By 19 February 2016 0 Comments

பிரபாகரன் ஒரு புரியாத புதிர்!!; இறுதிவரை ஈழத்துக்காக போராடுவோம்.. – பிரபா சூளுரை: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 64) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்

timthumbமூன்றுவித விளக்கம்

ரெலோ இயக்கத் தலைவர் சிறீசபாரெத்தினம் 6.5.86 அன்று கொல்லப்பட்டார். அதன் பின்னர் தமிழ்நாட்டில் தங்கியிருந்த புலிகள் அமைப்பின் தலைவரிடம் ரெலோ இயக்கம் மீதான தடை தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டன.

“ரெலோ இயக்கமும், அதன் தலைவர் சிறீ சபாரெத்தினமும் புலிகள் இயக்கத்தை ஒழித்துக்கட்ட திட்டம் தீட்டியிருந்தார்கள். அதனை அறிந்து நாம் முந்திக்கொண்டோம்” என்;று தமிழ் நாட்டில் விளக்கம் சொன்னார்கள் புலிகள் இயக்கத்தினர்.

“இந்தியக் கைக்கூலிகள் என்பதால் ரெலோ இயக்கத்தை தடைசெய்தோம்” என்று வடக்கு-கிழக்கில் சொன்னது போல, தமிழ்நாட்டில் சொல்லவில்லை என்பதையும் கவனிக்க முடிந்தது.

ரெலோ இயக்கத்தை முற்றாகத்தடை செய்தது மூலம் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியில் பலமுள்ள அமைப்பு என்று இந்தியா தவிர்ந்த வெளிநாடுகளில் பிரசாரம் செய்யப்பட்டது.

ரெலோ மீதான நடவடிக்கைக்கு முன்று விதமாக-மூன்றுவிதமான சூழல்களுக்கு ஏற்ப, புலிகள் அமைப்பினர் விளக்கம் கொடுத்தனர் என்பதுதான் உண்மை.

அமெரிக்க ‘டைம்’ சஞ்சிகை 9.6.86 அன்று வெளியான இதழில் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக ஏழுபக்க கட்டுரை வெளியிட்டிருந்தது.

“தமிழீழ விடுதலை கோரும் அமைப்புக்களில் பிரபாகரன்தான் குழப்பமற்ற ஒரு தலைவராக விளங்குகிறார்” என்று குறிப்பிட்டிருந்தது ‘டைம்’ சஞ்சிகை.

இலண்டன் பி.பி.சி. தமிழோசை அப்போதிருந்தே விடுதலைப் புலிகளுக்கு சாதகமாகவே செய்திகளை வெளியிட்டு வந்தது.

2.5.86 அன்று இலண்டன் பி.பி.சி. தனது செய்திக் குறிப்பில் பின்வருமாறு தெரிவித்தது:

“விடுதலைப் புலிகள், இராணுவத்தை எதிர்கொள்வது போல இம்முறை ரெலோ மீது எடுத்த நடவடிக்கையினால் தமிழ் மக்களை மேலும் கவர்ந்துள்ளனர். அது மட்டுமல்ல, அங்குள்ள பெரியவர்கள், விடுதலைப் புலிகள் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்”.
யூ.என்.ஐ. செய்தி

கொழும்பிலுள்ள யூ.என்.ஐ. செய்தி நிறுவன நிருபர் “ரெலோ உறுப்பினர்களை புலிகள் பெற்றோல் ஊற்றி உயிருடன் எரித்தனர். சிறுவர்களை விரட்டி விரட்டிச் சுட்டனர்” என்று தனது செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தனர்.

13.5.86 அன்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் யூ.என்.ஐ. நிருபர் எழுதிய கட்டுரையில், புலிகள் அமைப்பினர் ரெலோவை தடைசெய்தமைக்காக யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் சொன்ன கருத்து இடம்பெற்றிருந்தது.

அது இதுதான்:
“இந்திய அரசின் ஆதரவில் தமிழர் பிரச்சனைக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணவும், பாரம்பரிய அரசியல் பாதைக்கு திரும்பவும் ‘ரெலோ’ தயாராக இருந்தது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரே நோக்கம் சுதந்திர தமிழீழத்தை அமைப்பதுதான். அதிலே அவர்கள் பிடிவாதமாக உள்ளனர்.

