பிரபாவின் உத்தரவும் மாத்தையாவின் மீறலும்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 54) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!

Read Time:22 Minute, 52 Second

timthumb (1)வவுனியாவில் பிரச்சனை….
1985 அக்டோபர் மாதம் புலிகள் அமைப்புக்கும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை நான்கு இயக்க கூட்டமைப்புக்குள் விரிசலை ஏற்படுத்தியது.

அந்தப் பிரச்சனை ஏற்படக் காரணமாக இருந்த வவுனியாவில் இடம்பெற்ற ஒரு சம்பவம்.

வவுனியா 2ம் கட்டையில் ‘உதய அரிசி ஆலை’யில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர் ஒருவருக்கும் ஆலையின் உரிமையாளர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. பிரச்சனை கை கலப்பு நடக்குமளவுக்குச் சென்றுவிட்டது.

‘உதய அரிசி ஆலை’ உரிமையாளர்களுக்கு புலிகள் அமைப்பினரோடு தொடர்பிருந்தது. அந்தத் துணிச்சலில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினரை தாக்குமளவுக்குச் சென்றனர்.

தமது உறுப்பினரோடு ஏற்பட்ட பிரச்சனை பற்றி கேட்பதற்காக உதய அரிசி ஆலைக்கு ஒரு ஜீப் வண்டியில் சென்றனர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள்.

அவர்கள் வருவார்கள் என்று தெரிந்து காடையர்கள் சிலரை உதவிக்கு அழைத்து வைத்திருந்தனர் ஆலை உரிமையாளர்கள்.

உதய அரிசி ஆலையின் மகன் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தில் இராணுவப் பயிற்சி எடுத்தவர். பின்னர் இயக்கத்தின் அனுமதி இல்லாமல் வீட்டுக்குச் சென்று தலமறைவாக இருந்தவர்.

ஜீப்பில் சென்று ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் இறங்கியபோது அரிசி ஆலைக்காரர்கள் முந்திக் கொண்டார்கள். ஜீப்பை சுற்றிவளைத்து தடிகளாலும், இரும்புக் கம்பிகளாலும் தாக்கத் தொடங்கி விட்டார்கள்.

ஜீப் நொருங்கிப் போனது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்களுக்குக் காயம். தாக்குதல் நடத்திய கோஷ்டியில் முன்னணியில் நின்றவர் அலை உரிமையாளரின் மகன.; ஈ.பி.ஆர்.எல்.எஃப் கொடுத்த பயிற்சியை திருப்பிக் கொடுத்து விட்டார்.

மாத்தையாவின் கசப்பு

வவுனியாவுக்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப் இராணுவத் தளபதியாக இருந்தவர் றேகன்.

1984ம் ஆண்டு பாலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணி (பி.எஃப்.எல்.பி) யிடம் பயிற்சி பெற்றவர்களில் ஒருவர் றேகன்.

1985 முதல் வவுனியா ஈ.பி.ஆர்.எல்.எஃப் இராணுவத்தளபதியாக பொறுப்பேற்றார். சொந்தப் பெயர் நல்லதம்பி இன்பராசா.

வன்னிப் பிராந்தியத்திற்கான புலிகளது தளபதியாக அப்போதிருந்தவர் மாத்தையா. வவுனியாவுக்கு பொறுப்பாக இருந்த றேகன் மீது மாத்தையாவுக்கு புகைச்சல்.

பாலஸ்தீனில் பயிற்சி பெற்றவர் என்று றேகனுக்கு மதிப்பிருப்பதை மாத்தையாவால் சகிக்க முடியவில்லை.

றேகனுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்த மாத்தையாவுக்கு உதய அரிச ஆலை பிரச்சனை ஒரு வாய்ப்பாகக் கிடைத்தது.
அதனால் பிரச்சனையை பெரிதுபடுத்த பின்னணியில் நின்று தூண்டி விட்டார்கள் புலிகள் அமைப்பினர்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் மில் உரிமையாளரினால் தாக்கப்பட்ட சம்பவம் நடைபெற்று ஒரு மாதத்தின் பின்னர், உதய அரிசி ஆலைக்கு ஆயுதபாணிகளாக சௌறார்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள்.

அவர்கள் அங்கு வரப்போகும் செய்தி எப்படியோ ஆலை உரிமையாளர்களுக்குத் தெரிந்துவிட்டது. புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு செய்தி சொல்லி அனுப்பினார்கள். ஆயுதங்களோடு இரண்டு பேரை அனுப்பி வைத்தார் மாத்தையா.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் அரிசி ஆலையின் முன்பாக சென்று இறங்கியபோது, அவர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்களும் திருப்பிச் சுட்டார்கள்.

