By 30 November 2007

பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான அரசியல் கூட்டணிக்கு அனைத்து அரசியல் தலைமைகளும் முன்வரவேண்டும் –TMVP பிரதித் தலைவரும், நிருவாகப் பொறுப்பாளருமான பிள்ளையான்!!

tmvppillaiyan2.jpgtmvp.gifமுன்னொரு போதுமில்லாத நெருக்கடிகளையும், இழப்புகளையும், தோல்விகளையும் தற்போது புலிப் பயங்கரவாதம் சந்தித்து வருகின்றது. பயங்கரவாதத்திற்கு எதிராகத் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆக்கபூர்வமான, காத்திரமான பதிலடி இராணுவ நடவடிக்கைகள் தொடருமானால் இன்னும் சிறிது காலத்தில் இத்தீவு பயங்கரவாத அச்சுறுத்தலற்ற சுதந்திர தேசமாக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை. இதுவே இத்தேசத்து மூவின மக்களினதும் எதிர்பார்ப்பும் அபிலாசையும் கூட. இத்தருணத்தில் தோல்வியின் விளிம்பில் நிற்கும் பயங்கரவாதத்திற்கு மறு பிரவேசம் அளிக்கும் எத்தவறையும் எக்கட்சியும் செய்யாமல் இந்நாட்டின் ஐக்கியம், ஒருமைப்பாடு, இறைமை போன்றவற்றிற்கு குந்தகம் விளைவிக்காமல் அனைத்து இன மக்களினதும் அபிலாசைகளையும், அரசியல் உரிமைகளையும் உறுதிப்படுத்த பயங்கரவாதத்திற்கு எதிரான ஜனநாயக அரசியல் கூட்டணிக்கு அனைத்து அரசியல் தலைமைத்துவமும் முன்வர வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவரும், நிருவாகப் பொறுப்பாளருமான பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

சமூக, பொருளாதார, கல்வி அபிவிருத்திகளில் உச்சம் தொட்டு உலகிற்கே முன்மாதிரியாகத் திகள வேண்டிய இத்தேசம் அமைதியிழந்து சகோதர இனங்கள் ஒருவரையொருவர் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் துர்ப்பாக்கிய நிலைமையை உருவாக்கிய பயங்கரவாதமும், பேரினவாதமும் வெட்கித் தலைகுனிய வேண்டும். எமக்குப் பின் சுதந்திரம் பெற்ற எத்தனையோ தேசங்கள் இன்று வளர்ச்சியின் உச்சம் தொட்டு விட்டன. ஆனால் நாமோ இன்னும் எம் இரவுகளை பயத்திலும், பகல்களை ஐயத்திலும் கழிக்கின்றோம்.

பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டிய, கல்விக் கனவுகளைச் சுமந்த எத்தனையோ எம் பிரதேசத்துச் சிறார்கள் அனாதைகளாக, அகதிகளாக முகாம்களில் முடங்கிக் கிடக்கின்றனர். கணவரோடும், குடும்பத்தினரோடும் மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தவேண்டிய பல யுவதிகள், விதவைகளாக உள்ளனர். இவர்களின் கண்ணீருக்கும், அவலத்திற்கும் யார் பொறுப்பு! இந்த அழுகுரல்களின், அவலங்களின் இன்னொரு வெளிப்பாடுதான் எமது அரசியல் பிரவேசமும் கூட. எக்காலத்திலும் சாத்தியமாகாத இலட்சியங்களுக்காகவும், தனிமனித அதிகார விருப்பிற்காகவும் தொடர்ந்து எம் மக்களின் உயிர்களையும், உடமைகளையும், உரிமைமைகளையும் பணயம் வைக்க முடியாது என்பதினால்தான் ஜனநாயக அரசியலில் வலுவான நம்பிக்கை கொண்டு எம்மக்களின் இருளகற்றித் துயர் துடைக்க நாம் ஜனநாயகத்தில் பிரவேசம் செய்தோம்.

