மசூதியில் சானியா ஷூட்டிங்- கோபத்தில் முஸ்லீம்கள்

Read Time:4 Minute, 19 Second

டென்னிஸ் இளம் புயல் சானியா மிர்ஸா நடித்த விளம்பரப் படத்தின் ஷூட்டிங்கை, ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் நடத்தியதற்கு ஆந்திர மாநில சிறுபான்மையினர் நலத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதி 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.இந் நிலையில் இந்த மசூதியில் சானியா மிர்ஸா நடித்த விளம்பரப் படத்தின் ஷூட்டிங் நடத்தப்பட்டது. இது சிறுபான்மையினர் நலத் துறைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், இந்தத் துறையின் அனுமதியைப் பெறாமல் மெக்கா மசூதியில் ஷூட்டிங் எதையும் நடத்தக் கூடாது. மேலும் முஸ்லீம் கட்சியான மஜ்லிஸ் இ இத்தாஹதுல் முஸ்லீமின் கட்சியும் மெக்கா மசூதியில் சானியா நடித்த விளம்பரப் படத்தை எடுத்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தக் கட்சியின் எம்.எல்.ஏக்கள்தான் சமீபத்தில் தஸ்லிமா நஸ்ரின் ஹைதராபாத் வந்தபோது அவரை அடிக்கப் பாய்ந்தனர் என்பது நினைவிருக்கலாம். சானியாவின் ஷூட்டிங்கை நடத்துவதற்கு இந்தக் கட்சியும், உள்ளூர் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இருப்பினும் போலீஸ் பாதுகாப்புடன் ஷூட்டிங்கை நடத்தி முடித்தனர் விளம்பரப் பட நிறுவனத்தினர்.

இருப்பினும் சிறுபான்மையினர் நலத்துறையின் அனுமதியை வாங்காமல் ஷூட்டிங்கை நடத்தியதால் சிக்கலில் மாட்டியுள்ளனர்.

ஷூட்டிங் நடந்தபோது அதை எதிர்த்து அப்பகுதி முஸ்லீம்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் லேசான தடியடி நடத்திக் கலைத்தனர்.

இந்த ஷூட்டிங் குறித்து மசூதி ஊழியர்கள் சிலரும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். விளம்பரப் பட நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஷூக்கள் அணிந்து கொண்டு உள்ளே நுழைந்ததாகவும், மசூதி காவலாளியை தள்ளி விட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் அனுமதி பெறாமல் ஷூட்டிங் நடத்தியது குறித்து விளக்கம் அளிக்குமாறு மசூதியின் மேலாளர் மற்றும் கண்காணிப்பாளருக்கு ஹைதராபாத் மாவட்ட சிறுபான்மை நல அதிகாரி ஷேக் கரீமுல்லா கடிதம் அனுப்பியுள்ளார்.

மசூதி கண்காணிப்பாளர் காஜா நயீமுதீன் கூறுகையில், ஷூட்டிங் தொடர்பாக எனக்கு எந்தத் தகவலும் தரப்படவில்லை. ஷூட்டிங் ஆரம்பித்து 2 மணி நேரம் கழித்துத்தான் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. ஆனால் அதற்குள் ஷூட்டிங்கை நடத்தி முடித்து விட்டனர்.

மசூதி வளாகத்திற்குள் எந்தவிதமான படப்பிடிப்புக்கும் அனுமதி கிடையாது. அப்படி இருக்கையில் விளம்பரப் பட ஷூட்டிங்கை நடத்தியது தவறானது என்றார்.

ஹைதராபாத் நகரின் மையத்தில் இந்த மசூதி அமைந்துள்ளது. வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாது முக்கிய சுற்றுலாத் தலமாகவும் இது விளங்குகிறது. கடந்த மே 18ம் தேதி இங்கு குண்டுவெடிப்பு நடந்து 9 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இங்கு தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தயாரிப்பாளர் மகளை எரிக்க முயற்சி-காதலர் உயிர் ஊசல்
Next post பிரிட்டன் வேலைகளில் வெளிநாட்டினர் ஆதிக்கம் ‘அமோகம்