By 14 December 2007

குடும்ப தகராறு காரணமாக மனைவியை சுத்தியால் அடித்து கொன்று விட்டு வாலிபர் தற்கொலை வீட்டு அருகிலேயே ரெயில் முன் பாய்ந்தார்

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடும்ப தகராறு காரணமாக, மனைவியை சுத்தியால் அடித்து கொன்ற வாலிபர், பின்னர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். காதல் திருமணம் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, அபராஜா லேனில் உள்ள போஜராஜன் நகரை சேர்ந்தவர் விநாயகம் (30). கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவர், 4 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் சித்தாளாக வேலை பார்த்த அம்லு (22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்பும் இருவரும் ஒன்றாக வேலைக்கு சென்று வந்தனர். திருமணம் முடிந்து 4 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சமீப காலமாக இருவரும் சண்டை போட்டு கொண்டதாக கூறப்படுகிறது. எனினும் உடனடியாக சமாதானம் ஆகி விடுவார்கள். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருவரும் கட்டிட வேலைக்கு சென்று வந்தனர். போர்வையை போர்த்தியபடி வழக்கமாக அதிகாலையிலேயே வேலைக்கு செல்லும் அவர்கள், நேற்று முன்தினம் காலை 8 மணி ஆகியும் வேலைக்கு வரவில்லை. இதனால் புதிதாக கட்டப்படும் வீட்டின் உரிமையாளர் மனைவி, விநாயகத்தின் வீட்டுக்கு வந்தார். கதவு சாத்தப்பட்டு இருந்ததால் தட்டிப்பார்த்தார். யாரும் வராததால், கதவை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றார். அங்கு, ஒரு போர்வையை போர்த்தியபடி அம்லு படுத்திருந்தார். உடனே அம்லுவை தட்டி எழுப்பியபடி போர்வையை விலக்கியபோது, அம்லு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரது தலையில் பலத்த காயம் இருந்தது. உடனே வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

ரத்தத்தால் கடிதம்

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சிங் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அம்லுவின் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அம்லுவின் கணவர் விநாயகத்தை வீட்டில் காணாததால் அவரை போலீசார் தேடி வந்தனர்.

அதே நேரத்தில் வீட்டை சோதனை போட்டபோது, ரத்தம் படிந்த இரும்பு சுத்தியலும், இரும்பு உளியும் கிடைத்தது. அவற்றின் அருகே ஒரு கடிதமும் இருந்ததது. அந்த கடிதத்தில், `குடும்ப கஷ்டம் தாங்க முடியவில்லை. என் மனைவியின் சாவுக்கு நான்தான் காரணம் -அன்பே சிவம்’ என்று எழுதப்பட்டு இருந்தது. அதன் கீழே, விநாயகம் என்ற கையெழுத்தும் கைரேகையும் ரத்தத்தால் போடப்பட்டு இருந்தது.

ரெயிலில் பாய்ந்து

இதையடுத்து விநாயகத்தை போலீசார் தீவிரமாக தேடத் தொடங்கினர். அப்போது அவருடைய வீட்டை ஒட்டி செல்லக்கூடிய ரெயில்வே தண்டவாளத்தில் ஒரு வாலிபரின் பிணம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்த போது வாலிபர் ஒருவர், ரெயிலில் அடிபட்டு உடல் துண்டாகி இறந்து கிடந்தார்.

அது குறித்து விசாரித்த போது, இறந்து கிடந்தது விநாயகம் என்பது தெரிய வந்தது. மனைவியை கொன்று விட்டு, விநாயகமும் மின்சார ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

நள்ளிரவில் சண்டை

சபரிமலை செல்வதற்காக, விநாயகம் மாலை போட்டிருக்கிறார். கொலை நடந்ததற்கு முன்தினம், அம்லு வேலைக்கு செல்லவில்லை. அதனால், இரண்டு பேருக்கும் பலத்த சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த விநாயகம், மனைவியின் தலையில் உளியை வைத்து சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் அருகில் உள்ள தண்டவாளத்துக்கு சென்று ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருக்கிறார். இரண்டு சம்பவங்களுமே நடந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், தற்கொலை செய்யும் முன்பு, சபரிமலை செல்வதற்காக போட்டிருந்த மாலையை வீட்டினுள் சாமிப்படத்தின் முன்பாக, விநாயகம் கழற்றி வைத்திருக்கிறார்.

இந்த கொலை மற்றும் தற்கொலை சம்பவங்களுக்கு வேறு காரணம் ஏதாவது இருக்குமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் தலையில் உளியை வைத்து சுத்தியால் அடித்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Comments are closed.