சண்டை முடிந்த போது அரிசி ஆலை உரிமையாளர் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர் ஒருவரும் பலியானார்.

கிட்டு-மாத்தையா

அப்போது ஈ.பி.ஆர்.எல்.எஃப் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலைப் படையின் பிரதம தளபதி டகளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் இருந்தார்.

யாழ் மாவட்ட புலிகளின் தளபதி கிட்டுவையும், யாழ் மாவட்ட புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திலீபனையும் சந்தித்து வவுனியா பிரச்சனை பற்றிப் பேசினார் டக்ளஸ் தேவானந்தா.

அந்தக் காலத்தில் மாத்தையாவுக்கும் கிட்டுவுக்கும் இடையில் பனிப் போர் நடந்து கொண்டிருந்தது. கிட்டுவைவிட மாத்தையா இயக்கத்தில் மூத்தவர். ஆனாலும் கிட்டு மளமளவென்று பிரபலம் பெற்றுவிட்டார்.

கிட்டு தலைமைதாங்கி நடத்திய தாக்குதல்கள் வெற்றியாக முடிந்தமையால் புலிகள் இயக்கத்திற்குள்ளும் கிட்டுவுக்கு தனிச் செல்வாக்கு ஏற்படத் தொடங்கியிருந்தது.

இந்திய அரசு வழங்கும் ஆயுதங்களை பிரபாகரன் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைப்பார்.

அவற்றில் தரமான ஆயுதங்களையும், யாழ்ப்பாணத்திற்கு என்று கூடிய எண்ணிக்கையிலும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, மீதியை ஏனைய பிராந்தியங்களுக்கு கிட்டு பகிர்ந்து கொடுத்துவிடுவார்.

அதனால் ஏனைய பிராந்தியங்களுக்கு போதிய ஆயுதங்கள் கிடைப்பதில்லை என்று மாத்தையா அணியினர் சொல்லிக் கொண்டிருந்தனர்.

யாழ்-பிராந்தியம் பூரண கட்டுப்பாட்டில் இருந்தமையால் ஏனைய பிராந்தியங்களைவிட அதிக நிதி திரட்டக்கூடிய வசதி கிட்டுவுக்கு இருந்தது.

நிதியில் ஒரு பகுதியை கேட்டுப் பார்த்தார் மாத்தையா. கிட்டு கொடுப்பதாக இல்லை. உடனே காரியத்தில் இறங்கினார் மாத்தையா.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்று பொருட்களோடு திரும்பும் யாழ்ப்பாண வர்த்தகர்களது லொறிகள் வன்னிப் பகுதியில் வைத்து மாத்தையா அணியினரால் தடுக்கப்பட்டன.

பணம் தந்தால்தான் லொறிகள் மேற்கொண்டு செல்ல முடியும் என்று கூறி விட்டார்கள்.

“நாங்கள் யாழ்ப்பாணத்தில் உங்கள் இயக்கத்திற்கு நிதி கொடுத்திருக்கிறோம்” என்று லொறி உரிமையாளர்கள் சொல்லுவார்கள்.

“அதைக் கிட்டரிடம் பேசிக் கொள்ளுங்கள். இது வன்னிப் பகுதி. பணம் தராவிட்டால் லொறியை விடமாட்டோம்” என்று சொல்லி விடுவார்கள் மாத்தையா அணியினர்.

ஒரே இயக்கத்திடம் இரண்டு பகுதிகளில் பணம் கொடுக்க வேண்டிய நிலமை லொறி உரிமையாளர்களுக்கு.

இவ்வாறு யாழ்ப்பாண பிராந்திய, வன்னிப் பிராந்திய புலிகள் அணிகளுக்கடையே திரைமறைவுப் பூசல்கள் நடந்து கொண்டிருந்தன.

இந்த நேரத்தில்தான் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்கும், புலிகள் அமைப்புக்கும் வன்னிப் பகுதியில் மோதல் வெடிக்கத் தொடங்கியிருந்தது.

பிரபாவின் உத்தரவு
வன்னிப் பிரச்சனை பற்றி டக்ளஸ் தேவானந்தா கூறிய போது “வன்னிப் பிரச்சனையை தலைவர்தான் தீர்க்க முடியும். நாம் சொன்னால் அங்கு கேட்கமாட்டார்கள். இந்தப் பிரச்சனையை சென்னையில் பேசித் தீர்ப்பதுதான் நல்லது.” என்று சொல்லி விட்டார் கிட்டு.