இந்தியத் தயாரிப்பான ஓர் அரசியல் தீர்வினைத் தற்காலிகமாகவேனும் ஈழத்தமிழர் இ;ப்போது ஏற்றால், இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகளின் பின்னர் மீண்டும் புதிதாக போராட்டத்தை ஆரம்பிக்க நேரும் என்று விடுதலைப்புலிகள் நினைக்கிறார்கள்.

அதைவிட இப்போது நடைபெறும் விடுதலைப் போரை தமிழீழத்தை அடைவதுவரை தெடர்ந்து நடத்துவது மேலானது என்று புலிகள் கருதுகிறார்கள்” என்று பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் விளக்கமளித்தார்.

கோவையின் மடல்

பிரபாகரனின் பண உதவியால் தமிழ் நாட்டிலிருந்து கோவை மகேசன் வெளியிட்டு வந்த பத்திரிகை ‘வீரவேங்கை.’

ரெலோ தடை செய்யப்பட்டது தொடர்பாக கோவை மகேசன் வீரவேங்கையில் ஒரு நீண்ட மடல் வரைந்திருந்தார்.

அதில் ஒரு இடத்தில் கோவை மகேசன் காட்டமாக குறிப்பிட்டிருந்தது இப்படி:

“தாயக விடுதலை என்ற இலட்சியத்தை ஏற்று களத்தில் இறங்கி விட்டபின்னர், அந்த இலட்சியத்திற்கு துரோகம் செய்யத் துணிந்து விட்டவன் எவனாயிருந்தாலும், அவன் நண்பனாக இருந்தாலும், தந்தையாக இருந்தாலும், தம்பியாக, தங்கையாக ஏன் தாரமாக இருந்தாலும் ஒழிக்கப்பட வேண்டியவர்களே.

ரெலோ மட்டுமல்ல-சுதந்திர தமிழீழம் என்ற ஈழத்தமிழர்களின் கண்ணீராலும், செந்நீராலும், எலும்புகளாலும், தசைகளாலும் வளர்க்கப்பட்டுள்ள இலட்சியப்பயிரை, நம் ஊனோடும், உயிரோடும் கலந்துவிட்ட விடுதலை இலட்சியத்தை கைவிட்டு ஜெயவர்த்தனாவின் மாகாணசபை என்ற மாய்மாலத்தில் மயங்கி சிங்கள மேலாதிக்கத்தையும், சிறீலங்காவின் ஒற்றையாட்சி அமைப்பையும், சிங்கள தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் எவர் ஏற்றுக் கொண்டாலும்-அப்படிப்பட்டவர்கள் ஈழத்தமிழர்களின் பச்சைத் துரோகிகள் என்றே நான் கூறுவேன்.

தமிழீழ விடுதலை எனும் உயிர்கொள்கைக்கு எதிரான அனைத்து இயக்கங்களையும் தமிழீழ மண்ணில் இயங்க விடாமல் தடைசெய்வது என்று விடுதலைப் புலிகள் தீர்மானித்திருப்பதாக யாழ்ப்பாணத் தளபதி தம்பி கிட்டு அறிவித்திருப்பதை வீரவேங்கை சார்பாக வரவேற்கிறேன்.” என்றெல்லாம் எழுதியிருந்தார் கோவை மகேசன்.

சுவாமியின் கோபம்

இந்திய அரசியல்வாதியான சுப்பிரமணியம் சுவாமி ரெலோவுக்கு ஆதரவாக இருந்தவர்.

சிறீ சபாரெத்தினம் பலியானவுடன் ரெலோ இயக்கம் தன்னை நம்பித்தான் வரவேண்டும் என்று நினைத்தார் சந்திரஹாசன். தந்தை செல்வாவின் மகனான சந்திரஹாசனுக்கு முன்னரே ரெலோவோடு இருந்த தொடர்பை விளக்கியிருக்கிறேன்.

பின்னர் அந்த தொடர்பை சிறீ சபாரெத்தினம் வெட்டிவிட்டதைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன்.

