By 1 December 2007

புலிகள் ஒருபோதும் அரசியல் தீர்வுக்கு வரமாட்டார்கள் – த. சித்தார்த்தன்

plotesithartan1.jpganiplote1.gifதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தர்மலிங்கம் சித்தர்ர்த்தன் நீண்டகால அரசியல் அனுபவமிக்கவர். புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுடன் ஏற்பட்ட கருத் முரண்பாடுகளால் அந்த இயக்கத்திலிருந்து வெளியேறியவர்களில் இவரும் ஒருவர். உமா மகேஸ்வரனுடனும் சேர்ந்து புளொட் இயக்கத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தவர். விடுதலை இயக்கங்களுக்கும் இலங்கை அரச தரப்புக்குமிடயே முதன் முதலில் நடைபெற்ற திம்பு பேச்சு வார்த்தையில் புளொட் அமைப்பின் சார்பில் கலந்து கொண்டவர். புளொட் அமைப்பின் முன்னாள் தலைவர் உமா மகேஸ்வரனின் மரணத்தையடுத்து இவர் தலைவராக நியமிக்கப்பட்டார். 1994 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு 2004 வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். இனப்பிரச்சனை தொடர்பாக சர்வதேச நாடுகளில் நடைபெறும் கருத்தரங்குகள். மாநாடுகளில் கலந்து கொண்டவர். தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ் செயற்பட்டு வரும் இவரை தினகரன் வார மஞ்சரிக்காக பேட்டி கண்டோம்.
கேள்வி:- நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமகள் எப்படியிருக்கிறது?
பதில் :- மிகவும் குழப்பகரமான சூழல் நிலவுகிறது. வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சனைகள் பற்றித்தான் கூற வேண்டும். ஒரு தீர்வு காண்பதில் தடங்கல் உள்ளது. முக்கியமாக இந்த ஒற்றையாட்சி அமைப்புக்குள்தான் தீர்வு என அரசாங்கம் நிற்பதற்குக்காரணம் கடும் போக்குடைய பேரினவாதக் கட்சிகள்தான். ஜே.வி.பி. ஹெல உருமய மாத்திரமல்லாமல் கடும் போக்குடைய சிங்கள கட்சிகள் ஒற்றையாட்சிக்குள் தீர்வு காண முடியாது என்பதை உணர மறுக்கின்றன. அதேநேரம் ஒற்றையாட்சி, சமஷ்டி என்று சொல்வதால் மட்டும் பிரச்சினை தீர்ந்து விடாது. இவர்கள் மத்தியில் உண்மையான மன மாற்றம் ஏற்பட வேண்டும். அப்போதுதான் ஒரு தீர்வை எட்ட முடியும். அந்த மன மாற்றம் இரண்டு பக்கத்திலும் இல்லை.

கேள்வி :- பேரினவாதிகள் மத்தியில் மனமாற்றம் ஏற்பட்டால் புலிகள் அதனை ஏற்றுக் கொண்டு தீர்வுக்கு முன் வருவார்களா?

பதில் :- புலிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டு வரமாட்டார்கள். எமக்கு அதில் சந்தேகம் கிடையாது ஆனால் புலிகள் ஒருபோதும் வரமாட்டார்கள் எனக் கூறிக் கொண்டு காலங்கடத்தும் தன்மையை நாம் பார்க்கின்றோம். புலிகளின் நடவடிக்கைகள் சிங்கள கடும் போக்காளர்களுக்கு இவ்விடயத்தில் பெரும் உதவியாக இருக்கின்றன. ஒரு விடயத்தை சிந்திக்க வேண்டும் தீர்வு என்பது புலிகளுக்கல்ல. தமிழ் மக்களுக்குத்தான் தீர்வு வேண்டும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சரியான தீர்வை முன்வைத்தால்தான் மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட எம்மை போன்ற கட்சிகளைப் பலப்படுத்த முடியும் இல்லாவிடால் ஒரு தீர்வு காணும் வரை புலிகள் பலமாகத்தான் இருக்கப் போகிறார்கள். புலிகளை இராணுவ ரீதியில் பலவீனப்படுத்தி விட்டுத்தான் தீர்வுக்காண வேண்டும் என்கிறார்கள். புலிகளைப் பலவீனப்படுத்துவதற்காக ஒரு தீர்வைக்காண வேண்டும் என்பதே யதார்த்தம். ஒரு குழப்பமான சூழ்நிலையைத் தான் நாங்கள் பார்க்கிறோம்.