இது தொடர்பாக சென்னையில் இருந்த பத்மநாபாவுக்கு அறிவித்தார் டக்ளஸ் தேவானந்தா.

இதற்கிடையே, வவுனியாவில் நடந்த பிரச்சனையை வவுனியாவிலேயே தீர்த்துக் கொள்ளலாம். இன்னும், சந்தித்துப் பேச்சு நடத்தலாம் என்றும் மாத்தையாவிடமிருந்து றேகனுக்குத் தகவல் அனுப்பப்பட்டது.

பேச்சு நடத்துவதற்கு றேகன் உட்பட 16 ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் மாத்தையாவை சந்திக்கச் சென்றனர். பேச்சு நடத்தச் சென்ற உறுப்பினர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

16 பேரும் மாத்தையா அணியினரால் சுற்றிவளைக்கப்பட்டனர். ஆயுதங்கள் பறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இச் செய்தி உடனடியாக சென்னைக்கு அறிவிக்கப்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் செயலாளர் நாயகம் பத்மநாபா அதனை உடனடியாக பிரபாகரனுக்கு தெரிவித்திருந்தார்.

“ஒன்றும் யோசிக்க வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறிய பிரபா 16 பேரையும் உடனடியாக விடுவிக்குமாறு மாத்தையாவுக்கு தகவல் அனுப்பினார்.

பிரபாவின் செய்தி கிடைத்ததும் மாத்தையா தனது உறுப்பினர்களுக்கு சொன்னது இது: றேகனை தட்டிவிடுங்கள். ஏனையோரை விடுதலை செய்துவிடுங்கள்.”

றேகன் சுட்டுக் கொல்லப்பட்டார். இது நடந்தது 23.11.85இல். இச் செய்தி சென்னையிலிருந்த பிரபாகனுக்கும் அதிர்ச்சிதான்.

அதிருப்திகள்

யாழ்-பிராந்திய புலிகள் அமைப்பு இராணுவத்தளபதி கிட்டு, திலீபன் ஆகியோரும் மாத்தையாவின் நடவடிக்கையையிட்டு அதிருப்தி கொள்ளவே செய்தனர்.

அப்போது கிட்டுவுக்கும், டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் யாழ்ப்பாண பிராந்தியத்தில் நல்லுறவு நிலவியது. ஏனைய இயக்கங்களைவிட புலிகளும், ஈ.பி.ஆர்.எல்.எஃப்பும்; சென்னையிலும், யாழ்ப்பாணத்திலும் நல்ல நெருக்கமாகவே இருந்தன.

அதனைப் பயன்படுத்தி பிரச்சனையை நெளிவு சுழிவாக கையாண்டிருந்தால் முரண்பாடு முற்றாமல் தடுத்திருக்கலாம். ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்குள் காணப்பட்ட பூசல் காரணமாக பிரச்சனையை கையாள்வதில் நிதானமின்மை வெளிப்பட்டது.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பின் பிரசாரப் பணிகளில் வரதராஜப்பெருமாளுக்கு இடம் கொடுக்க ஆரம்பித்தார் பத்மநாபா.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பின் அதுவரை கால பிரசார வேலைகளை ரமேஷ், டேவிற்சன் ஆகியோர்தான் இந்தியாவில் முன்னெடுத்து வந்தனர்.

அவர்கள் இருவரும் பத்மநாபாவின் தலைமைத்துவம் தொடர்பாக விமர்சனம் எழுப்பிய உறுப்பினர்களோடு இணைந்து நின்றமையால், மெல்ல மெல்ல அவர்களை முக்கியத்துவம் குறைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் இருந்து இரகசிய வானொலி நிலையம் ஒன்றை ஆரம்பித்தது ஈ.பி.ஆர்.எல்.எஃப். அது தொடர்பாக இந்திய பிராந்திய ஈ.பி.ஆர்.எல்.எஃப் கமிட்டிக்குக் கூட விளக்கம் கொடுக்கப்படவில்லை.

வரதராஜப் பெருமாள் அப்போது இந்திய பிராந்திய கமிட்டி உறுப்பினராக இருந்தார். அவருக்குப் பொறுப்பாளராக இருந்தவர் டேவிற்சன்.

டேவிற்சனுக்குத் தெரியாமல் வரதராஜப் பெருமாளுக்கு இரகசிய வானொலி பிரசாரப் பொறுப்பை வழங்கினார் பத்மநாபா.

பாசிசக்காளி
றேகன் கொல்லப்பட்ட செய்தி அறிந்தவுடன் வரதராஜப் பெருமாள் தனது பிரசாரத் திறமையைக் காட்ட நினைத்தார்.