சந்திரஹாசனுக்கு நெருக்கமானவர் சுப்பிரமணியம் சுவாமி.

ரெலோவை புலிகள் தடைசெய்ததை கண்டித்து காரசாரமான அறிக்கை ஒன்றi வெளியிட்டார் சுப்பிரமணியம் சுவாமி.
“பிரபாகரன் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று தனது அறிக்கையில் கோரிக்கையும் விடுத்திருந்தார் சுப்பிரமணியம் சுவாமி.

பிரபா ஒரு புதிர்
ஜுன் 30, 1986 இல் வெளிவந்த ‘இந்தியா டுடே’ ஆங்கில் சஞ்சிகை பிரபாகரனின் பேட்டியை பிரசுரித்திருந்தது.

பிரபாகரன் தொடர்பாக தனது வாசகர்களுக்கு நீண்டதொரு அறிமுகமும் செய்திருந்தது.

அதிலிருந்து ஒரு பகுதி இது:

“பிரபாகரன் ஒரு புதியாத புதிராக விளங்குகிறார். அவரைச் சுற்றி யார் எத்தகைய பிரச்சாரத்தினை மேற்கொண்ட போதிலும் பிரபாகரன் ஒரு அதிசய மனிதராகவே எளிமையுடன் விளங்குகிறார். அவரது நடவடிக்கைகள் மிகவும் இரசகியமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.”

இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக மனம்திறந்து பேசியிருந்தார் பிரபா.
அப்பேட்டியின் முக்கிய பகுதிகளை வாசகர்கள் அறிவது அவசியம். இதோ பேட்டி:

கேள்வி : இலங்கை தமிழர் பிரச்சனையின் அடுத்த அத்தியாயம் எப்படி இருக்குமென எதிர்பார்க்கிறீர்கள்?

பிரபா : இராணுவ ரீதியாக ஏதாவது தனக்குச் சாதகமான வெற்றி நிலை ஏற்பட்டால் மட்டுமே சிறீலங்கா ஜனாதிபதி ஜே.ஆர். பேச்சுவார்த்தை மேசைக்கு வருவார். அதுவரை அவர் இராணுவத் தீர்வையே நாடித் தொடர்ந்து அதிலே ஈடுபடுவார்.

கேள்வி : சிறீலங்கா அரசினர் தமது முழுப் படை பலத்தையும் பிரயோகித்து இறுதியில் உங்கள் இயக்கத்தையே அழித்து விடுவர் என்று நீங்கள் கருதவில்லையா?

பிரபா : தமிழீழ விடுதலைப் பிரச்சனைக்கு இராணுவ ரீதியாகத் தீர்வு கண்டுவிடலாம் என ஜே.ஆர் நினைக்கக்கூடும். ஆனால் பெரிய அளவில் ‘இனக்கொலை’ ஒன்றை நடத்தி முடிப்பதிலேயே அவர் வெற்றி காண முடியும். எமது இலட்சியத்தை அடையும்வரை ஒருவர் பின் ஒருவராக போராடிச் சாவதற்கு எம்மிடம் ஏராளமான இளைஞர்கள் உண்டு.

கேள்வி : புலிகளின் இராணுவ பலத்தையும், சிறீலங்கா அரசின் இராணுவ பலத்தையும் நீங்கள் எவ்வாறு கணக்கிடுகிறீர்கள்?

பிரபா : இராணுவ ரகசியம் எதையும் நான் கூற முடியாது. சிங்கள இராணுவத்தை தமிழீழ மண்ணை விட்டு விரட்டும் ஆற்றல் எம்மிடமுண்டு. சிறீலங்கா இராணுவத்தை தோற்கடிக்கும் அளவுக்கு போதுமான ஆதரவைத் திரட்ட எமது இயக்கத்தினால் முடியும்.

தமிழீழம் எப்போது?

கேள்வி : சுதந்திர இறைமையுள்ள தமிழீழ தனிநாட்டை அடைவதற்குக் குறிப்பிட்ட காலக்கெடு ஏதாவது நிர்ணயித்துள்ளீர்களா?

