத்தில் 14 ஆண்டுகளுக்கு மேல் பிரதிநிதித்துவப்படுத்தியதும், அதை தனிமாவட்டமாக்கியதும் நானே. எனது இல்லத்திலிருந்து 200 யார் தூரத்திலேயே புலிகளின் தலைமைக் காரியாலயம் அமைந்துள்ளது. எனது இந்த வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களை உண்மையானவைகளாகவும், அதிகாரபூர்வமானதும் கொள்வதோடு இதில் ஏதுவேனும்; பிழையாக இருப்பின் அதுபற்றி எவரும் மறுப்பு தெரிவிக்கவும் முடியும். தமிழகத்தில் சுமார் 20 மைல் இடைவெளியில் பாக்குநீரிணைக்கப்பால் வாழும் ஆறு கோடி மக்களும் இலங்கையில் தம் இனத்தைச் சேர்ந்த மக்கள் பற்றி கவலையடைவது நியாயமானதே. ஆகவேதான் இலங்கையின் இனப்பிரச்சiனைத் தீர்வில் தமிழகம் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் செயற்பட வேண்டும். அதைவிடுத்து மனக்கிளர்ச்சியையும், உணர்ச்சிகளையும் ஏற்படுத்தக் கூடிய பேச்சுக்களால் மக்களைத் தூண்டிவிடக் கூடாது. இலங்கைப் பிரச்சினை தொடர்பில் நியாயமான தீர்வை காண்பதற்கு தமிழகம் விசுவாசமாக விரும்பினால், அது இலங்கையின் கள நிலைமை பற்றி சரியாக அறிந்திருக்க வேண்டும்.

மகாத்மாகாந்தி போன்றோ அல்லது மார்ட்டின் லூதர் கிங் போன்றோ மக்கள் கொதித்தெழக்கூடிய வகையில் தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்படவில்லை. புலிகளும் அரசும் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் யுத்த களத்திலேயே அவர் இறந்தார் என்பதையும் மக்கள் உணர வேண்டும். ஒருவரையொருவர் மிஞ்சி செயற்பட வேண்டுமென்று போட்டி போட்டுக் கொண்டனர். தமக்குத் தாமே புகழ் தேடக்கூடிய நோக்கோடு புலிகள் அண்மையிலும் கூட பல முக்கியஸ்தர்களை கொல்ல முயற்சித்தனர். பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷவை இலக்கு வைத்து தற்கொலை குண்டுதாரி தாக்கியவேளை அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். ஆனால் பல பாதுகாப்பு அதிகாரிகளும், குண்டுதாரியும் அதேயிடத்தில் பலியானார்கள்.

அதேபோன்று இராணுவத்தளபதி லெப். ஜேனரல். சரத் பொன்சேகா தற்கொலை குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து நீண்டநாள் வைத்திய சிகிச்கையின் பின்னர் தப்பினார். ஆனால் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பலரும் தற்கொலை குண்டுதாரியும் அதேயிடத்தில் பலியானார்கள்.

மேற்படி தாக்குதலில் ஈடுபட்ட இந்த இரு தற்கொலையாளிகளும் அவர்களின் பெற்றோரிடமிருந்து பலாத்காரமாக பிரித்தெடுக்கப்பட்டு போரிடுமாறு மூளைச்சலவை செய்யப்பட்டு புலிகளால் பலியிடப்பட்டுள்ளனர். இவ்விரு கொலைகளுக்கும் தமிழ்ச்செல்வன் பெறுப்பேற்க வேண்டாமா என்ற கேள்வி ஒவ்வொருவரின் உள்ளத்திலும் எழ வேண்டும். தமிழ்ச்செல்வனை இலக்கு வைத்தமைக்கு ராணுவத்தை எவ்வாறு குறைகூற முடியும்.

கொலைக் குற்றம் தொடர்பில் அல்லது குறைந்தபட்சம் கொலை செய்ய தூண்டியதற்காகவேனும் தமிழ்ச்செல்வன் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு காலத்தில் ஒருபகுதி தமிழ் மக்களால் சுதந்திர போராளிகள் எனப் பாராட்டப்பட்டு பிற்காலத்தில் தமது கொடூரச் செயல்களால் மதிப்பிழந்த ஓர் இயக்கத்தின் உப தளபதியாக செயல்பட்ட ஒருவரின் மரணத்துக்கு ஆர்பாட்ட ஊர்வலங்களும், கண்டன கூட்டங்களும் நடத்துவதில் அர்த்தமேயில்லை! இது சம்பந்தமாக இலங்கைத் தமிழர்களே பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. சர்வதேச சமூகமும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