பாசிசக் காளி என்றொரு கவிதையை எழுதி யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்பியிருந்தார்கள். அக்கவிதையை எழுதியவர் சம-கண்ணண் அவர் யாழ்பிராந்திய கமிட்டி உறுப்பினர்.

பாசிசப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் றேகனுக்கு வீரவணக்கம் எனும் முன்னுரையோடு, அந்தக் கவிதையை தனது குரலில் வாசித்தார் வரதராஜப் பெருமாள்.

முதன் முதலில் புலிகள் அமைப்பினரை பாசிசப் புலிகள் என்று தமிழ் அமைப்பொன்று அழைக்கத் தொடங்கியது அன்றுதான். வானொலியைக் கேட்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப் இந்தியப் பிராந்திய கமிட்டி உறுப்பினர்களுக்கு அதிர்ச்சி.

புலிகள் பாசிஸ்டுகள் என்ற முடிவுக்கு நாம் வந்தால், அவர்களோடு நான்கு இயக்கக் கூட்டமைப்பில் இருக்க முடியாது. பாசிஸ்டுகளோடு ஐக்கிய முன்னணியில் இணைந்து செயற்படுவது என்பது கேலிக்குரிய அரசியல் தந்திரமாகும்.

றேகன் கொல்லப்பட்டது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய நடவடிக்கை. ஆனால், அந்த நடவடிக்கைக்காக ஒட்டு மொத்தமாகவே புலிகளை பாசிஸ்டுகள் என்று குற்றம் காட்டலாமா?

ஆம், எனில் புலிகள் எதிர்க்கப்பட வேண்டியவர்கள் என்று அர்த்தமாகிறது.

புலிகளை கூட்டமைப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும். அல்லது நாம் வெளியேற வேண்டும் என்று இந்தியக் கமிட்டியினர் வாதிட்டனர்.
பத்மநாபாவால் பதில் சொல்ல முடியவில்லை.

விரிசல்

அதேவேளையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் வானொலியில் தம்மை பாசிஸ்டுகள் என்று கூறப்பட்டதை செவிமடுத்தார் பிரபாகரன்.

தமது வானொலியில் பாசிஸ்டுகள் என்று அறிவித்துவிட்டு, கூட்டமைப்புக் கூட்டத்தில் வைத்து வன்னிப் பிரச்சனையை கிளப்பிது ஈ.பி.ஆர்.எல்.எஃப்

“றேகன் கொள்ளையடிக்கப் போனார், அதனால் மரணதண்டனை வழங்கப்பட்டது” என்று சொல்லிவிட்டார் பிரபாகரன். அத்தோடு ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்கும், புலிகளுக’கும் கூட்டமைப்பில் இருந்த நெருக்கம் விரிசலானது.

அந்த விரிசலை பயன்படுத்தத் தொடங்கினார் ஈரோஸ் பாலகுமார்.

புலிகள் அமைப்பை கூட்டமைப்புக்குள் கொண்டுவருவதற்கே அதிக விருப்பம் இல்லாதிருந்தவர் பாலகுமார்.

புலிகளுக்கு, ஈ.பி.ஆர்.எல்.எஃப்பும் நெருக்கமாக இருப்பதாகக் கூறி, ரெலோ சிறீசபாரெத்தினத்தை கைக்குள் போட்டுக் கொண்டு, புளொட் அமைப்பை கூட்டமைபுபுக்குள் கொண்டுவர திட்டமிட்டவர் பாலகுமார்.

புளொட்டையும் கூட்டமைப்புக்குள் கொண்டுவந்தால், புலிகளும், ஈ.பி.ஆர்.எல்.எஃப் பும் அடக்கிவைக்கப்படலாம் என்று தந்திரக் கணக்கு போட்டிருந்தவர் பாலகுமார்..

றேகனின் பிரச்சனையும், ஈ.பி.ஆர்.எல்.எஃப் அதனைக் கையாண்ட முறையும் இப்போது ஈரோசுக்கு வாய்ப்பாகிவிட்டது.

இரு அமைப்புக்களையும் சமரசம் செய்து, கூட்டமைப்பிற்குள் தொடர்ந்து வைத்திருக்கும் நடுநிலையாளர் பாத்திரத்தை பாலகுமார் தனது கையில் எடுத்துக் கொண்டார்.

மெல்ல, மெல்ல புலிகள் அமைப்போடு நெருங்கத் தொடங்கியது ஈரோஸ். பின் நாட்களில் ஈரோசுக்கும், புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட நெருக்கத்திற்கும், தற்போது பாலகுமார் புலிகளின் பிரமுகராக மாறியிருப்பதற்கும் ‘றேகன்’ பிரச்சனைதான் பிள்ளையார் சுழி போட்டது.