கேள்வி :- இவ்விடயத்தில் பிரதான பெரும்பான்மைக் கட்சிகளின் நிலைப்பாடு
எப்டியிருக்கிறது. ?

பதில் :- அரசாங்கத்தைப் பொறுத்தவரை பாராளுமன்றத்தில் நிலவுகின்ற பிரச்சினைகளால் தனித்து எதையும் செய்ய முடியாது. தனிப்பெரும் கட்சியாக இல்லாமல் சிறு கட்சிகளை நம்பி அவர்களை சேர்த்து போகின்ற தன்மையில் ஒரு தீர்வு காண முடியாத நிலையையும் நாம் பார்க்கின்றோம். இதில் ஐ.தே.க யும் சுதந்திரக் கட்சியும் கருத்தொருமைப்பாட்டுக்கு வராவிட்டால் நாட்டில் நிச்சயமாக அரசியல் தீர்வு வரப்போவதில்லை. அமைதியும் ஏற்பட போவதில்லை. இரு கட்சிகளும் பெரும்பான்மை மக்களில் ஆகக் குறைந்தது. 80 வீதமான மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இக் கட்சிகளிடையே ஒரு கருத்தொருமைப்பாடு வருமாக இருந்தால் நிச்சயம் தீர்வை எட்டலாம். பண்டா- செல்வா ஒப்பந்தமென்றால் என்ன டட்லிசெல்வா ஒப்பந்தமென்றால் என்ன கடந்த கால சரித்திரங்களைப் பார்த்தால் கருத்தொருமைப்பாடு எட்டியதில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தத்தைப் பொறுத்தவரையில் அன்று ஆட்சியில் இருந்த ஜே.ஆர்;. ஜெயவர்த்தனா மூன்றிலிரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்ததாலேயே 13வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை கொண்டு வரக்கூடியதாக இருந்தது. இதற்கு இந்திய அழுத்தமும் ஒரு காரணம். இன்றைய தேர்தல் முறையின் கீழ் எக்காலத்திலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் எந்தக் கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது.

கேள்வி:- தேர்தலில் மாற்றம் கொண்டுவரப்பட்டால் சாத்தியமாகுமல்லவா?

பதில் :- அதைப் பற்றி எல்லோரும் பேசுகின்றனர். நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தல் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான தெரிவுக்கமிட்டி உருவாக்கப்பட்டது. இனி எக்காலத்திலும் எந்த அரசாக இருந்தாலென்ன சிறுபான்மை மக்களது ஆதரவில் தங்கத் தேவையில்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதில்தான் அவர்கள் அக்கறை கொண்டிருந்தனர். தற்போதிருக்கும் இம் முறை பிழையானது. இதனை மாற்ற வேண்டுமென்ற உண்மையான அக்கறையுடன் செயற்படவில்லை என்பது நன்றாகத் தெரிந்தது. தமிழ் மக்கள் விரும்பி ஒட்டு மொத்தமாக இலங்கை பிரச்சினையில் தலையிட்டு அதில் பங்கெடுத்துக் கொண்டு ஆராய்ந்த ஆதரவு வழங்குவதென்றால் இனப்பிரச்சினை தீராத நிலையில் தமிழ் மக்களுக்குப் பெரிதாக அக்கறை இருக்கப் போவதில்லை. தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எங்களுக்கு நாங்களும் இந் நாட்டில் ஒரு முழுமையான அங்கமாக செயற்படுகிறோமா என்ற கேள்வி எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கும்.

கேள்வி :- தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டாக செயற்பட போவதாக தெரிவிக்கப்படுகிறதோ?

