திடுக்கிடும் தகவல் :பிரபாகரனைக் கொல்ல உத்தரவிட்டார் தீக்சித் – ராணுவ அதிகாரி

Read Time:4 Minute, 1 Second

jndixit-250_08122007.jpgவிடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை தீர்த்துக் கட்டுமாறு, இலங்கைக்கான முன்னாள் இந்தியத் தூதர் ஜே.என். தீக்சித் உத்தரவிட்டதாக, இந்திய அமைதி காக்கும் படையின் முன்னாள் தலைவர் ஹர்கிரத் சிங் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். இந்திய, இலங்கை அமைதி ஒப்பந்தத்தின் கீழ் இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு அனுப்பப்பட்டது. இப்படையின் தலைவராக இருந்தவர் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங். இவர் தற்போது பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘Intervention in Sri Lanka’ என்ற நூலை சிங் எழுதியுள்ளார். இதில், இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதி காக்கும் படையின் தளபதியாக இருந்தபோது சந்தித்த அனுபவங்களை அவர் எழுதியுள்ளார். அதில் முக்கிய விஷயமாக, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை தீர்த்துக் கட்டி விடுமாறு தன்னிடம் அப்போதைய இந்தியத் தூதர் ஜே.என்.தீக்சித் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் தான் மறுத்து விட்டதாகவும் ஹர்கிரத் சிங் கூறியுள்ளார். தீக்சித் குறித்து தான் வெளியிட்டுள்ள பரபரப்புத் தகவல் குறித்து ஹர்கிரத் சிங் கூறுகையில், அமைதி காக்கும் படையின் தலைவராக நான் இருந்தபோது, 1987ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி என்னை தீக்சித் போன் மூலம் தொடர்பு கொண்டார்.

விடுதலைப் புலிகள் அமைப்புடன், இந்திய அரசு பேச்சுவார்த்தைளை மேற்கொண்டிருந்த நேரம் அது. என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட தீக்சித், நீங்கள் பிரபாகரனை நாளை சந்தித்துப் பேசச் செல்லும்போது, அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுங்கள் என்று உத்தரவிட்டார் தீக்சித்.

ஆனால் அதை நான் உடனடியாக மறுத்து விட்டேன். இது கோழைத்தனமான, முதுகில் குத்தும் செயல் என்பதாலும், இந்திய ராணுவத்தின் பெயர் உலகளவில் கெட்டு விடும் என்பதாலும் இதை ஏற்க நான் மறுத்து விட்டேன்.

பின்னர் ராணுவ உயர் அதிகாரிகளுடன் நான் இதுகுறித்து ஆலோசித்தபோது, அவர்களும் எனது கருத்தையே பிரதிபலித்தனர் என்றார் சிங்.

தன்னைக் கொல்ல இந்தியத் தூதர் உத்தரவிட்டது குறித்து பிரபாகரனுக்குத் தெரியுமா என்று கேட்டபோது, ஒரு வேளை பின்னர் அவருக்குத் தெரிய வந்திருக்கலாம் என்று கூறியுள்ளார் சிங்.

பிரபாகரனைக் கொல்ல இந்தியத் தூதர் உத்தரவிட்டதை அறிந்துதான், பழிக்குப் பழியாக ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்கலாமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டார் சிங்.

இந்தியத் தூதராக இருந்த தீக்சித், பிரபாகரனைக் கொல்ல உத்தரவிட்டதாக, முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி வெளியிட்டுள்ள இத்தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜே.என். தீக்சித் தற்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கடத்தப்பட்ட 5 மீனவர்களை இலங்கை கடற்படை விடுவித்தது
Next post 10 மாணவர்கள் மயக்கம்