‘பாசிசக்காளி’ என்னும் கவிதையை எழுதியவர் சம-கண்ணன் என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா.

அவர் இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். புலிகள் அமைப்பினரின் போராட்டம் நியாயமானது என்று பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்.

சென்னையில் விரிசல்கள் ஏற்படத் தொடங்கியிருந்தபோதும், யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்கும், புலிகள் அமைப்புக்கும் இடையே நல்லுறவு நிலவியது.

டக்ளஸ் தேவானந்தா, கிட்டு ஆகியோரின் அணுகுமுறையே பிரச்சனைகள் ஏற்படாமல் உறவு தொடரக் காரணமாக இருந்தது.

தாக்குதல்
9.10.95 அன்று அதிகாலை வவுனியா பொலிஸ் நிலையம் தாக்குதலுக்கு உள்ளானது. பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இருந்த மின்மாற்றி முதலில் தகர்க்கப்பட்டது.

பொலிஸ் நிலையம் இருளில் மூழ்கியது. கைக்குண்டுகள், ஆர்.பி.ஜி ரக ரொக்கட் லோஞ்சர்கள் மூலம் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் தொடர்ந்தது.

பொலிஸார் பின்வாங்கிச் சென்றதால் பலத்த உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை.

கான்ஸ்டபிள் தோமஸ் (வயது 40) என்பவர் பலியானார். சிலர் காயமடைந்தனர். பொலிஸ் நிலையக் கட்டங்கள் சேதமடைந்தன.

தாக்குதல் ஒரு மணி நேரம் நீடித்தது.

இத்தாக்குதல் நடவடிக்கை ரெலோ இயக்கத்தால் மேற்கொள்ளப்பட்டது.

“யுத்த நிறுத்தம் ஒரு நாடகம்” ஸ்ண்டே இதழு ற்கு பிரபா பேட்டி

யுத்த நிறுத்தம்

இந்தியாவில் கல்கத்தாவிலிருந்து வெளிவரும் ‘ஸன்டே’ ஆங்கில வார இதழுக்கு பிரபா அளித்த பேட்டியில் இருந்து ஒரு பகுதி.

கேள்வி:- யுத்த நிறுத்தம் குறித்து உங்கள் தளபதிகளின் அபிப்பிராயம் என்ன?

பிரபா- யுத்த நிறுத்தம் என்பது ஒரு கேலிக்கூத்து. இதனுள் மறைந்து கொண்டு இலங்கை இராணுவம் எமது மக்களுக்கு எதிராக வன்செயல்களைக் கடடவிழ்த்து விடுகிறது.

இன்றைய சூழ்நிலையில் நான் நிதானமாகச் செயற்பட வேண்டியுள்ளது. யுத்த நிறுத்தம் என்பது ஒரு கேலிக்கூத்து என்பதை எமது தளபதிகள் நன்கறிவர்.

கேள்வி:- திரு. பாலசிங்கத்தின் நாடு கடத்தலின் பின்னர் தலைமறைவான நீங்கள் மீண்டும் வெளிவந்தது ஏன்?

பிரபா: பல காரணங்கள் உண்டு. நான் தலைமறைவாக இருந்தமையால் எமக்கு எதிரான தீயசக்திகள் எம்மை ஆபத்தான பயங்கரவாதிகள் என்றும், பேச்சுவார்த்தைக்கு எதிரானவர்கள் என்றும் சித்தரித்துக் காட்ட முற்பட்டன.

சில பத்திரிகைகளும் வாந்திகளைக் கிளப்பின. தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களை (தர்மலிங்கம், ஆலால சுந்தரம்) கொலை செய்த பழியையும் எம்மீது சுமத்தினர்”

பிரபா கூறியது போல, தர்மலிங்கம். ஆலாலசுந்தரம் ஆகியோரை புலிகள் கொலை செய்ததாக ரெலோவும் நசூக்காகக் கூறி வந்தது. தம்மீது சந்தேகம் வராதிருக்க ரெலோ செய்த தந்திரம் அது.

தர்மரையும், ஆலாலையும் ‘ரெலோ’ இயக்கமே கொலை செய்தது என்பதை முன்னரே குறிப்பிட்டிருந்தேன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பலராலும் வரவேற்கப்படும் தமிழ் மக்கள் பேரவை… காரணம் யாதோ?? -அரசு…!!
Next post ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ: 116 வீடுகள் எரிந்து சாம்பல்…!!