By 14 February 2016 0 Comments

பருவ காதலை உண்மை என்றெண்ணி வாழ்வை இழந்தேன்..!!

httytஆசை, காதல், மோகம் போன்றவற்றின் போது தரப்படும் சத்தியம் சங்கடங்கள் என்று வந்தவுடன் சத்தமே இல்லாமல் காணாமல் போய் விடும் என்பதை எனது வாழ்க்கை அனுபவங்களின் மூலம் நான் அறிந்துகொண்டேன். பருவ காதல் என்னை பற்றிக்கொள்ள நானும் பாதை மாறித் திரிந்தேன். பெற்றோரின் அன்பையும் , அறிவுரையையும் பல சமயங்களில் உதறித் தள்ளினேன். இதனால் இறுதியில் எனக்கு கிடைத்தது என்னவோ வெறும் ஏமாற்றங்கள் மட்டுமே.

இது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் காரணமாக சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு இரண்டு வருடங்கள் வெலிக்கடை சிறைச்சாலையில் தண்டனைஅனுபவித்து அண்மையில் விடுதலையான பியூமியின் கசப்பான அனுபவ பகிர்வாகும்.

பியூமி தொடர்ந்து தனது வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்துகொண்ட போது,

நான் சாதாரண விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவள். எனது பெற்றோருக்கு ஒரே பிள்ளை. எனவே, அவர்களின் ஒட்டுமொத்த அன்பையும், பாசத்தை என் மீதே காட்டினார்கள். அதுவும் எனது தந்தை என் மீது அளவுகடந்த பாசத்தை வைத்திருந்தார். அம்மா சில சமயங்களில் என்னுடைய விருப்பங்களுக்கு எதிர்ப்பை தெரிவித்தாலும் அப்பா எனக்கு ஆதரவாகப் பேசுவார். எனவே, சிறிய குடும்பம் என்றாலும் எமது குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்கவில்லை.

இது இவ்வாறிருக்க, நான் பருவமடைந்தேன். அந்த வயதுக்குக்கேற்ற தோற்றமும் அழகும் இயல்பாகவே என்னுள் உருவானது. ஆகவே, அதுவரை எனக்கு பெரிதாக கட்டுப்பாடுகளை விதிக்காத எனது பெற்றோர், அதன்பின்னர் எந்த நேரமும் எனது பாதுகாப்பு தொடர்பாகக் கவனம் எடுக்க ஆரம்பித்தார்கள். நான் பெரும்பாலும் பாடசாலைக்கு செல்வது வருவது எல்லாமே தாய் அல்லது தந்தையுடன் தான். எனினும், எனக்கு அது பெரும் தொல்லையாகவிருந்தது. நான் சுதந்திரமாய் நண்பர்களுடன் சுற்றித் திரியவே ஆசைப்பட்டேன். எனவே சில சமயங்களில் எனது தந்தையுடன் அடம்பிடித்து நான் நண்பிகளுடன் செல்கின்றேன் என்று சென்றுவிடுவேன்.

இதனிடைய, எனது கல்விப்பொதுத்தராதர பரீட்சையும் நெருங்கியது. எனினும் அத்தகையதொரு தருணத்தில் தான் நான் சுஜீவ என்ற எனது ஊரிலுள்ள இளைஞன் ஒருவரை காதலிக்க ஆரம்பித்தேன். அப்போது எனக்கு 16 வயது. எனவே, 15, 16 வயதுகளில் ஏற்படும் காதல் உணர்வு வெறும் எதிர்பாலினக் கவர்ச்சி மட்டுமே. அது உண்மைக்காதல் அல்ல என்பதை அன்று நான் அறிந்திருக்கவில்லை. கண்ணாடி முன்நின்று நான் அழகாக இருக்கின்றேனா? என பலமுறை ரசித்து பார்க்கும் எனக்கு, என்னையும் ஒருவன் ரசிக்கின்றான் என்றவுடன் என்னை அறியாமலே அவனை எனக்கு பிடித்துபோனது. எனவே காதல் என்ற போதையில் கல்வி என்னும் அரிய பொக்கிஷத்தை தவறிவிட்டேன். சதா அவனுடைய நினைவுகளே என்னுள் அலை மோதின.

இது இவ்வாறிருக்க நான் கல்விப்பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றினேன். எனினும், எனது பெறுபேறுகள் உயர்தரத்தை தொடரும் அளவுக்கு அமையவில்லை. எனவே, நான் எனது தந்தையிடம் கெஞ்சி மன்றாடி எங்களுடைய கிராமத்துக்கு அருகிலுள்ள நகரத்துக்கு கணினி பயிற்சிக்காக சென்று வந்தேன். என்னுடன் சில சமயங்களில் சுஜீவவும் வருவார். எனவே எங்களுடைய காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவர, அவர்கள் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள். எனக்கு கணினி வகுப்புகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இத்தகையதொரு தருணத்தில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கு சுஜீவ இல்லாமல் வாழ முடியாது என்று தோன்றியது.

