By 7 December 2007

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேருக்கு தூக்கு

thu.jpgதர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் கீழ் நீதிமன்றம் 3 அதிமுகவினருக்கு வழங்கிய தூக்கு தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதே போல 25பேருக்கு வழங்கப்பட்ட 7 ஆண்டு சிறைத் தண்டனையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு சிறை தண்டனை விதித்து கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி சென்னை தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. அப்போது கல்விச்சுற்றுலா சென்ற கோவை வேளாண்மை பல்கலைக் கழக மாணவிகள் பயணம் செய்த பஸ் தர்மபுரியை அடுத்த இளக்கியம்பட்டி என்னும் இடத்திற்கு வந்தபோது, வன்முறை கும்பல் ஒன்று பஸ்சை வழி மறித்து தீ வைத்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் கோகிலவாணி, ஹேமலதா, காயத்திரி ஆகிய 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தியது. அதிமுக தர்மபுரி ஒன்றிய செயலாளர் டி.கே.ராஜேந்திரன் உள்பட 31 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடந்தபோது, 22 சாட்சிகளில் 20 பேர் பிறழ் சாட்சியம் அளித்ததால், உயிரிழந்த மாணவி கோகிலவாணியின் தந்தை வீராசாமி வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் வழக்கை சேலம் முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றியது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது 123 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வேளாண் பல்கலைக்கழக பேராசிரியைகள் அகிலா, லதா, எரிக்கப்பட்ட பஸ்சின் டிரைவர், கிளினர், பஸ்சில் பயணம் செய்த மாணவிகள் பஸ் எரிப்பு சம்பவத்தை நேரில் கண்ட பத்திரிகையாளர்கள், போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட 123 பேர் சாட்சியம் அளித்தனர்.

142 சான்று ஆவணங்கள், 14 சான்றுகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குவிசாரணையின் போதே ஆர்.செல்லக்குட்டி என்பவர் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி குற்றம்சாட்டப்பட்ட பழனிச்சாமி, மகேஷ் ஆகிய 2 பேரை தவிர மீதி 28 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி கிருஷ்ணராஜா தீர்ப்பளித்தார். அடுத்த நாளில் குற்றவாளிகளுக்கு தண்டனைகள் அறிவிக்கப்பட்டன. முக்கிய குற்றவாளிகளான நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து அவர் தீர்ப்பு வழங்கினார்.

தர்மபுரி ஒன்றிய அதிமுக செயலாளர் டி.கே.ராஜேந்திரன், தர்மபுரி நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் டி.கே.முருகேசன், மாவட்ட அவைத் தலைவர் எம்.வேலாயுதம், தவுலத் என்கிற தவுலத்பாஷா, முத்து என்கிற அறிவழகன், ரவி, வி.முருகன், ஏ.பி.முருகன், எம்.வடிவேல், சம்பத், எம்.நஞ்சன் என்கிற நஞ்சப்பன், கே. ராஜூ, மணி என்கிற டெய்லர் மணி, மாது, கண்டெக்டர் ராமன், கே. சந்திரன், சண்முகம், காவேரி மேஸ்திரி, மணி என்கிற மெம்பர் மணி, சைக்கிள் கடை மாதையன், செல்வம், செல்வராஜ், மாணிக்கம், வீரமணி, உதயகுமார் ஆகிய 25 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் முருகேசன், பெரிய கருப்பையா ஆகியோர் தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பில் கீழ் கோர்ட் வழங்கிய தீர்ப்பை அவர்கள் உறுதி செய்தனர்.

தீர்ப்பு விவரம் வருமாறு: தர்மபுரி மாவட்டத்தில் கூட்டம் நடத்த தடை செய்யப்பட்டதாக உத்தரவு பிறப்பிக்கவில்லை என்ற எதிர்தரப்பு வாதத்தை ஏற்க முடியாது. ஏற்கனவே அந்த பகுதியில் கூட்டம் நடத்த காவல்துறை தடை விதித்திருந்தது. சம்பவ தினத்தன்று இந்த தடை நீட்டிக்கப்பட்டதை அரசு தரப்பு நிரூபித்துள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் சமூக விரோத செயல்கள் நடக்கும் என்று முன்கூட்டியே எதிர்பார்த்து தடை ஆணையும் பிறப்பிக்கப்பட்டதை அரசு தரப்பு நிரூபித்துள்ளது. பஸ்சின் டிரைவர், கிளீனர் மற்றும் மாணவிகளின் சாட்சியங்கள் எந்த நிர்பந்தத்திற்கும் உட்பட்டது அல்ல. அவர்கள் தானாக முன் வந்து கொடுத்த சாட்சியங்கள். இதில் எந்த வித சந்தேகத்திற்கும் முகாந்திரம் இல்லை.