பதில் :- இதுவரை உத்தியோகபூர்வமான கட்சியாக செயற்பட வில்லை. எனினும் பல விடயங்களில் ஒன்றாக இணைந்து செயற்பட்டு வருகின்றோம் உத்தியோகபூர்வ கட்சியாக பதிவு செய்வதற்கான வேலைகளை விரைவில் மேற்கொள்ளவுள்ளோம். அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பாக மூன்று கட்சிகளும் இணைந்தே ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தற்போதைய சூழலில் நாளாந்தம் மக்கள் படும் துயர்களைத் துடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோனம். வுடக்கு கிழக்கில் வேலையற்றிருக்கும் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை பெற்றுக்கொடுக்கும் பொருட்டு கல்வியமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். எம்மைப் பொறுத்தவரையில் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முழுமையான அழுத்தத்தை அரசாங்கத்திற்கும், சர்வதேச மட்டத்திற்கும் எடுத்துக் கூறும் அதேவேளையில் மக்களின் துயரங்களைப் போக்கக்கூடிய நடவடிக்கைகளை எடுக்கவும் தயாராக இருக்கிறோம்.

கேள்வி :- இக் கூட்டமைப்பில் ஈ.பி.டி.பி, ஈரோஸ் போன்ற கட்சிகளையும் இணைத்துக்
கொண்டு செயற்படுவீர்களா?

பதில்:- ஈரோஸ் அமைப்பு இயங்கவில்லை. ஈ.பி.டி.பி யைப் பொறுத்தவரையில் எதுவித கருத்து முரண்பாடுகளோ பிரச்சினைகளோ கிடையாது. அவர்களுடன் பேசி நல்லதொரு நிலைமையை உருவாக்கவே விரும்புகிறோம். இப்போதுள்ள முழுப் பிரச்சினைக்கும் புலிகள்தான் காரணம். வடக்கு கிழக்கில் எந்தவிதமான ஜனநாயகத்திற்கும் இடமில்லாத தன்மையை உருவாக்கும் நிலை காணப்படுகிறது. அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், இயக்கத் தலைவர்கள் உட்பட சொந்த இனத்தையே அழித்ததன் மூலம் புலிகள் என்னத்தை சாதித்திருக்கிறார்கள். தாங்கள் மட்டும்தான் இயங்க வேண்டும். இயங்குகிறோம் என்பதை நிரூபிப்பதற்காகத்தான் இந்த கொலைகள் நடந்தன. இனத்தின் விடுதலைக்காக போராடப் போவதாகப் புறப்பட்டு சொந்த இனத்தையே அழித்தது. இது என்ன போராட்டம் என்று யாருக்கும் விளங்கவில்லை. மாற்றுக் கருத்துக் கொண்ட கட்சிகள் இனியும் தனித்து நின்று செயற்படாமல் ஓரணியில் திரள வேண்டும்.

கேள்வி :- பேரினவாதிகளுடன் இனி பேசிப் பயனில்லையென சில தமிழ் தலைவர்கள்
கூறுகின்றனர். இது பற்றி உங்களது அபிப்பிராயமென்ன?

பதில் :- நாம் விரும்புகிறோமோ இல்லையோ சிங்களத் தரப்புடன் பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபடாமல் தீர்வு காண முடியாது. நாடு பிரிவதென்றால் கூட கடைசியாக எல்லைகள் தொடர்பாகவாவது பேச வேண்டியிருக்கும். ஆகவே பேச்சுவார்த்தையொன்று நிச்சயமாக இருக்க வேண்டும். சிங்களத் தரப்பை நம்புகிறோமா இல்லையா என்பதல்ல முக்கியம். நிச்சயமாக பேச வேண்டிய ஒரு தேவை இருக்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரையில் கடந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் மிகத் தெளிவாக புலிகள்தான் ஏகபிரதிநிதிகள் என்று சொல்வதற்காக மாத்திரமே போட்டியிட்டார்கள். எனவே அவர்கள் எடுக்கின்ற பாத்திரம் சரியென்றுதான நினைக்கிறேன். அவர்களின் தேவை முடிந்து விட்டது. தேர்தல் வன்னியில் எப்படி நடந்தது. செத்தவர்கள், நாட்டில் இல்லாதவர்களின் வாக்குகள் எல்லாம் போடப்பட்டன. என்பதெல்லாம் வேறு விடயம். புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து 5000 பேர் வந்தனர். ஆனால் 45 ஆயிரம் வாக்குகள் அளிக்கப்பட்டமை ஒரு சிறு உதாரணமாகும். தேர்தல் காலத்தில் புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று சொல்லி வாக்கு கேட்டதுடன் தேர்தலில் வெற்றி பெற்ற பின் புலிகள் பார்த்துக்கொள்வார்கள் என்றனர். இப்போது மக்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர். அபிவிருத்தியில் பின்னடைவு. தமி;ழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்ப் பகுதிகளுக்கு எதையும் செய்யவில்லை என்பதை இப்போது புரிந்து கொண்டிருக்கின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்வை முன்வைக்க முடியாது. ஏனெனில் புலிகள் எதைச் செய்யச்சொல்கிறார்களோ அதை மட்டுமே; அவர்களால் செய்ய முடியும். ஒரு விடயத்தை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். இன்று தமிழ்த் தரப்பு தீர்வு ஒன்றை முன் வைக்க வேண்டிய தேவையில்லை. கடந்த 50 வருடமாக தமிழ் மக்களுக்கு என்ன வேண்டுமென்பதை மிகத் தெளிவாக தந்தை செல்வா தொடக்கம் இன்று வரை சிங்களத் தரப்புக்கு எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு இது நன்கு புரியும் ஆரம்ப காலங்களில் சிங்களத் தலைமைகள் பாரிய பிழைகளைச் செய்திருக்கின்றனர். சிங்களத் தரப்பை விடப் புலிகளே தமிழினத்துக்குக் கூடுதலான பாதிப்பைச் செய்துள்ளனர்.