ஒரு நாள் எனது தாயும் தந்தையும் வீட்டில் இல்லாத சமயத்தில் சுஜீவ வந்து எங்காவது போய் திருமணம் செய்துகொள்வோம் என்று என்னை தன்னோடு வரச் சொன்னான். எனவே, அன்றைய நிலையில் எனக்கு சுஜீவ மட்டும் தான் உலகம் என்று எண்ணத் தோன்றியது. எனது பெற்றோரை பற்றி சிறிதும் சிந்தித்து பார்க்காது வீட்டை விட்டு சுஜீவவுடன் சென்றேன்.

நாங்கள் எமது கிராமத்திலிருந்து பக்கத்து ஊரிலேயே எங்களுடைய வாழ்க்கை ஆரம்பித்தோம். சுஜீவவின் நண்பர் ஒருவரின் வீட்டில் வாடகைக்கு இருந்தோம். எங்களுடைய திருமண வாழ்க்கையின் ஆரம்ப காலம் மிக மகிழ்ச்சியாகவிருந்தது. எனினும் நாட்கள் செல்ல, செல்ல சுஜீவவின் சுயரூபம் வெளிப்பட ஆரம்பித்தது. தினமும் அடி, உதைகள் என்று என் உடலை பதம் பார்த்தான். வீட்டு செலவுகளுக்கும் பணம் தரமாட்டான். பல நாட்கள் பட்டினி கிடந்தும் இருக்கின்றேன்.

இத்தகையதொரு தருணத்தில் தான் நான் கருவுருற்றேன். நான் ஒரு கர்ப்பவதி என்று தெரிந்தும் கூட அவன் என் மீதும் சிறிதும் இரக்கம் காட்டவில்லை. இதுஇவ்வாறிருக்க ஒரு நாள் திடீர் என்று எங்கோ தலை மறைவாகிவிட்டான். அதன்பிறகு தான் அவன் வேறு ஒரு பெண்னை திருமணம் செய்துக்கொண்டான் என்று நான் தெரிந்துக்கொண்டேன். அந்த நிலையில் எனக்கு எங்கு செல்வது? என்ன செய்வதென்று ஒருமே புரியவில்லை. நிறைமாதக் கர்ப்பிணியாக மீண்டும் எனது பெற்றோரிடமே வந்து சேர்ந்தேன். என் மீதிருந்த பாசத்தில் அவர்களும் என்னை மன்னித்து ஏற்றுக்கொண்டார்கள். கணவன் அருகில் இல்லாமல் கரப்பிணியாகவிருந்த என்னை நோக்கிய ஊராரின் பார்வை வித்தியாசமாகவிருந்தது. பலரும் பல விதமாக கதைத்தார்கள். இந்நிலையில் என்னுடைய பிரசவ நாளும் நெருங்கியது. நான் அழகிய பெண் குழந்தையொன்றை பெற்றெடுத்தேன். அதன்பின் குழந்தைக்கு 6 மாதம் வரும் வரை எனது பெற்றோரின் வீட்டில் இருந்தேன். இந்த ஆறு மாத கால பகுதியில் குழந்தை என்னை விட எனது அம்மாவிடம் ஒட்டிக்கொண்டது. எனவே குழந்தைக்கு ஆறு மாதம் பூர்த்தியாகும் வரை இருந்து விட்டு குழந்தையின் எதிர்காலம் கருதி கொழும்புக்கு வேலைக்கு வந்தேன்.

கொழும்புக்கு வந்த எனக்கு நண்பியொருவரின் மூலம் களியாட்ட விடுதியொன்றில் வேலை கிடைத்தது. அங்குள்ள வேலைகள் எனக்கு பழக்கமில்லாவிட்டாலும் போகப் போகப் அவற்றை பழகி்க் கொண்டேன். இத்தகையதொரு தருணத்தில் தான் மாதிவெல பகுதியைச் சேர்ந்த விமல் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. விமல் ‘ரெட் புல்’ (RED BULL) வாங்கவே அடிக்கடி களியாட்ட விடுதிக்கு வந்து போவான். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று ‘ரெட் புல்’ (RED BULL) வாங்குவான். எனவே களியாட்ட விடுதிக்கு வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என்னோடு நன்றாகப் பேசுவான். விமலுக்கு பஞ்சிகாவத்தை பகுதியில் இரண்டு கடைகள் இருப்பதாகவே கூறியிருந்தான்.

