தெலுங்கு திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அரசியலில் நுழைகிறார்

Read Time:4 Minute, 21 Second

chiranjeevi.jpgதெலுங்கு திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அரசியலில் நுழைந்து புதிய கட்சி ஒன்றை தொடங்க உள்ளார். பொங்கல் பண்டிகைக்கு பிறகு கட்சி தொடங்கும் முடிவு பற்றிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிரஞ்சீவி தலைமையில் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளுக்கு எதிராக இடதுசாரிகள் பங்கேற்கும் மூன்றாவது அணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு திரைப்பட உலகில் பல வெற்றிப் படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் சிரஞ்சீவி.ஏற்கனவே தெலுங்கு திரைப்பட உலகிலிருந்து பல நடிகர்கள் அரசியலில் நுழைந்துள்ளனர். அவர்களின் வரிசையில் சிரஞ்சீவியும் அரசியலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆந்திர அரசியலில் கம்மா மற்றும் ரெட்டி இனத்தை சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிரஞ்சீவி சார்ந்துள்ள கபு இனத்தை சேர்ந்தவர்கள் சிரஞ்சீவி அரசியலில் ஈடுபட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆளும் காங்கிரஸ் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சிக்கு மாற்றாக சிரஞ்சீவி தலைமையில் புதிய அணியை உருவாக்க ஆந்திராவில் உள்ள இடதுசாரி தலைவர்களும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிரஞ்சீவி தலைமையில் புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சிக்கு உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ்வாதி கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 1993ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கி என்.டி.ராமாராவ் அரசியலில் வெற்றி பெற்றது போல், சிரஞ்சீவியும் அரசியலில் ஈடுபட்டால் வெற்றி பெற முடியும் என்று அவரது ரசிகர்கள் கருதுகின்றனர்.

சிரஞ்சீவி அரசியலில் ஈடுபடுவது குறித்து கடந்த 15 ஆண்டுகளாகவே ஆந்திர அரசியலில் பேசப்பட்டு வருகிறது. எனினும் தனது அரசியல் பிரவேசம் குறித்து சிரஞ்சீவி மவுனம் சாதித்து வருகிறார்.

ஆனால் தற்போது அரசியலில் ஈடுபடுவது குறித்து சிரஞ்சீவி தனக்கு நெருக்கமானவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஏற்கனவே சிரஞ்சீவி ரத்த வங்கி மற்றும் சிரஞ்சீவி அறக்கட்டளை ஆகியவற்றை தொடங்கி பல்வேறு சமூகப் பணிகளில் சிரஞ்சீவி ஈடுபட்டு வருகிறார்.

சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசம் குறித்து தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பேரணிகள் நடத்தியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

சிரஞ்சீவி அரசியலில் ஈடுபடுவதை வரவேற்பதாக முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி கூறியுள்ளார். ஆனால் தெலுங்கு தேசம் கட்சியோ தனது முடிவை சிரஞ்சீவி வெளிப்படையாக அறிவிக்கும் வரை பொறுமை காக்கப் போவதாக கூறியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இலங்கைத்தலைநகர் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளிலிருந்து சிங்களர்களை விடுதலைப்புலிகள் தங்கள் படையில் சேர்த்து வருவதாக தகவல்கள்
Next post கணவனுக்கு அடி உதை , மனைவியை போலீசார் கைது