எமது வெளியேற்றம் தற்போதைய அரசாங்கத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான நிலைப்பாடு என்பன காரணமாக புலிப்பயங்கரவாதம் வீழ்ச்சிக்குச் சென்று கொண்டிருக்கின்றது. இவ்வாறான நிலையில் பயங்கரவாதத்திற்கு உயிரூட்டும் நடவடிக்கையில் சில தமிழ் அரசியல் வாதிகளும், சில அரசியல் கட்சிகளும் ஈடுபடுகின்றமை இம்மக்களுக்கு இழைக்கும் மிகப்பெரும் அநியாயமாகும். பயங்கரவாதத்தின் வலிகளையும், வேதனைகளையும் இவர்களை விட நாமும் எம்மக்களுமே அதிகம் உணர்ந்திருக்கின்றோம், அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். இவ்வலியும், வேதனையும் இனியும் ஏற்படக் கூடாது.

எமது வட-கிழக்கு மாகாணத்தில் மரண ஓலங்கள் இன்னும் ஓய்ந்துவிடவில்லை. அகதிகளும், அநாதைகளும் இன்னும் குறையவில்லை. நமக்கென்று ஒரு விடியலும், நிம்மதியும் பிறக்காதா என்ற ஏக்கத்துடனே ஒவ்வொரு நாளும் விடிகின்றது. இவ் எதிர்பார்ப்பும், ஏக்கமும் தொடர் கதையாகி விடக் கூடாது, என்பதற்காகத் தான் நாமும் அர்ப்பணிப்புகளுக்கும், தியாகங்களுக்கும் மத்தியில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

தமது அரசியல் சுயலாபங்களிற்காக பயங்கரவாதத்திற்குத் துணைபோகும் சில தமிழ் அரசியல் வாதிகளும், அமைப்புக்களும் எமது அரசியற் பயணத்தை கொச்சைப் படுத்த முனைகின்ற போதிலும் எம்மக்கள் எமக்கு அளித்து வரும் நெஞ்சுறுதியுடனான ஆதரவு எமது பாதையில் எம்மை மேலும் உந்த வைக்கின்றது.

ஆரம்ப கால பேரினவாதத்திற் கெதிராகவும், அடக்குமுறைகளுக் கெதிராகவும் தமிழ் மக்கள் விடுதலைப் பாதையில் கிளர்ந்தெளுந்தமையும், அதன் காரணமான போராட்டமும் நியாயமானது தான் அந்நியாயத் தன்மையை உணர்ந்ததினால் தான் நாமும் பல வருடங்களாக ஆயுதப் போராட்டத்தில் எம்மை இணைத்திருந்தோம்.

எமது பங்கேற்புடன் வீறு கொண்டெழுந்த ஆயுதப் போராட்டம் தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டியப பல நியாயமான அரசியல் தீர்வுகளை தட்டிக்கழித்து ஒரு தனிமனிதனுக்கான, அடைய முடியாத இலட்சியங்களுடன் கூடிய பயங்கரவாதப் போராட்டமாகப் பரிணாமித்த போது நாம் விழித்துக் கொண்டோம்.

தொடர்ந்தும் இப்பயங்கரவாதப் போராட்டத்திற்கு பக்கவாத்தியமாக இருந்தால் நாம் மட்டுமல்லாமல் எம் இனமும் கலாச்சாரமும் அழிந்து போய்விடும் என்பதை உணர்ந்து எம்மக்களுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அரசியல் தீர்வினை நோக்கிய ஜனநாயகப் பாதையில் ஐக்கியமானோம்.

இன்று தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் பயங்கரவாதப் போராட்டத்தில் இருந்து தமிழ் மக்கள் தங்களை வேறுபடுத்திக் காட்ட வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் எம் சமூகம் நிற்கின்றது. ஜனநாயகத்தின் மூச்சுக் குரலை நசுக்கும், ஜனநாயகவாதிகளைக் கொல்லும், அப்பாவிப் பொதுமக்களைப் பலியெடுக்கும் பயங்கரவாதத்தை சர்வதேச சமூகம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

உலகத்தின் போக்கும், நாடுகளுக்கிடையிலான தொடர்பும் அதிவேகமாக வளர்ந்து வருகின்றது. இக்குட்டித் தீவில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் பயங்கரவாதத் தற்கொலைத் தாக்குதல் மற்ற நாடுகளையும் சிந்திக்க வைக்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் பயங்கரவாதமானது தான் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் விம்பம் என்று தன்தவறுக்கு நியாயம் கற்பிக்க முனைகின்றது.

கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் என்னும் அங்கீகாரம் வழங்கப்பட்ட சில பயங்கரவாத முகவர்களும் உடந்தையாகச் செயற்படுகின்றனர். இதனால் அழியப் போவது அப்பாவித் தமிழ் மக்கள் தான். இப்பயங்கரவாத முகவர்கள் நாளை பிரச்சினையென்று வரும்போது வெளிநாடுகளில் அரசியல் புகலிடம் பெற்றுச் சென்று விடுவார்கள்.

எனவேதான் தமிழ் மக்களும் அவர்களின் மேல் உண்மையான பற்றுக் கொண்டவர்களும் யதார்த்தத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். பயங்கரவாதத்தில் இருந்து நாங்கள் வேறுபட்டவர்கள் என்பதை உரத்த குரலில் உலகிற்கு உரைக்க வேண்டும்.

பிரபாகரனின் இம் மாவீரர்தின உரையும் தமிழ் மக்களின் அழிவை உறுதிப் படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது. யாலவிலும், திஸ்ஸமஹாராமவிலும், வவுனியாவிலும் அப்பாவிச் சிங்களத் தொழிலாளர்களைக் கொல்வதனால் தனிஈழம் கிடைத்து விடுமா?

அப்படியென்றால் பிரபாகரன் கொன்றிருக்கும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது எத்தனையோ தனிஈழம் கிடைத்திருக்க வேண்டும். அப்பாவிச் சகோதர இன மக்கள் மீதான தாக்குதல் தமிழ் மக்களுக்கே நெருக்கடிகளையும், இன்னல்ளையும் ஏற்படுத்தும்.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைப் பிரச்சினை தீர்வுகளாகக் கிடைத்த சந்தர்ப்பங்களைப் புறங்கையால் தட்டிவிட்ட பிரபாகரன் இப்போது இந்தியாவின் மீது குற்றம் சுமத்துகின்றான். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யாத தீர்வொன்றைத் தம்மீது திணித்ததாக குற்றம் சுமத்துகின்றார். ஆனால் 1987 ஆம் ஆண்டு கைச்சாத்தான இந்திய-இலங்கை ஒப்பந்தம், அதன் பயனான வட-கிழக்கு மகாண சபைகளும் தமிழ் மக்கள் எதிர்பார்த்த பல விடயங்கள் இருந்ததை நிராகரிக்க முடியாது.

13 ஆவது அரசியல் சீர்திருத்தமும், அதனால் உருவான மாகாண ஆட்சிமுறையையும் தீர்க்கதரிசனமுள்ள, தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு தலைவராக பிரபாகரன் இருந்திருந்தால் சிறந்த முறையில் பயன்படுத்தி தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்திருக்க முடியும். ஆனால் அத்தீர்வு என்ன? என்று கூடப் பாராமல் அதன் சாதக, பாதகங்கள் என்ன என்று மக்கள் அறிவதற்கிடையில் நிராகரித்து விட்டு இந்தியாவையும் பகைமையாக்கி அம்மண்ணிலும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தி தமிழ் மக்களின் மனிதாபிமான விடுதலைப் போராட்டத்தை புதைத்து விட்டு இந்தியாவைக் குற்றம் சொல்வது என்ன நியாயம்??

இந்தியா என்ற நன்பன் இல்லாதிருந்தால் எம்மினம் என்றோ பேரினவாதத்திற்குப் பலியாகியிருக்கும். இன்றும் கூட தமிழ் மக்களுக்கான நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் உரிமையும், பலமும் இந்தியாவிற்கு உண்டு என்பதை யாரும் நிராகரிக்க முடியாது.

கிழக்கில் ஏற்பட்ட தொடர் தோல்விகளை விழுந்தும் முகத்தில் மண் படவில்லை எனும் கதையாக தந்திரோபாயமான பின்வாங்கல் என்கிறார் பிரபாகரன். மீண்டும் கிழக்கைக் கைப்பற்றுவோம் என்பதை ஜெயசிக்குறு சமருடன் ஒப்பிட்டுக் காட்டுகின்றார். ஜெயசிக்குறு சமர் காலத்திலான கள நிலவரம் வேறு, இன்றைய கிழக்கின் கள நிலவரம் வேறு அன்று கிழக்கு மக்களிடம் இருந்த மனநிலை இப்போது முற்றிலும் மாறிக் கிடக்கின்றது.