இவ்வாறு நானும் அவனும் நண்பர்களானோம். என்னிடம் செலவுக்கு பணம் இல்லாத சந்தர்ப்பங்களியெல்லாம் நான் விமலிடம் தான் பணம் கேட்பேன். கேட்டபதை விட அதிகமாக தான் அவன் எனக்கு தருவான். அவனிடமிருந்து நான் பெற்றுக்கொள்ளும் பணத்தை நான் குழந்தையின் செலவுக்கு ஊருக்கு அனுப்பி வைப்பேன். ஒரு கட்டத்தில் பணத்துக்காக எதையும் செய்ய துணிந்தேன். அதன்பின் நட்பு என்னும் திரை மெல்ல மெல்ல விலகி இருவரும் உணர்ச்சிகளுக்கும் இடம்கொடுத்தோம்.. களியாட்ட விடுதியில் அனைவரும் விமலை என்னுடைய போயி ப்ரெண்டாகத் தான் அடையாளம் கண்டார்கள்.

அதன்பின் நாங்கள் இருவரும் களியாட்ட விடுதிக்கு அப்பாலும் வேறு வேறு இடங்களில் சந்திக்க ஆரம்பித்தோம். ஒரு நாள் நாங்கள் ஹோட்டலொன்றில் வைத்து சந்தித்தோம். அப்போது அந்த ஹோட்டல் அறையில் வைத்து பலவந்தமாக எனக்கு போதைப்பொருளை பருகச் செய்தான். நான் பலமுறை அவன் பிடியிலிருந்து விடுபட முயற்சித்தேன். எனினும், அவன் விடுவதாய் இல்லை. இறுதியில் ஒவ்வாமை காரணமாக வாந்தியும் எடுத்தேன். எனினும், நாளடைவில் அது எனக்கு பழகி போக நானும் தினந்தோறும் ஹெரோயின் பாவிக்க ஆரம்பித்தேன். எனக்கு ஹெரோயின் இல்லாமல் இருக்கமுடியாமல் போனது. அதன்பின் எனக்கு அந்த வியாபாரத்தையும் செய்ய அவன் பழக்கினான்.

அழகாக உடுத்திச் சென்று அவன் சொல்லும் இடங்களுக்கெல்லாம் சென்று போதைப்பொருளை கொடுத்துவர வேண்டும். அதற்கு எனக்கு அவன் பணமும், போதைப்பொருளும் தருவான். எனவே, நானும் அந்த குறுகிய காலத்துக்குள் நிறையப் பணம் சம்பாதித்துக்கொண்டேன்.

இது இவ்வாறிருக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையிலேய நான் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டடேன். எனக்கு பிணை வழங்க யாரும் முன்வரவில்லை. நான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எனது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், எனக்கு இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை என்று விதிக்கப்பட்டது. நான் சிறைக்கு சென்ற ஆரம்ப காலங்களில் எனக்கு ஹெரோய்ன் இல்லாமல் இருக்கமுடியாமல் போனது. எனினும், போகப் போக நான் அவற்றை பழகிக்கொண்டேன்.

நான் சிறையிலிருக்கும் போது அவன் எப்போதுமே என்னை வந்து பார்க்கவில்லை. அவன் எங்கு இருக்கின்றான் என்பது இன்று வரை எனக்கு தெரியாது. எனக்கு இனி அவனை பற்றி அறிய வேண்டிய தேவையும் இல்லை.

சிறையில் இருக்கும் காலங்களில் எனக்கு அடிக்கடி என்னுடைய குழந்தையின் நினைவு வரும். ஒரு தாயாக எனது குழந்தைக்கு நான் எதுவுமே செய்தது இல்லை. அவள் அம்மாவுடனே இருந்து பழகிவிட்டாள். எனவே ,இனி எனக்கு இந்த கொழும்பு வாழ்க்கை , ஹெரோயின் எதுவுமே தேவையில்லை. எனது பெற்றோரும் வயதானவர்கள். அவர்களுடன் ஊரிலேயே சென்று விவசாயத்தை பார்த்துக்கொண்டு இருக்கப்போகின்றேன்.

Note-

“பருவ வயதில் ஏற்படும் காதல் உணர்வு

வெறும் எதிர்பாலினக்

கவர்ச்சி மட்டுமே.

என்பதை அன்று

நான் அறிந்திருக்கவில்லை”

கண்ணாடி முன்நின்று நான் அழகாக இருக்கின்றேனா?

என பலமுறை ரசித்து பார்க்கும் எனக்கு, என்னையும் ஒருவன் ரசிக்கின்றான் என்றவுடன் என்னை அறியாமலே அவனை எனக்கு பிடித்துபோனதுPost a Comment

Protected by WP Anti Spam