பிரபா : தமிழீழ நாட்டை நாம் எப்போது மீட்போம் என்று வரையறுத்து என்னால் கூற முடியாது. ஆனால் நிச்சயமாக நாம் அதனை மீட்டே தீருவோம். இது ஓரளவு சர்வதேச அரசியல் நிலையிலும், சிங்கள அரசுக்கு ஏற்படுகின்ற பொருளாதார நெருக்கடியிலும் தங்கியுள்ளது.

எமது ஆயுதப் போராட்டம் காரணமாக சிங்களத்துப் பொருளாதாரச் சீரழிவு ஏற்பட்டே தீரும். ஜெயவர்த்தனாவின் வெளிநாட்டு ஆதரவாளர்களால், இலங்கைத்தீவை ஒரே நாடாக வைத்துக் கொள்வதற்கு ஜெயவர்த்தனாவினால் முடியாது என்பது உணரப்பட்டவுடன், அவர்கள் அவரைக் கைவிடுவார்கள். அவரிடமுள்ள துப்பாக்கிகளாலும், குண்டுகளாலும், கவச வண்டிகளாலும், அவரது ஆட்சியை எதிர்த்துத் தொடர்ச்சியாகப் போராடிவரும் எம்மை அசைத்துவிட முடியாது.

கேள்வி : சிறீலங்கா அரசுடன், கௌரவமான அரசியல் உடன்பாடுகாண முடியும் என்று நீங்கள் கருதவில்லையா?

பிரபா : ஐக்கிய இலங்கைக்குள் அமைந்த அரசியல் உடன்பாட்டினைக் காணமுடியும் என்கின்ற காலகட்டத்தையும் எதிர்பார்ப்புக்களையும் நாம் இன்று கடந்து வந்து விட்டோம். தமிழீழ நாட்டை மீட்கும் எமது குறிக்கோளிலிருந்து அணுவளவேனும் பின்வாங்குவதற்கோ, திரும்பிப்பார்ப்பதற்கோ இனி இடமேயில்லை.

கேள்வி : தமிழீழத் தாயகம் என்னும் பெயரில் நீங்கள் விடுவிக்கப்பட விரும்பும் பூகோள எல்லைகள் எவை?

பிரபா: தமிழீழம் ஏற்கனவே இயங்;கிக் கொண்டிருக்கிறது. தமிழ் மக்களுக்கெனத்தனியானதோர் தாயகம் இலங்கைத் தீவிலுண்டு. அத்தாயகத்தில் எமது இறைமையையும் சுதந்திரத்தையும் ஆட்சியையும் நிலைநிறுத்தவே நாம் போராடி வருகிறோம்.

கேள்வி : நீங்களே யுத்தகளத்தில் நின்றிருக்கிறீர்களா?

பிரபா: ஆம், ஏராளமான எமது இராணுவத்தாக்குதல்களில் நான் பங்குபற்றியுள்ளேன். எமது இராணுவத்தில் நாம் எல்லோரும் பங்கு பற்றியே தீரவேண்டும்.

கேள்வி: உங்கள் முதலாவது கெரில்லா நடவடிக்கை என்ன?

பிரபா: யாழ்ப்பாணமாநகர முதல்வராக இருந்த அல்பிரெட் துரையப்பாவை 1975 இல் சுட்டுக் கொன்றதே எனது முதல் நடவடிக்கையாக இருந்தது. அதைத் தொடர்ந்து எத்தனையோ தாக்குதலில் பங்குபற்றியுள்ளேன்.

நிலாவெளியில் நடைபெற்ற தாக்குதலின்போது பெரும்பாலும் அங்கேயே தங்கியிருந்தேன். 1983 ஜுலையில் 13 சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவமும் என் தலைமையிலேயே இடம் பெற்றது.

கேள்வி: ‘ரெலோ’ மீது நீங்கள் போர் தொடுத்த காரணம் என்ன? தீவிரவாதிகள் மத்தியிலுள்ள ஒற்றுமையின்மை, உங்கள் இயக்கத்தையே பாதிக்கும் என்பதை நீங்கள் சிந்திக்கவில்லையா?

பிரபா : எமது போராட்டத்தில், நாம் ஒருமைப்பாடான அணுகுமுறையையே பின்பற்ற வேண்டும். எமது மத்தியிலுள்ள ஒற்றுமையின்மை, தமிழின விடுதலை இயக்கத்துக்கே பலவீனமானதுதான்.