கேள்வி :- தென்னிலங்கையில் பேரினவாதிகள் இனப்பிரச்சினையின் தீர்வுக்கு தடையாக
இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்த ஏதாவது
நடவடிக்கைகள் செய்திருக்கிறீர்களா?

பதில்:- தீர்வு காண்பதற்குத் தடையாக ஜே.வி.பி, ஹெல உருமய ஆகிய பேரினவாதக்கட்சிகளே இருக்கின்றன. அவர்களை தூக்கியெறிந்து விட்டு எதனையும் செய்ய முடியாது. எனவே அவர்களை நாம் சந்தித்துப் பேசுகிறோம். சில விடயங்களை தெளிவுற எடுத்துச் சொல்கிறோம். பேரினவாதிகள் புலிகளின் நடவடிக்கைகள் மீதே கூடிய கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் பார்ப்பது புலிகளைத் தான். அவர்களும் ஏதாவது காரணம் சொல்வதற்கு வசதியாக அமைந்து விடுகிறது. புலிகள் இருக்கும் வரையில் அதிகாரப் பகிர்வு செய்தால் அதை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தனி நாட்டுக்காக தயார் படுத்திக் கொள்வார்கள் என்ற நிலைப்பாட்டை சொல்கிறார்கள். அந்த நிலைப்பாட்டில் இருக்கும் வரையில் ஒரு தீர்வையும் எடுக்க முடியாதென நாம் தெளிவுப்படுத்தி இருக்கிறோம் எம்மோடு இறங்கிவந்து ஒன்றை பேசிவிட்டு பின்னர் பத்திரிகைகளில் வேறொன்றைச் சொல்கிறார்கள். இதனை முழுமையாக மாற்ற முடியாவிட்டாலும் சில விடயங்களை எதிர்க்காத ஒரு தன்மையை கொண்டுவர வேண்டுமென கருதுகிறோம்.

கேள்வி :- தமிழ் மக்களையும் புலிகளையும் ஒன்றுபடுத்திப் பார்க்கும் தெளிவற்ற நிலை இவர்களிடம் காணப்படுவதாக கூறுவது பற்றி என்ன கூறுகிறீர்கள்.?

பதில் :- எம்மோடு பேசும் போது தமிழ் மக்கள் வேறு, புலிகள் வேறு என தெளிவாகச் சொல்கிறார்கள். அதேநேரம் அவர்களது பொதுவான அறிக்கைகளைப் பார்க்கும் போது அதுபற்றிய தெளிவிருக்கிறதா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. ஆகவே தெளிவை ஏற்படுத்த வேண்டிய தேவை எமக்கிருக்கிறது. மகாநாயக்கர்களை மூன்று அமைப்புக்களும் ஒன்றாகச் சந்தித்திருக்கிறோம். தீர்வு காண்பதற்கு அவர்களது ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். அவர்கள் கூட மிகத்தெளிவாக இருக்கிறார்கள். தமிழ் மக்களை சகோதரத்துவத்துடன் பார்க்க வேண்டும். ஒரு தீர்வு காணப்பட வேண்டுமென்ற தெளிவு அவர்கள் மத்தியில் காணப்படுகிறது. மகாநாயக்கர்கள் மத்தியில் 25 வருடங்களுக்கு முன்பிருந்த நிலையைப் பார்க்கிலும் இப்போது எவ்வளவோ முன்னேற்றமடைந்துள்ளது. இருப்பினும் பேரினவாதிகள் கூறுவது போலவே அதிகாரப்பகிர்வு செய்தால் அதனைப் புலிகள் பயன்படுத்திக்கொண்டு தனிநாடு கோருவார்கள் எனக் கூறுகின்றனர். அதனை அவர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டிய தேவையை கருத்தில் கொண்டு நாம் செயற்படுகின்றோம். தீர்வு காணாத வரையில் புலிகளை தமிழ் மக்களிலிருந்து துப்பரவாக அந்நியப்படுத்த முடியாது. விரைவில் தீர்வைக் கொண்டு வாருங்கள் என வலியுறுத்தினோம்.

