By 23 July 2006

40 மணி நேரத்திற்கு மேல் தவிப்பு 60 அடி குழிக்குள் விழுந்த சிறுவனை மீட்க போராட்டம்

India.rescueboy.jpgஇந்திய சரித்திரத்தில் குருஷேத்திரப் போர் பற்றி படித்து இருக்கிறோம். அதே குருஷேத்திரத்தில் 6 வயது சிறு வன் குழிக்குள் விழுந்து மரணத்துடன் போராடிய சம்பவம் நடந்துள்ளது. இந்திய அரியானா மாநிலம் குருஷேத்திரம் அருகே நெல்தேரி கிராமத்தில் நேற்றுமாலை 6வயது சிறுவன் பிரின்ஸ் விளையாடிக் கொண்டு இருந் தான். அப்போது தெருவில் போடப்பட்டு இருந்த 60 அடி ஆழமுள்ள குழாய் கிணற்றில் சிறுவன் தவறி உள்ளே விழுந்து விட்டான். அது குடி நீருக்காக போடப்பட்டு இருந்தது. தற்போது அதில் தண்ணீர் இல்லை.

உடனே கிராம மக்கள் பதட்டத்துடன் திரண்டனர். தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்தனர். சிறுவனை உயிருடன் மீட்க நடவடிக்கை எடுத்தனர். 60அடி ஆழ குழி என்பதால் சிறுவன் சுவாசிப்பதற்கு குழாய் மூலம் குழிக்குள் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது.

சிறுவன் விழுந்த குழியின் அகலம் மிகவும் குறைவு என்பதால் அதன் வழியாக சிறுவனை மேலே தூக்குவது கடினம் இதனால் சிறுவன் விழுந்த குழிக்கு பக்கத்தில் இருந்த கிணறுக்குள் மற்றொரு குழி தோண்டும் பணி இரவு முழுவதும் நடைபெற்றது.

இதில் தாமதம் ஏற்பட்டதால் மீட்புபணிக்கு ராணுவ என்ஜினீயர்கள் வர வழைக்கப்பட்டனர். அவர்கள் மண்தோண்டும் நவீன எந்திரங்களை கொண்டு வந்து குழி தோண்டினார்கள். சோதனை மேல் சோதனையாக இன்று காலை பலத்த மழை கொட்டியது. ராணுவ அதிகாரிகள் குடைபிடித்தபடி மீட்புபணியில் ஈடுபட்டனர்.

சிறுவன் இருக்கும் 60அடி ஆழத்துக்கு இணையாக குழி தோண்டப்பட்டதும் அதில் இருந்து சிறுவன் இருக்கும் குழிக்கு சுரங்கப்பாதை அமைத்து அதன் வழியாக சென்று சிறுவனை உயிருடன் மீட்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சிறுவன் விழுந்த குழியைச் சுற்றிலும் பெற்றோரும் ஆயிரக்கணக்கான மக்களும் சோகத்துடன் கூடி இருக்கிறார்கள். மாவட்ட உயர் அதிகாரிகளும், போலீசாரும் அங்கு முகாமிட்டு உள்ளனர்.

சிறுவன் எப்படி இருக்கிறான் என்பதை கண்காணிப்பதற்காக சிறிய வீடியோ கேமிராவை குழிக்குள் செலுத்தி டி.வி.யில் நேரடியாக போட்டுப் பார்த்தனர். சிறுவன் உயிருடன் இருப்பதை அறிந்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். என்றாலும், சிறுவனுக்கு லேசான மூச்சு திணறல் இருப்பது தெரிய வந்தது.

இரவில் படம் பிடித்தபோது சிறுவன் தூங்கிக் கொண்டு இருந்தான். காலையில் அவன் எழுந்து அந்த சிறிய குழியின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டான். அழாமல், தைரியத்துடன் இருந்தான். விபரீதம் நடந்து விட்டதை உணராமல் எந்த பயமும் இல்லாமல் அமைதியாக காணப்பட்டான்.

மேலே இருந்து மீட்பு குழுவினர் கயிறு மூலம் உணவு பொருட்களையும், குடிநீரையும் ஒவ்வொன்றாக கட்டி இறக்கினார்கள். அதை சிறுவன் வாங்கி சாப்பிட்டான். தண்ணீரையும் டப்பாவுடன் வாங்கி குடித்தான். தன் முன் டி.வி. காமிரா இருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்தான்.

சிறுவன் உயிருடன் மீட்கப்படுவானா? என இந்திய அரியானா மக்கள் மட்டுமல்லாது இந்திய நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே சிறுவன் உயிருடன் மீட்கப்பட வேண்டி இந்தியநாடு முழுவதும் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. மும்பை சித்தி விநாயகர் கோவில், பத்ரிநாத் மற்றும் டெல்லி, ஆமதாபாத் ஆகிய இடங்களில் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. சென்னையில் இருந்தும் சிறுவனை மீட்க வாழ்த்து தெரிவித்து செய்தி அனுப்பி இருந்தனர்.

சிறுவன் குழிக்குள் விழுந்த தகவல் அறிந்ததும் அரியானா முதல்-மந்திரி ஹோடா இன்று காலை குருஷேத்திரம் சென்று அங்கிருந்து நெல்தேரி கிராமத்துக்கு விரைந்தார். அங்கு சிறுவன் மீட்கப்படும் பணியை பார்வையிட்டார்.
India.rescueboy.jpgComments are closed.