By 28 December 2015 0 Comments

புலிகளின் தலைவர் பிரபாகரனும், மனைவியும் உயிருடன் உள்ளனரா?: போரில் தப்பிய, மூத்ததளபதி தயாமோகன் விளக்கம்.. (வீடியோவில்)

timthumb (2)புலிகளின் தலைவர் பிரபாகரனும், மனைவியும் உயிருடன் உள்ளனரா?: போரில் தப்பிய மூத்ததளபதி தயாமோகன் விளக்கம்.. (வீடியோவில்)

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மதிவதினி ஆகியோர் உயிருடன் உள்ளனரா? இல்லையா? என்பது தொடர்பாக இறுதிப் போரில் இருந்து தப்பி வெளிநாட்டில் அடைக்கலமாகியுள்ள அந்த இயக்கத்தின் மூத்த தளபதி தயாமோகன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளராக இருந்தவர் தயா மோகன். இலங்கை இறுதிப் போரின் போது தப்பி வெளிநாடு ஒன்றில் பாதுகாப்பாக இருக்கிறார்.

அவர் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறிய முக்கிய தகவல்கள்: 2009ஆம் ஆண்டு இறுதிப் போரின் போது மன்னார் மாவட்டம் மறைமாவட்ட ஆயர் ஜோசப் தகவலின்படி ஒரு லட்சத்து ஐம்பத்து ஆறு ஆயிரம் மக்கள் அங்கு பதிவில் இருந்து இப்போது இல்லாமல் இருக்கிறார்கள் என்று. அப்படிப் பார்க்கும் போது 1 லட்சத்து 56 ஆயிரம் பேர் கடைசி நேரங்களில் அந்தபோரில் இல்லாமல் போயிருக்கிறார்கள்.

எட்டப்பன் கருணா…

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எட்டப்பன் போல பிரபாகரனுக்கு ஒரு கருணா. இது வரலாற்றில் இருந்து அழிக்கப்பட முடியாத ஒன்று. ஆனால் வரலாறு இப்போது திரிக்கப்படுகின்றது. இந்த குறுகிய காலத்திலேயே திரிக்கப்படுகின்ற நிலை வருகின்ற போது, நாங்கள் அதை வெளியே வந்து சொல்ல வேண்டிய கடமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.

இலங்கையில் ஆயுதப்போராட்டம் மவுனிக்கப்பட்டு இன்று 6 வருடங்கள் நெருங்குகின்ற போது, அங்கு பத்து வயதாக இருந்த ஒரு பிள்ளைக்கு இன்று பதினாறு வயதாகிறது. இப்போது அவர்கள் வரலாறு தெரிய வேண்டியவர்கள். இந்த நேரத்தில் பிழையான வரலாறும் பிழையான தகவல்களும் கிடைத்து உண்மையான வரலாறு மறைக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பேசுகிறேன்.

அத்தனையும் காட்டிக் கொடுத்த கருணா…

ஏனையவர்கள் காட்டிக் கொடுப்பவர்கள் இருந்தார்கள். இதில் முக்கியமானவர் கருணா. நீண்டகாலமாக எங்களுடைய போராட்டத்தில் படைத்தளபதியாக இருந்து வழிநடத்தியவர்.

எங்களுடைய ராணுவ, தொழில்நுட்ப, படைபல ரகசியங்களை கணிசமாக, 90 விகிதம் தெரிந்த ஒருவர் எதிரிப்படைக்கு தகவல் கொடுக்கின்ற போது எந்த அளவு பாதிப்பு ஏற்படும் என்பது சாதாரண மக்கள் கூட புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் கருணாவின் காட்டிக் கொடுப்பு என்பது இந்தப்போராட்டத்தில் மிகப்பெரிய பங்களிப்பை செய்தது.

ஒழுக்க பிரச்சனை..

எங்களுடைய அமைப்பு ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை கொண்டது. இந்த மூன்றும் இருப்பவர்கள் தான் போராளிகளாகவும், தளபதிகளாகவும் இருந்தார்கள். இதில் குறிப்பிட்ட காலத்திற்குள் கருணாவின் சில பிரச்சனைகள், போராளி, தளபதி என்பதையும் தாண்டி ஒரு தனிமனிதனுக்கு ஏற்படுகின்ற பிரச்சனை. இந்தப்பிரச்சனை தலைவருக்கு தெரிய வந்தது.