அப்பாவி மக்களை தற்கொலைக் குண்டுதாரிகளாக பலிகொடுத்து வந்த ஒருவரின் மரணத்துக்கு, தமிழக அரசியல்வாதிகள் இவ்வாறு அனுதாபம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதானது வெல்லமுடியாத யுத்தத்தை தொடர்வதற்கு புலிகளுக்கு உற்சாகம் கொடுக்கின்றதொரு செயலாகும். இவ்வாறு புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்குக் காரணம் கள நிலைமை பற்றிய போதிய விளக்கமின்மையும் புலிகளின் பொய் பிரச்சாரமுமேயாகும்.

உலக நாடுகளிலுள்ள சிலர் தமிழ்செலவனின் மரணத்தின் பின்னர,; சமாதானப் பேச்சுவார்த்தை முறிந்து விட்டது என சிலர் கூறினர். வேறு சிலர் சமாதானப் புறா கொல்லப்பட்டு விட்டதாக குறைபட்டனர். மிகக் கவலைதரும் விடயம் என்னவென்றால் 20 மைல் நீளம் கொண்ட பாக்கு நீதிணையால் மட்டும் பிரிக்கப்பட்டுள்ளவர்களுக்குக் கூட இலங்கை நாட்டின் நிலைமையைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

உலகின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் தமிழ் ஊடகங்கள், புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ் பிரதேசங்கள் பற்றிய செய்திகளை வெளியிடுவதில்லை. ஆகவே, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு வந்து புலிகளின் பிரதேசங்கள் உட்பட சகல இடங்களையும் பார்வைட வேண்டும். இலங்கை நிலைமை பற்றி அறியக்கூடிய ஒரேயொரு வழி இதுவேதான்!

தமிழ்ச்செல்வன் இறப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவமொன்றை நாம் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அநுராதபுரம் விமானத்ளம் மீதான தற்கொலைத் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டிருந்த 21 பேருடன் புகைப்படம் எடுத்துவிட்டு, அசிங்கமான அந்த பணியை தமிழ்ச்செல்வனிடம் விட்டுவிட்டு அவருடைய தலைவர் பிரபாகரன் பங்கருக்குள் ஓடி ஒளிந்து கொண்டார்.

குறித்த 21 இளஞர், யுவதிகளும் ஏனைய பல்லாயிரக் கணக்கானோரைப் போல பலவந்தமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர்களேயாவர். போரிடுமாறு மூளைச்சலவை செய்யப்பட்ட அவர்கள் உயிருடன் திரும்பி வரமாட்டார்கள் என அறிந்திருந்தும் அனுராதபுர தாக்குதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பெறுமதியான காரணங்கள் எதற்காகவும் மரணிக்காத அந்த 21 இளைஞர், யுவதிகளின் சடலங்களை பொறுப்பேற்குமாறு யாரும் கோரிக்கை விடவில்லை. நாட்டின் பல்வேறு முன்னேற்றத்திற்கு பயன்படுத்தியிருக்கக்கூடிய வீரமும் திறமையுமிக்க இந்த 21 இளைஞர் யுவதிகளையும் கொடூரமான முறையில் கொலை செய்த, அல்லது முட்டாள்தனமாகப் பலிகொடுத்த சமாதானப் புறா என்றழைக்கப்படும் தமிழ்செல்வனை சமுதாயம் மன்னிக்குமா?

இலங்கையில் அல்லது இந்தியாவில் அல்லது உலகின் எப்பகுதியிலேனும் ஒரு பெற்றோர் அல்லது புலிகளின் பிரதிநிதிகளாக கருதப்படுகின்ற 22 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் அல்லது ஒரு அரசியல் தலைவர் அல்லது புலிகளுக்கு நிதியுதவி செய்து புலிகளின் கொள்கையை ஆதரிப்பவர் தன்னுடைய ஆண் பிள்ளைகளில் ஒருவரையோ, பெண்பிள்ளைகளில் ஒருவரையோ புலிகளின் தற்கொலைப் படைக்கு கையளித்து தற்கொலைப் பணிக்காக அனுப்பி வைக்க முன்வருவாரேயானால் நான் புலிகளை சுத்தமான வீரர்கள் எனப் பாராட்டுவேன்.

