டாக்டருக்கு பளார் – விஜயசாந்தி அதிரடி

Read Time:5 Minute, 34 Second

vijayashanthi_070626_f3.jpgஹைதராபாத்தில் வேலைநிறுத்தம் செய்து வரும் டாக்டர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகையும், தல்லி தெலுங்கானா கட்சியின் தலைவியுமான விஜயசாந்தி, மருத்துவனை அதிகாரியை கன்னத்தில் அறைந்து பிரச்சினையை மேலும் பெரிதாக்கியுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள நிலோபர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த 2ம் தேதி இரவு ஒரு குழந்தையை சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அப்போது குழந்தைக்கு சரியான முறையில் சிகிச்சையளிக்காமல் டாக்டர்கள் தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கார்வான் தொகுதி எம்.எல்.ஏ அப்சர் கானுக்கு தகவல் போனது. அவர் தனது ஆதரவாளர்களுடன் மருத்துவமனைக்கு வந்து குழந்தைக்கு சரியாக சிகிச்சையளிக்காத டாக்டர்களை தாக்கினார். இதையடுத்து டாக்டர்கள் அனைவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். இதனால் மருத்துவமனை ஸ்தம்பித்தது. ஹைதராபாத் தவிர மேலும் சில நகரங்களிலும் டாக்டர்கள் ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர். ஹைதராபாத்தில் நடந்து வரும் ஸ்டிரைக்கால் இதுவரை 12 குழந்தைகள் நிலோபர் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பல குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏவைக் கைது செய்யும் வரை போராட்டத்தை விட மாட்டோம் என்று கூறி டாக்டர்கள் தொடர்ந்து ஸ்டிரைக்கை மேற்கொண்டு வருகின்றனர். டாக்டர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்தப் பலனும் இல்லை.

விஜயசாந்தி ஆவேசம்:

இந்த நிலையில், பலியான குழந்தைகளின் பெற்றோர்களை அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள். ஆந்திர திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டாரும், தல்லி தெலுங்கானா கட்சி தலைவருமான நடிகை விஜயசாந்தி நேற்று நிலோபர் மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் கட்சித் தொண்டர்களும் திரளாக வந்தனர்.

அங்கு ஏராளமான குழந்தைகள் சிகிச்சையின்றி தவிப்பதை பார்த்து ஆத்திரம் அடைந்த அவர், ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள் டாக்டர்களிடம் சென்று, டாக்டர் என்பவர் நோயாளியை குணப்படுத்தி உயிரை கொடுப்பவர், உயிரை எடுப்பவர் அல்ல என்று ஆவேசமாக கூறினார்.

அப்போது அங்கிருந்த மருத்துவமனை அதிகாரி (ஆர்.எம்.ஓ) விஜயசாந்தியிடம் வந்து இந்த மருத்துவமனையில் தினமும் 6 முதல் 7 குழந்தைகள் இறப்பது சகஜம் தான் என்று சொல்லியுள்ளார்.

இதை கேட்டு மேலும் ஆத்திரம் அடைந்த விஜயசாந்தி ஆர்.எம்.ஓ.வை கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அங்கிருந்து கிளம்பிய விஜயசாந்தி, ஒரு இறந்த குழந்தையை தனது கையில் எடுத்துக் கொண்டு போராட்டத்தில் குதித்தார். அப்போது அவர் கூறுகையில், டாக்டர்களுக்கு மனிதாபிமானம் குறைந்து விட்டது. பணம் சம்பாதிப்பதில் தான் குறியாக இருக்கிறார்கள். பணம் கொடுப்பவர்களுக்கு தரமான சிகிச்சை, பணம் இல்லாதவர்களுக்கு மலிவான சிகிச்சை என்ற நிலையை உருவாக்கி இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் நோயாளிகளுக்கு உயிரை கொடுப்பவர்களாக இருந்த டாக்டர்கள் தற்போது உயிரை எடுப்பவர்களாக மாறி விட்டார்கள்.

பச்சிளம் குழந்தைகள் உங்கள் கண் எதிரே மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் துடிக்க துடிக்க இறந்து போவதை உங்களால் எப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடிகிறது. இதை விட வேறு என்ன கொடுமை இருக்கிறது. இது மருத்துவத் தொழிலுக்கே பெருத்த அவமானச் செயலாகும்.

டாக்டர்கள் போராட்டத்தால் இறந்து போன குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா ரூ.7 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். இல்லாவிட்டால் பெரும் போராட்டத்தை நடத்துவேன். குழந்தைகளை இழந்து வாடும் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பங்கேற்க இந்திய தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…