அன்று வன்னியின் மானம் காத்தவர்கள் எம் தலைவரும் நாமும் தான். அதற்குப் பிரதியுபகரமாக பிரபாகரன் எமக்குத் செய்தது தான் என்ன? வெருகல் ஆற்றங்கரையில் எம் போராளிகளைக் கொன்று குவித்ததும், எம்மக்களை அடிமைப்படுத்தியதும் தான்.

அன்றைய பிரபாகரன் இன்றும் இருந்தால் அது அவரின் தவறு! தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்கின்றேன் என்று கூறிக் கொண்டே பல ஆயிரம் தமிழ் மக்களைப் பிரபாகரன் கொன்று விட்டார். இனியும், எத்தனை ஆயிரம் பேரைத்தான் கொல்லப் போகின்றாரோ தெரியவில்லை.

எனவே, இவ்வாறான நிலைமைகளையெல்லாம் கவனத்திற் கொண்டு பயங்கரவாதத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் வடபகுதி மக்களையும் மீட்டெடுப்பதற்காகவும், தமிழ் மக்களின் நியாயமான அரசியல் உரிமையைப் பெற்றுக் கொடுத்து இந்நாட்டில் அமைதியையும், சுபிட்சத்தையும் ஏற்படுத்த பயங்கரவாதத்திற்கெதிரான பலமான ஜனநாயக அரசியல் கூட்டணிக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பாகவும், தலைவர் கருணா அம்மான் சார்பாகவும் அழைப்பு விடுக்கிறேன். அதற்காக எப்போதும் யாரோடேனும் திறந்த மனசுடன் பேச நாம் தயாராகவே இருக்கின்றோம்.

அதேவேளை பயங்கரவாதத்திற்கெதிராக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் உறுதியான நடவடிக்கைகளை சீர்குலைக்கும் விதமாகவோ, அதற்கு களங்கம் ஏற்படும் விதமாகவோ எக்கட்சியும் செயற்படுவது சாலச்சிறந்ததல்ல எனவும் வேண்டுகின்றோம்.

பயங்கரவாதத்தின் தேவையில்லாதவிடத்து மறுமுனையில் பேரினவாதமும் இயற்கை மரணமெய்திவிடும். 1970, 1980 களைப் போல இந்நாட்களில் உலகத்தில் பேரினவாதம் ஒரு இனத்தை அளிக்கமுடியாது. அதேபோன்று இவ்வரசாங்கம் பயங்கரவாதத்திற்கெதிரான தனது உறுதியான நிலைப்பாடு போலவே அரசியல் தீர்வு விடயத்திலும் கரிசனைகளைக் கொண்டிருந்தால் பயங்கரவாதத்தை யாராலும், எப்போதும் புணர்ப்பிக்க முடியாமல் போகும்.

இவ்வேளையில் கடந்த 27.11.2007 அன்று கொழும்பில் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலும், அதேபோன்று கொழும்புக்கு அண்டிய பகுதியில் 19 அப்பாவி மக்களைப் பலிகொண்ட புலிகளின் மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதலும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டியவை. இதன் மூலம் புலிகள் நாம் ஒரு போதும் பயங்கரவாதத்தைக் கைவிடப் போவதில்லை என்பதை உரத்த தொனியில் கூற விளைகின்றனர். மட்டுமன்றி சகோதர இன மக்களிடையே பெரும் இனவன்மத்திற்கும் வித்திடுகின்றனர்.

எனவே புலிகளை இராணுவ ரீதியில் மட்டுமன்றி ஜனநாயகப் பாதையிலும் தோற்கடிக்க அனைவரும் முன்வரவேண்டும். என அழைப்பு விடுக்கின்றேன். அதேசமயம் கடந்த 27.11.2007 அன்று கிளிநொச்சிக்கு அண்மையில் நடந்ததாகக் கூறப்படும் தாக்குதலில் 07 பாடசாலைச் சிறுவர்கள் கொல்லப் பட்டமையும் கண்டனத்திற்குரியவை. எப்போதும் எச்சந்தர்ப்பத்திலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை யாரும் நியாயப்படுத்த முடியாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவரும், நிருவாகப் பொறுப்பாளருமான பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

THANKYOU For WWW.ATHIRADY.COMComments are closed.