ஆனால் துரதிஷ்டவசமாக எமக்கு கிடைத்த செய்திகளின் படி தமிழ்ச்செல்வன் உட்பட புலிகள் இயக்கத் தலைவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் கல்வி கற்று வருகின்றனர். இந்த வேளையில் உள்ளுர் ஏழைப் பெற்றோர்களின் பிள்ளைகள் பலாத்காரமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டு மூன்றுமாத பயிற்சியோடு யுத்த களத்துக்கு அனுப்பப்படுகின்றார்கள். அவர்களில் அநேகர் யுத்தக்களத்தில் இருந்து உயிருடன் திரும்புவதில்லை. பிள்ளைகளை புலிகள் இயக்கத்துக்கு வழங்க மறுக்கின்ற பெற்றோர்கள் கடுமையாக தண்டிக்கப்படுகின்றனர். பிள்ளைகள் சேர்வதை தடுக்க முடியாது போனவர்கள் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். புலிகள் சார்பான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் இனி, பல தடவை சிந்தித்த பின்னரே முடிவெடுப்பார்கள் என நான் நம்புகிறேன்!

முறைப்படி பார்க்கும் போது இந்த 21 இளைஞர், யுவதிகளும் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என அறிந்திருந்தும் அவர்களை பலாத்காரமாக அனுராதபுர தாக்குதலுக்கு அனுப்பி வைத்த தமிழ்ச்செல்வனும், பிரபாகரனும் கொலைக் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள். ஆனால் அப்பாவி தமிழ்நாட்டு மக்கள் அவர்களை பெரும் வீரர்களாக கணிக்கும் அளவிற்கு தப்பாக வழிநடத்தப்படுகின்றார்கள்.

இனி புலிகள் புகழ்ச்சியடைய நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் எதிலும் ஒருவரேனும் கலந்து கொள்ளமாட்டார்கள் என நம்புகிறேன். இவர்கள் தற்கொலை தாக்குதலுக்காகச் செல்வதற்கு முன்னர் பிரபாகரனுடன் படம் எடுத்துக் கொண்டமைக்கு ஆதாரம் இருப்பதால் இந்த 21 இளைஞர், யுவதிகள் எந்தவிதமாக அனுராதபுரத்தில் இறந்தார்கள் என்பதை உலகத்துக்கு பிரபாகரன் தெரியப்படுத்த வேண்டும். விடுதலைப் புலிகளின் கொடூர செயல்களின் வரலாற்றில் இவர்களுடைய குற்றங்களை நிரூபிப்பதில் முதல் தடவையாக பொருத்தமான சாட்சி கிடைத்திருக்கிறது. 21 பேருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் புலிகளின் இணையத்திலும், உள்ளுர் பத்திரிகைகளிலும் மறுநாளே பிரசுரமானது. இவைகள் இந்த 21 பேரும் கடைசியாக பிரபாகரனுடன் இருந்ததற்கு போதிய சாட்சிகளாகும்.

இத்தகையவொரு பாரதூரமான புலிகளின் மனித உரிமை மீறலுக்கு எதிராக சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்ச்செல்வன் கொலையை கண்டித்து ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்திலும் அனுதாப கூட்டத்திலும் கலந்து கொண்ட ஒவ்வொருவரையும் உங்கள் பிள்ளைகளில் ஒருவரை புலிகளின் தற்கொலை படையில் சேர்த்துக்கொள்ள தயாரா என விசனத்துடன் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். இல்லையெனில் ஏழைப் பெற்றோருடைய பிள்ளைகளின் மரணத்தின் மூலம் புலிகளுக்கு புகழ் தேடும் உரிமை உங்களுக்கு எப்படி கிடைத்து!

தமிழை தாய் மொழியாகக் கொண்ட வட மாகாணத்தில் வாழும் முஸ்லீம் மக்களை புலிகள் நடத்திய கொடூரமான முறைபற்றி தமிழ் நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க தவறின் நான் எனது கடமையிலிருந்து தவறியவனாவேன்.

பால், வயது என்ற வேறுபாடின்றி சகல முஸ்லீம் மக்களும் வட மாகாணத்திலிருந்து புலிகளால் விரட்டப்பட்டனர். அவர்களின் உடமைகள் அனைத்தையும் விட்டுவிட்டு குறுகிய நேரத்தில் வெளியேற வேண்டுமென புலிகள் கட்டளை பிறப்பித்தனர். சிறு பிள்ளைகளின் காதணிகளைக் கூட புலிகள் பறித்தெடுத்தனர்.

