வட இலங்கை தாக்குதல்களில் 20 பேர் பலி; புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் மீது தாக்குதல்
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் இடம்பெற்ற கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் மற்றும் விடுதலைப் புலிகளின் வானொலி நிலையத்தின் மீது, அரச படையினர் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதல் என்பவற்றில் குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் மாவீரர் தின வாரத்தின் இறுதி நாளாகிய இன்று அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முக்கியத்துவம் மிக்க தனது கொள்கை விளக்க உரையை ஆற்றுவதற்கு சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு முன்னதாக கிளிநொச்சி திருவையாறு பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் வானொலியாகிய புலிகளின் குரல் நிலையக் கட்டிடத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழி குண்டுத் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர். இந்தத் தாக்குதலின் போது விமானப்படையினர் பத்துக்கும் மேற்பட்ட குண்டுகளை அடுத்தடுத்து வீசி வானொலி நிலையத்தைத் தரைமட்டமாக்கியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.