ஒழுக்கத்தை மீறுபவர்களூக்கு ஆரம்பத்தில் பெரிய தண்டனை கொடுக்கப்பட்டது. அப்போது வளர்ச்சி பெற்ற ராணுவ காலம் என்பதால் சிறு சிறு தண்டனைகள் கொடுக்கப்பட்டன. இதுமாதிரியான ஒழுக்க மீறல்களூக்கு மிகப்பெரிய தண்டனை கொடுத்து வந்தவர் தான் கருணா.

பயந்த கருணா…

ஆகவே, தான் செய்த செயல்களூக்கு தனக்கு அப்படி ஒரு தண்டனை வழங்கப்பட்டு விடுமோ என்கிற அச்சம் அவருக்கு இருந்தது. அதன் வெளிப்பாடு தான் ஏற்பட்ட முரண்பாடு. ஆனால், கருணாவுக்கு எந்த தண்டனையையும் வழங்கும் எண்ணம் தலைவர் பிரபாகரனுக்கு இல்லை. ஆனால், இது கருணாவுக்கு புரியவில்லை.

கருணா இலங்கை அரசாங்கத்திடம் எங்களது ராணுவ ரகசியங்களை சொல்லிய பின்னரும் கருணாவை துரோகி என்று தலைவர் ஒருபோதும் எங்கேயும் சொன்னதில்லை.

கொரில்லாவுக்கு போவது சாத்தியமில்லை…

புலிகள் இயக்கம் பல பெரிய சமர்களை வென்ற இயக்கம். ஒட்டு மொத்த உலக நாடுகளும் பொறாமைப்பட்டது. புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை அதன் போர் முறை என்பது மிகவும் நுட்பமானது. ஆட்கள் குறைவு ஆனால் செயல்படும் வேகமும், முறையும் பெருத்த சேதங்களை ஏற்படுத்த கூடியது.

எமது தலைவரின் உக்திகளும் போர்த் தந்திர முறைகளும் எவராலும் கணிக்கப்பட முடியாதது. தமிழர்கள் உதவியால் முப்படைகளையும் கொண்ட ஒரு ராணுவத்தை அமைத்து, தமிழீழத்துக்கான மிகப்பெரும் சமர்களைச் செய்த ஒரு தலைவர், மீண்டும் ஒரு கொரில்லா போருக்குள் செல்வது என்பது அந்தச்சூழலில் சாத்தியமா? என்பது ராணுவ ரீதியாக ஆராய்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ராணுவத்திற்கு எந்தெந்த வழியில் எல்லாம் பொருட்கள் வருகிறதோ அதையெல்லாம் கருணா காட்டிக் கொடுத்து விட்டார். வெடிமருந்து இல்லாமல் போய் விட்டதால் அவர்கள் இந்த போரில் வென்றார்கள். மேலும், சிறு படைகளை வைத்துக் கொண்டு எப்படி பெரு சமர்களை வெல்வது என்கிற விடுதலைப்புலிகளின் யுக்திகளை சொல்லிக் கொடுத்து விட்டார் கருணா.

உயிருடன் உள்ளாரா பிரபாகரன்?..

தற்போது பிரபகாரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பது தொடர்பாக சில விசயங்களை நாங்கள் இப்போது சொல்வது என்பது சாத்தியமில்லாத விசயமாக இருக்கும். “நாட்டுக்காக இறுதிவரை மக்களோடு மக்களாக நின்று போராடுவேன். வெற்றிபெற இயலவில்லை என்றால் மாவீரர்களோடு இணைந்து விடுவேன்”. இதுதான் தலைவர் சொன்ன விசயம். இதை சிறுபிள்ளைத்தனமாக நாங்கள் பிரித்துப் பார்ப்பது என்பது நல்லது இல்லை என்பது என் கருத்து. (இதன் மூலம் “தலைவர் பிரபாகரன் மாவீரர் ஆகி விட்டார், அதாவது இறந்து விட்டார்” என்பதை ஆணித்தரமாக தெரிவிக்கிறார்.)

தலைவருடைய மூத்த மகனும் மகளும் களத்திலேயே பலியானார்கள் என்பது செய்திகளில் வந்திருக்கும். அதை மூடிமறைப்பதற்கு எதுவுமில்லை. இளைய மகன் என்ன ஆனார்? என்பதை ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள்.

தலைவரின் மனைவி விசயத்தில் என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வது தான் சாலப்பொருத்தம் என்று நான் நினைக்கிறேன். (அதாவது “தலைவர் பிரபாகரனே இறந்து விட்ட நிலையில், அவரது மனைவி எப்படி உயிருடன் இருக்க முடியும்?” என்பதையும் ஆணித்தரமாக கூறுகிறார்.) இவ்வாறு தயாமோகன் கூறினார்.Post a Comment

Protected by WP Anti Spam