ஹெஸ்புல்லா தீவிரவாதிகள் 2 பேரை இஸ்ரேல் சிறைப்பிடித்தது

Read Time:4 Minute, 51 Second

Lepanan.Map1.jpgதெற்கு லெபனானில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து ஹெஸ்புல்லா தீவிரவாதிகள் 2 பேரை இஸ்ரேல் ராணுவம் சிறைப்பிடித்தது. பெய்ரூட் நகரில் குடியிருப்பு பகுதிகளில் விமானத்தாக்குதல் நடத்தி இஸ்ரேல் ராணுவம் அழித்ததற்கு ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்து உள்ளது.

கடந்த 12 நாட்களாக லெபனான் மீது விமானத்தாக்குதல் நடத்தி பேரழிவை ஏற்படுத்தி உள்ள இஸ்ரேல் ராணுவம் தரைப்படையையும் லெபனான் நாட்டுக்குள் அனுப்பி உள்ளது. இந்த ராணுவம் லெபனானில் உள்ள மருன் அல் ராஸ் என்ற கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தியது. அங்கு பதில் தாக்குதலில் ஈடுபட்ட ஹெஸ்புல்லா தீவிரவாதிகளில் 2 பேரை இஸ்ரேல் ராணுவம் சிறைப்பிடித்தது. அந்த 2 பேரையும் இஸ்ரேலுக்கு கொண்டு போய்விட்டது.

ஹெஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 2 பேரை கடத்திச்சென்றதற்காகத்தான் இந்த யுத்தமே நடக்கிறது. 2 பேரை கடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2 பேரை சிறைப்பிடித்து உள்ளது.

தெற்கு லெபனான் எல்லையில் உள்ள ஹெஸ்புல்லா தீவிரவாதிகள் வலுவாக உள்ள கிராமங்களில் இஸ்ரேல் ராணுவம் புகுந்தது. அங்கு எல்லாம் இருதரப்புக்கும் இடையே கடும் யுத்தம் நடந்தது. இந்த யுத்தத்தில் இஸ்ரேல் வீரர்கள் சிலர் காயம் அடைந்தனர்.

ஐ.நா. கண்டனம்

இதற்கிடையில் இஸ்ரேலுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஐ.நா. நிவாரணப் பணிக்குழு தலைவர் ஜான் ஏஜ்லாந்து நிருபர்களிடம் பேசுகையில், இஸ்ரேல் மனிதாபிமான எல்லைகளை மீறிவிட்டது என்று குற்றம் சாட்டினார்.

பெய்ரூட் நகரில் மனிதர்கள் பெருமளவு வசிக்கக்கூடிய பகுதியில் ராணுவ பலத்தை அதிகமாக பயன்படுத்தி வசிப்பிடங்களை தேடித்தேடி அழித்து உள்ளது. கிட்டத்தட்ட 5 லட்சம் மக்கள் வீடுவாசல் இழந்து தவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

30 சதவீதம் பேர் சிறுவர்கள்

ஏவுகணைத் தாக்குதலில் காயம் அடைந்த சிறுவர்களும், குழந்தைகளும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை நான் நேரில் சென்று பார்த்தேன். காயம் அடைந்தவர்களில் 30 சதவீதம்பேர் சிறுவர்களும், குழந்தைகளும் ஆவார்கள். இது 2 ராணுவங்களுக்கு இடையே நடக்கும் யுத்தம் அல்ல. ராணுவத்துக்கும், அப்பாவி பொதுமக்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம்போல் உள்ளது என்று அவர் கூறினார்.

ஹெஸ்புல்லா தீவிரவாதிகளின் குடும்பங்களுக்கும் தாக்குதலில் பலியான மற்றும் காயம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கும் ஹெஸ்புல்லா அமைப்பு மாதச்சம்பளம் வழங்கிவருகிறது. சிரியா ஈரான் ஆகிய நாடுகள் இந்த அமைப்புக்கு உதவி செய்து வருகின்றன.

போர் நிறுத்தம் அவசியம்

போர் நிறுத்தத்துக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்து வந்த அமெரிக்கா இப்போது போர் நிறுத்தம் அவசரதேவை என்று கூறி உள்ளது. அமெரிக்க வெளிநாட்டு மந்திரி ரைஸ் நிருபர்களிடம் கூறுகையில், லெபனான் தாக்குதல் முழுமையான போர்ஆக மாறுவதை தடுப்பதற்கு அமெரிக்கா முயற்சிசெய்து வருகிறது. இப்போது உடனடித்தேவை போர்நிறுத்தம் தான் என்று அவர் தெரிவித்து உள்ளார். ஜெருசலேம், பாலஸ்தீனம் ஆகிய இடங்களுக்கு செல்வதற்காக மேற்கு ஆசியா பயணத்தை அவர் மேற்கொண்டு இருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post போர்ட்டோரிக்கோ அழகிக்கு உலக அழகி பட்டம்; இந்திய அழகி நேகா தோல்வி
Next post ஐ.நா. பொதுச்செயலாளர் பதவி: முதல் கட்ட ஓட்டுப்பதிவில் இந்திய அதிகாரிக்கு 2-வது இடம்