ஆனால் இந்த ஒற்றுமையீனம் சிலரால் திட்டமிட்டே வளர்க்கப்பட்டு வந்துள்ளது. எனது கருத்தின்படி, ஒரேயொரு பலம் வாய்ந்த தீவிரவாத இயக்கமே விடுதலைப்போரைத் தலைமையேற்று முன்னெடுக்க வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகளாகிய நாமே, சிறீலங்கா இராணுவத் தாக்குதல்களைப் பல கட்டங்களில் முறியடித்துள்ளோம்.

ஒன்றுபட்ட ஐக்கியமான அமைப்புக்கு எதிராக நடவடிக்கையெடுப்பது சிங்கள் ராணுவத்துக்கே மிக ஆபத்தானது. இப்போது விடுதலைப் புலிகளே பலம் வாய்ந்த ஒன்றுபட்ட தனித்துவமான இராணுவமாக விளங்குகின்றனர்.
இயக்க ஒற்றுமை

கேள்வி: பேச்சுவார்த்தைகளினால் இந்த ஒற்றுமையயை ஏற்படுத்த உங்களால் முடியாதா?

பிரபா: ஏனைய இயக்கங்களே தங்களுக்குள் நம்பிக்கை இழந்து, தமக்குள்ளேயே ஒற்றுமையின்றித் தவிக்கும் போது, இந்த இயக்கங்களில் யாருடன் நாம் எதைத்தான் பேச முடியும்?

கேள்வி: ஏனைய குழுக்களை இல்லாதெழிப்பதே, ஐக்கியமான அணுகுமுறைக்கு ஒரே வழியா?

பிரபா: நாம் எந்த ஒரு இயக்கத்தையும் துடைத்தெறியவில்லை. ‘ரெலோ’வுக்கு ஒரு பாடம் கற்பித்தோம். ‘ரெலோ’ எமது இயக்க வீரர்களை கொலை செய்து வந்தது. அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிடின், விடுதலைப்புலிகள் இயக்கம், படிப்படியாக செயலிழந்துவிடும்.

ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா குழு) இயக்கத்துடன் எமக்குப் பிரச்சனை ஏற்பட்டாலும், நாம் மிகவும் பொறுமையுடன் இருப்பதை நீங்கள் அவதானிக்க முடியும்.

‘ரெலோ’ விடயத்திலும் எம்முடன் போரிட வந்த 100 உறுப்பினர்கள் வரை போரில் கொல்லப்படினும், 400 ‘ரெலோ’ உறுப்பினர்களை மட்டுமே கைது செய்து, அவர்களது ஆயுதங்களையும், தளவாடங்களையும் சுவீகரித்தோம்.

உண்மையான எதிரியான சிங்களப் படைகளுடன் போரிட முடியாத இவர்களிடம் ஆயுதங்கள் இருக்கக் கூடாதென்பதே எமது குறிக்கோள். எமது இயக்க வீரர்கள் சிங்கள இராணுவத்தை முகாமுக்குள் முடக்கி வைத்திருக்கும்போது, ‘ரெலோ’ குழுவினர் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டனர்.

விடுதலைப் போராட்டத்திற்கான முழுப்பொறுப்பையும் விடுதலைப்புலிகளே ஏற்பதுதான் நமக்கு நல்லது என்று யாழ்குடி மக்கள் கூறுகிறார்கள்.

கேள்வி: உங்களை ‘பயங்கரவாதி’ என்று அழைக்கும் ஜெயவர்த்தனாவுக்கு நீங்கள் கூறுவதென்ன,

பிரபா: நாம் பயங்கரவாதிகள் அல்லர்: அரச பயங்கரவாதத்தின் கோரப்பிடியிலிருந்து வெளியேறிச் சுதந்திரமாக வாழத் துடிக்கும் தமிழீழ மக்களின் பிரதிநிதிகள் நாமே!

(தொடர்ந்து வரும்)
அற்புதன் எழுதும் அரசியல்தொடர் Thanks.. ILAKKIYAAPost a Comment

Protected by WP Anti Spam