இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் யார்? பிரிட்டன் பள்ளி விளக்கம்

Read Time:5 Minute, 4 Second

பிரிட்டனில் அரசு நிதியுதவியுடன் செயல்பட உள்ள இந்து பள்ளி ஒன்று, “இந்து மதத்தை பின்பற்றுபவர்கள்’ யார் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளது. மாணவர்கள் சேர்க்கையின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளில் இந்த விளக்கம் இடம் பெற்றுள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில், ஹரோ என்ற பகுதி உள்ளது. இங்கு 40 ஆயிரம் இந்துக்கள் வசித்து வருகின்றனர். பிரிட்டனில் வேறு எந்த பகுதியையும் தவிர இங்கு தான் இந்து மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் “ஐபவுண்டேசன்’ என்ற அறக்கட்டளை சார்பில் ” கிருஷ்ணா அவந்தி ஆரம்ப பள்ளி’ என்ற பள்ளி துவக்கப்பட்டுள்ளது. அரசு நிதியுதவியுடன் இது செயல்பட உள்ளது. இந்த பள்ளியின் முதல் மாணவர் சேர்க்கை 2008ம் ஆண்டு செப்டம்பரில் துவங்க உள்ளது. மொத்தம் 30 சீட்கள் மட்டுமே உள்ளன. இந்து மத நம்பிக்கை குறித்து இந்த பள்ளியில் கற்றுத் தர பிரிட்டனில் உள்ள இஸ்கான் அமைப்பு முன் வந்துள்ளது. மாணவர்கள் சேர்க்கையின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஒரு வழிகாட்டு குறிப்பை இந்த பள்ளி வெளியிட்டுள்ளது. அதில், இந்து குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள், இந்து மதத்தை பின்பற்றும் குடும்பத்தின் குழந்தைகள், இந்து மத கொள்கைகளை பெரிய அளவில் பின்பற்றும் குடும்பத்தின் குழந்தைகள் ஆகியோருக்கு சீட் கொடுக்கும்படி கூறப்பட்டுள்ளது. இந்து மதத்தை பின்பற்றும் குடும்பம், இந்து மத கொள்கைகளை பின்பற்றும் குடும்பம் ஆகிய இரண்டு விஷயங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மதத்தை பின்பற்றும் குடும்பம் : தினமும் வழிபாடு செய்ய வேண்டும். கோவில் அல்லது வீட்டில் உருவ வழிபாடு செய்ய வேண்டும். வேத கருத்துக்களை ஏற்று பின்பற்றி நடக்க வேண்டும். குறிப்பாக பகவத் கீதையை பின்பற்ற வேண்டும். வாரத்துக்கு ஒரு முறை கோவிலுக்கு சென்று பணி செய்ய வேண்டும். இரண்டு வாரத்துக்கு ஒரு முறை கோவில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும். மீன், முட்டை மற்றும் இறைச்சியை சாப்பிடக் கூடாது. மது அருந்தக் கூடாது, புகை பிடிக்கக் கூடாது, போதை பொருள் உட் கொள்ள கூடாது.

இந்து மத கொள்கைகளை பின்பற்றும் குடும்பம் : மாதத்துக்கு ஒரு முறை கோவிலுக்கு செல்ல வேண்டும். தீபாவளி, ஜன்மாஷ்டமி, ராமநவமி ஆகிய முக்கிய விழா நாட்களில் கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும், சைவ உணவை உட்கொள்ள வேண்டும். லாகிரி வஸ்துக்களை புறக்கணிக்க வேண்டும்.

இந்த விஷயங்கள் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு குறிப்புகளில் இடம் பெற்றுள்ளது. அசைவ உணவு உட்கொள்ளும் இந்து குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு பள்ளியில் இடம் கிடைக்காதா என்ற கேள்விக்கு ஐபவுண்டேசனின் செய்தி தொடர்பாளர், “வழிகாட்டு குறிப்புகளின்படி இல்லாத குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு பள்ளியில் சீட் கிடைக்காது என எந்த கட்டுப்பாடும் இல்லை. யார் யாரை சேர்க்க கூடாது என்ற அர்த்தத்தில் இந்த வழிக்காட்டு குறிப்புகள் ஏற்படுத்தப்படவில்லை’ என்று கூறினார். இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், தங்கள் பிள்ளைகளை இந்த பள்ளியில் சேர்க்கலாம். ஆனால், அதற்கான விண்ணப்பத்தில் உள்ளூர் கோவிலின் குருக்களிடம் பரிந்துரை கையெழுத்து வாங்கி வர வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அஜீத் படத்தில் தீபிகா?
Next post படமாகும் ரஜினி சொன்ன பாபா கதை!