கேள்வி :- தென்பகுதி இடதுசாரிக் கட்சிகளுடனான உறவுகள் எப்படி?

பதில் :- இடதுசாரி கட்சிகளுடன் மிக நெருக்கமான தொடர்புகள் நீண்டகாலமாகவே இருந்து வருகின்றன. புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிகள் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தன. எவ்வித பிரச்சினையும் இன்றி செயற்பட்டு வருகின்றோம். 1980 களில் 700 இற்கு மேற்பட்ட சிங்களத் தோழர்கள் எமது அமைப்பில் முழு நேர அங்கத்தவர்களாக இருந்தனர். பல்வேறு அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களால் அவர்களால் பணியாற்ற முடியாதுள்ளது. எனினும் தொடர்புகளை வைத்திருக்கின்றனர்.

கேள்வி:- பேரினவாதத்துக்கு எதிரான உங்களது நடவடிக்கைகளில் ஏதாவது முன்னேற்றம்
ஏற்பட்டுள்ளதா?

பதில் :- பேரினவாதத்துக்கு எதிராக வெறுமனே அவர்கள் போடுகின்ற அதேயளவு சத்தத்திற்கு கூச்சல் போடுவதால் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு விடாது. அவர்கள் விடும் தவறுகளை வெளியில் சொல்லும் அதேநேரம் தொடர்ந்து கலந்துரையாடல்களை வைத்துக் கொண்டிருந்தால்தான் அவர்களில் சிலரை உள்வாங்க முடியும். உதாரணமாக ஜே.வி.பி யை எடுத்துக் கொண்டால் அக்கட்சியிலிருக்கும் அனைவரையும் பேரினவாதிகள் எனக் கூற முடியாது. தலைமைப் பீடத்தில் கொள்கை வகுப்பாளர்களாக இரண்டொரு பேர் இருப்பர். ஆனால் கீழ் மட்டத்தில் அநேகமானோர் மிகத் தெளிவான அறிவைக் கொண்டிருக்கிறார்கள் அதேபோல பௌத்த பிக்குகளை கொண்ட கட்சியான ஹெல உருமயவிலும் கூட சிலர் இருக்கின்றனர். சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் இனப்பிரச்சனைக்குத் தீர்வொன்றைக் காணவே விரும்புகின்றனர் என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை. நாம் பலருடன் உரையாடியதில் மிகத் தெளிவாகத் தெரிகிறது. 1994 இல் நடந்த தேர்தலில் 60 சத வீதத்திற்கு மேலான மக்கள் சந்திரிகா அம்மையாருக்கு வாக்களித்தனர் என்றால் அது நிச்சயமாக ஒரு தீர்வை நோக்கிய வாக்குகள்தான். நாங்கள் அரசியல் வாதிகள் தமிழர், சிங்களவர், புலிகள் எனப் போட்டுக் குழப்புகிறோமே தவிர மக்களைப் பொறுத்தவரையில் மிகத் தெளிவாகத்தான் இருக்கின்றனர்.

கேள்வி:- அரச சார்பற்ற நிறுவனங்ள், சர்வதேச அமைப்புக்கள், சமாதான நடவடிக்கைகளில் எவ்வாறான பங்களிப்பைச் செலுத்துகின்றன.?

