By 28 December 2015 0 Comments

தியாகத்துக்கு மரியாதை: தலையங்கம்…!!

66289c3d-490e-4c67-8b3c-cb5f2312cbe8_S_secvpfதானத்தில் சிறந்தது ரத்த தானம்!

ரத்ததானம் செய்வீர் உயிர் காப்பீர் என்று எத்தனையோ உணர்ச்சிகரமான விளம்பரங்களை பார்ப்போம்.

ஆனால் உடலில் இருந்து ரத்தத்தை கொடுப்பதா? அய்யய்யோ முடியவே முடியாது என்று தான் பலரும் ஓட்டம் பிடிக்கிறார்கள்.

தனது ரத்த சொந்தங்கள் படுக்கையில் உயிருக்கு போராடும் போது கூட அடுத்தவரிடம் ரத்தம் கேட்டு அலைபவர்கள் தான் அதிகம்.

இதற்கு காரணம் போதிய விழிப்புணர்வு இல்லை என்பது தான் உண்மை. ரத்தம் கொடுத்தால் உயிருக்கு ஆபத்து என்ற தவறான கருத்து உள்ளது.

ஆனால் ரத்த தானம் செய்வதற்கென்றே எவ்வளவோ இளைஞர்கள் இருக்கிறார்கள். பலர் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் ரத்ததானம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அவர்களை வெளியே தெரிவதுமில்லை. அவர்களை பின்பற்றி ரத்த தானம் செய்ய அவ்வளவாக யாரும் முன் வருவதுமில்லை.

ரத்த தானத்தை வலியுறுத்தி எவ்வளவோ விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்தாலும் எதிர்பார்த்த இலக்கை நம்மால் அடைய முடியவில்லை. தேவையைவிட குறைந்த அளவில் தான் ரத்ததானம் செய்கிறார்கள்.

இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக ஒரு கோடி மகப்பேறு ஆபரேஷன் உள்பட 2½ கோடி அறுவை சிகிச்சை, டயாலிசிஸ் உள்ளிட்ட நோய்களுக்கு ரத்தம் தேவைப்படுகிறது.

சராசரி தேவையில் 30 லட்சம் யூனிட் ரத்தம் தட்டுப்பாடாக உள்ளது. பொதுவாக ரத்தத்தை 35 நாட்கள் முதல் 42 நாட்களுக்கு தான் கெட்டுப்போகாமல் பாதுகாக்க முடியும். அதன்பிறகு அதை பயன்படுத்த முடியாது.

12 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்ட யார் வேண்டுமானாலும் ரத்ததானம் செய்ய முடியும். சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் இருந்தால் ரத்தம் மூலம் பரவும் என்ற தவறான கருத்தும் நிலவுகிறது. இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

ரத்ததானத்தை ஊக்குவிக்க ஒடிசா முதல்–மந்திரி நவீன்பட்நாயக் புதிய சட்டத்தையே கொண்டுவந்துள்ளார். நல்ல திட்டங்களை நிறைவேற்றி மக்களிடம் பெயர் பெற்றவர் பட்நாயக்.

அந்த வகையில் ரத்ததானத்தையும் ஊக்குவிக்க அவர் இந்தியாவில் எந்த மாநிலமும் கொண்டுவராத புதுமையான சட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

ரத்ததானம் செய்பவர்கள் அரசு பஸ்சில் இலவசமாக பயணம் செய்யலாம் என்பது தான் அந்த சட்டம்.

ஒரு தடவை ரத்ததானம் செய்தவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும். தொடர்ச்சியாக ரத்ததானம் செய்பவர்கள் உரிய முறையில் கவுரவிக்கப்பட வேண்டும்.

சுதந்திர போராட்ட வீரர்கள், முதியோர்களுக்கு சலுகை வழங்குவதைபோல் இவர்களுக்கும் சலுகை வழங்கலாம். இவர்களும் ஒரு வகையில் தியாகம் செய்பவர்கள் தான்.

தங்கள் குருதியையே கொடையாக கொடுப்பவர்கள் மிகப்பெரிய மரியாதைக்கு உரியவர்கள். தொடர்ச்சியாக ரத்ததானம் செய்து சாதனை படைத்தவர்கள் வாழ்நாள் முழுவதும் மாநிலம் முழுவதும் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.

ரத்ததானம் செய்பவர்களிடம் இந்த திட்டம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதனால் இனி பலர் ரத்ததானம் செய்ய முன்வருவார்கள்.

இயற்கை பேரிடரில் சிக்கி சென்னை தவித்தபோது ஓடோடி வந்து உதவிய இளைஞர்களின் மனிதநேய பண்பு எல்லோரையும் கவர்ந்தது.

அந்த மாதிரி இளைஞர்கள் ஆற்றும் சேவைக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தால் தான் மற்றவர்களும் அவர்கள் பணியை பின்தொடர்வார்கள்.

இப்போது ஒடிசா அரசு கொண்டு வந்துள்ள இந்த இலவச பஸ் பயண அங்கீகாரம். இன்னும் பலரை ரத்ததானம் செய்ய தூண்டுவதாக அமையும் என்று நம்பலாம்.

பொதுவாக ஒரு மாநிலத்தில் நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்படும் போது அதை பல மாநிலங்களில் பார்த்து அந்த அந்த மாநிலங்களில் செயல்படுத்தும்.

அந்த வகையில் இந்த திட்டத்தை மேலும் பல மாநிலங்கள் நிச்சயமாக பின்பற்றும். அந்த வரிசையில் தமிழகத்திலும் இந்த திட்டத்தை ஆய்வு செய்து, உடனடியாக அமுல்படுத்தினால் நல்லது.

இந்தியாவை பொறுத்தவரை மேற்கு வங்காளம், தமிழ்நாடு, மராட்டியம், குஜராத், இமாச்சல பிரதேசம், சண்டிகார் ஆகிய மாநிலங்களில் ரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த மாதிரி அரசு உற்சாகப்படுத்துவதால் எல்லா மாநிலங்களிலும் ரத்ததானம் அதிகரிக்கும் தற்போதைய நிலையில் நாடு முழுவதும் கூடுதலாக 2 சதவீதம் பேர் ரத்ததானம் செய்ய முன்வந்தால் தட்டுப்பாடு நீங்கிவிடும் என்று கூறப்படுகிறது. அந்த இலக்கை விரைவில் எட்ட முடியும்.Post a Comment

Protected by WP Anti Spam