இவ்வாறு புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் கடந்த 17 ஆண்டு காலமாக 160 அகதி முகாம்களில் தெற்கே சிங்கள மக்களுடன் வாழ்ந்து வருகின்றனர். விடுதலைப் புலிகளின் தலையீடு இன்றி என்றோ ஒரு நாள் தமது இல்லங்களுக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கையில் இந்த மக்கள் படுபரிதாபகரமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

புலிகளின் ஆட் சேர்ப்பு நடவடிக்கைக்குப் பயந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் ஏறக்குறைய 300 தமிழ் பிள்ளைகள் மனித உரிமை ஆணைக்குழுவின் பாதுகாப்பில் வாழ்கிறார்கள். இதுதான் அரச கட்டுப்பாட்டின் கீழுள்ள யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களின் நிலையாகும். தமிழ் மக்களில் அரைவாசிப் பேருக்கும் மேலானவர்கள், தென்னிலங்கையில் சிங்கள, முஸ்லீம் மக்கள் மத்தியில் வாழ்கிறார்கள். ஆகவே சிங்கள மக்கள் தமிழ் மக்களை இன அழிப்பு செய்கின்றார்கள். என்ற புலிகளின் குற்றச்சாட்டு வெறும் கட்டுக்கதையே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத் தருவோம் என்று கூறிய புலிகளிடமிருந்து இன்று தமிழ் மக்கள் விடுதலை பெற வேண்டியதொரு பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் என்ன நடக்கிறது. புலிகள் மக்களை எவ்வாறு துன்புறுத்துகிறார்கள் என்பவற்றை தமிழ்நாட்டிலிருந்து ஒரு குழுவினர் இலங்கைக்கு வந்து புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசம் உட்பட ஏனைய பிரதேசங்களுக்கும் சென்று நேரடியாகப் பார்த்து அறிய வேண்டும்.

எவரின் மரணத்திலும் நான் மகிழ்ச்சியடைபவன் அல்ல! எதிரிக்கும் மரணம் ஏற்படுவதை விரும்பாதவன். தமிழீழம் என்பது அடைய முடியாத ஒன்று எனத் தெரிந்திருந்தும் ஆயிரக்கணக்கில் எமது இளைஞர்களை புலிகள் பலிகொடுப்பதே எனது கவலையாகும். பெற்றோர் விருப்பத்திற்கு மாறாக தமது இயக்கத்தில் பலாத்காரமாக இணைத்துக் கொள்ளப்பட்ட 20 ஆயிரம் இளைஞர், யுவதிகளை ஏற்கனவே புலிகள் பலிகொடுத்துள்ளார்கள். யுத்த களத்துக்கு அனுப்பப்படும் இளைஞர்களும், யுவதிகளும் தினமும் மரணிக்கிறார்கள். இதைவிட பல்வேறு தமிழ் இயக்கங்களைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். 70,000 இற்கு மேற்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லீம்கள் உயிரிழந்துள்ளார்கள். பல்லாயிரக்கணக்கானோர் அங்கவீனர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். 30,000 க்கும் மேற்பட்டோர் அநாதைகளாகவும், விதவைகளாகவும் வாழ்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக புலிகளின் இந்த அர்த்தமற்ற யுத்தத்தால் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

தமிழ்நாட்டு தலைவர்களையும் மக்களையும் நாம் பரிந்து கேட்பது இந்த வேண்டுகோளில் குறிப்பிட்ட அத்தனையையும் கவனத்துக்கு எடுத்து உடனடியாக யுத்தத்தை நிறுத்துமாறும், புலிகள் நாட்டுப் பிரிவினையை கைவிட்டு சமஷ்டி அடிப்படையிலோ அதற்குப் பதிலாக இந்திய முறையிலான ஓர் அமைப்பையோ ஏற்றுக்கொண்டு இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும்படி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்.

அத்தகைய தீர்வுக்கு இலங்கையரில் பெரும்பான்மையினரின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும். தமிழ்நாடு புலிகளை ஆதரிப்பதன் மூலம் ஒரு வரலாற்றுத் தவறை புரியாமல் அனைவரும் தமது அரசியல் வேறுபாடுகளை மறந்து சமாதான முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டுமென தமிழ்நாட்டு தலைவர்களையும், தமிழக மக்களையும் கேட்டுக்கொள்கிறேன் என்று ஆனந்த சங்கரி அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.Comments are closed.