பதில்:- தொண்டர் அமைப்புக்கள் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன. வடக்கு கிழக்கில் புலிகளை அனுசரித்து போகாவிட்டால் எந்த வேலையையும் செய்ய முடியாது. அதேநேரம் தவறு செய்கிறார்கள் என ஒட்டு மொத்தமாக எல்லா அமைப்புகளையும் குற்றஞ் சாட்டாமல் அவர்களின் சேவைகளையும் நாம் ஊக்குவிக்க வேண்டும். தென்னிலங்கையை பொறுத்தவரையில் தீர்வு தொடர்பான தமது பங்களிப்பை சில தொண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன. நோர்வேயை எடுத்துக் கொண்டால் புலிகள் சார்புடையது என பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். இலங்கை கண்காணிப்புக்குழுவின் நடவடிக்கைகள் புலிகள் சார்புடையது என்பதில் உண்மையிருக்கிறது. புலிகளைத் தவிர வேறு எவரினதும் முறைப்பாடுகளையும் அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. புலிகளை எப்படியாவது பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வர வேண்டுமென்ற அதீத ஆர்வத்தினால் சில விடயங்களை நோர்வே கையாண்டிருக்கலாம். நோர்வே அதிகாரிகளுடன் நீண்ட காலம் பழகியிருக்கின்றேன். தீர்வு காண வேண்டுமென்ற அக்கறையுடன் செயற்படுகின்றனர்.

கேள்வி:- புளொட் இயக்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் பற்றி கூறுவீர்களா?

பதில் :- போர்நிறுத்த ஒப்பந்தம் எம்மைக் கேட்காமலேயே கைச்சாத்திடப்பட்டது எனினும் அதற்கு ஒத்துழைப்பு தருவதாகக் கூறி ஆயுதங்களை ஒப்படைத்தோம். இனப்பிரச்சனைக்கு அன்று முதல் இன்று வரை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுக்காண வேண்டுமென்ற ஆர்வம் இருக்கிறது. நாம் ஆயுதங்களை ஒப்படைத்து நிராயுதபாணிகளாக இருந்த வேளையில்தான் பெரும்பாலான எமது உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். சம்பவம் இடம்பெறும் போதெல்லாம் பாதுகாப்பு தரப்பிடமோ அல்லது அரசாங்கத்திடமோ கூறிய போதிலும் அதனை அவர்கள் ஒரு பொருட்டாக கருதியது கிடையாது. அதேவேளை புலிகளின் உயர் மட்டத்தில் ஒருவர் கொல்லப்பட்டதற்கு ஐ.நா செயலாளர் நாயகம் கண்டனம் தெரிவித்துள்ளார். எம்மில் எவ்வளவு பேர் கொல்லப்பட்டாலும் எவரும் கண்டிப்பதில்லை ஒரு உயிராகக் கூட மதிப்பதில்லை. அரசாங்கம் எவ்வளவு தூரம் சுயநலத்துடன் செயற்படுகின்து என்பது அப்போதுதான் புரிந்தது. வடக்கு கிழக்கில் இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் மூலம் ஏனைய இயக்கங்களை முற்றாக அழித்தொழிப்பதில்தான் ஈடுபட்டார்கள். இன்று அந்த இயக்கங்கள் பலவீனமடைந்ததுடன் புலிகளும் கடுமையாக பலவீனமடைந்து விட்டனர். ஓட்டு மொத்தமாக தமிழினத்தின் பலவீனத்தையே இன்று நாம் பார்க்கிறோம். காலாகாலமாக புலிகள் இதைத்தான் செய்து வருகின்றனர். தமிழினத்தையும் மற்றும் சக்திகளையும் அழிப்பதை மிகவும் கவனமாகவும் கச்சிதமாகவும் செய்து வருகின்றனர். நாம் இப்படியே இருக்க முடியாது. வடக்கு கிழக்கில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறிது சிறிதாக செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். நிராயுதபாணிகளாக இருப்பதால் பல இடையூறுகள், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. படையினர் பாதுகாப்பு வழங்கியுள்ளனர். இதனை வைத்துக் கொண்டு அரசாங்கத்துடன் செயற்படுவதாக சிலர் கூறுகின்றனர். கிழக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். எம்மால் இயன்றளவுக்கு மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்து வருகிறோம்.

பேட்டி:- பி. வீரசிங்கம் – தினகரன் வாரமஞ்சரி- (25-11-2007)Comments are closed.