அப்பகுதியில் அதிமுகவினர் அமைதியான முறையில் போராட்டம் நடத்தவில்லை என்பது
பத்திரிகைகளில் வந்த செய்திகள் மூலம் தெளிவாகி இருக்கிறது. இந்த சம்பவத்திற்கு முன்பாக தர்மபுரி பகுதியில் 3 அரசு பஸ்கள் எரிக்கப்பட்டுள்ளன. அதிலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 2வது எதிரி ஈடுபட்டுள்ளார். இவற்றை சந்தேகத்திற்கு இடமின்றி அரசு தரப்பு நிரூபித்துள்ளது.

தூக்குதண்டனை பெற்ற மூவரும் பாரதி புரத்தில் நடந்த சம்பவத்தில் நேரடி தொடர்புடையவர்கள் என்பதும், 2வது எதிரியான நெடுஞ்செழியன் பஸ்சின் மீது பெட்ரோலை ஊற்றினார் என்பதும், 3வது எதிரியான மாது என்கிற ரவீந்திரன் பஸ்சை கொளுத்தினார் என்பதும், 4வது எதிரியான முனியப்பன் அதனை தூண்டி விட்டார் என்பதும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இவர்களது செயலால் 3 மாணவிகள் இறந்ததுடன், 42 மாணவிகளையும், 2 கல்லூரி ஆசிரியைகளையும் கொல்ல முயற்சித்தது தெளிவாகி இருக்கிறது. மரண தண்டனை குறித்து உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் தெளிவாக கூறியுள்ளது.

மரண தண்டனைக்கு கொடூரம், கொடிய வன்மம் போன்ற காரணிகள் இருக்க வேண்டும். கொலை குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அளிக்கும் வழக்கத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த குற்றத்தை பொருத்தவரை மற்றவர்களின் சாட்சியத்தைவிட, ஆசிரியைகள் அளித்த சாட்சியங்கள் மிக தெளிவாக உள்ளன. இதனை மனதில் வைத்தும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை வைத்தும் பார்க்கும் போது இந்த குற்றம் மிகவும் கொடூரமானது. மரண தண்டனைக்கு உகந்தது என்று உயர்நீதிமன்றம் கருதுகிறது.

தேவையற்ற அனுதாபம் காட்டுவதும், தேவைக்கு குறைவான தண்டனை வழங்குவதும் நீதிமன்ற முறையை காயப்படுத்தி விடும். இந்த வழக்கை பொருத்தவரை கீழ் நீதிமன்றம் மிகச்சரியாக தண்டனை வழங்கியுள்ளதாக இந்த நீதிமன்றம் கருதுகிறது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை குறைக்க போராட எவ்வளவு உரிமை உள்ளதோ, அதே அளவு உரிமை பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை பெற்றுத்தரவும் உள்ளது.

இந்த சம்பவம் மிகவும் கொடூரமானது மட்டுமல்லாமல், திட்டமிட்ட வன்மம் மிகுந்த செயலாகும். இந்த குற்றங்கள் தெரிந்தே செய்யப்பட்டுள்ளன. இதற்கு கருணை காட்ட முடியாது.

தண்டனையை குறைப்பதால் குற்றவாளிகள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. ஏனெனில் பஸ்சின் பின் கதவு திறக்க முடியாதது என்று அறிந்தே குற்றவாளிகள் பெட்ரோல் ஊற்றி பஸ்சை கொளுத்தி உள்ளனர்.

எனவே, இந்த வழக்கின் 3 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கோர்ட் உறுதி செய்தது. அதே போல 25 பேருக்கு விதிக்கப்பட்ட தலா 7 ஆண்டு தண்டனையும் உறுதி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

சிறை தண்டனை விதிக்கப்பட்ட 25 பேர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.

அவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று கீழ் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது.

தற்போது ஏக காலத்தில் இந்த தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளதையடுத்து, அவர்கள் அதிக பட்சமாக 2 ஆண்டு சிறைதண்டனை அனுபவித்தால் போதும். இந்த மேல்முறையீட்டு வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராஜஇளங்கோ ஆஜராகி வாதாடினார்.Comments are closed.