யாழ்பாணக் கோட்டை மீது ஈ.பி.ஆர்.எல்.எப். அடித்த ஷெல்களால், பின்வாங்கிய இராணுவத்தினர்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 66) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”

Read Time:20 Minute, 20 Second

timthumb (2)பேச்சும்-வேட்டையும்.

ஈழப் போராளி அமைப்புக்களது விருப்பங்களுக்கு மாறாக ஜே.ஆர். அரசுடன் பேச்சு நடத்த முன்வந்தனர் கூட்டணியினர்.

இந்திய அரசு சொன்னால் தான் பேச்சுவார்த்தைகளுக்கு செல்லுகிறோம் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தெரிவித்தனர்.

திம்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கொழும்பில் ஜே.ஆர். அரசுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடையே 1986 ஜுலை மாதம் பேச்சுவார்த்தை ஆரம்பித்தது.

மாகாண சபைத் திட்டத்தை கொழும்பில் வைத்து கூட்டணியினர் பரிசீலித்துக் கொண்டிருந்தபோது வடக்கு-கிழக்கில் இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்தன.

திருக்கோணமலையில் மட்டும் நூறு பேர் வரை கொல்லப்பட்டனர். அவர்களில் மூதூர் அகதி முகாமில் இருந்து மட்டும் 60 பேர் வரை கொல்லப்பட்டனர். 40 போ வரை காணாமல் போயினர்.

மன்னார் மாவட்டத்தில் 50 பேர்வரை கொல்லப்பட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 38 பேர் பலியானார்கள்.

வவுனியாவில் 30 பேர் வரை சுட்டக் கொல்லப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் 25 பேர் வரை கொல்லப்பட்டனர்.

கூட்டணிமீது பாய்ந்த ‘வீரவேங்கை

ஒருபுறம் இராணுவ நடவடிக்கை காரணமாக தமிழர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்க, மறுபுறம் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதை இயக்கங்கள் கடுமையாகக் கண்டித்தன.

வீரவேங்கை விமர்சனம்

ஜே.ஆர். அரசு முன்வைத்துள்ள மாகாண சபை தீர்வு யோசனை தொடர்பாக வீரவேங்கை பத்திரிகையில் பின்வருமாறு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

“இந்திய அரசின் முயற்சியினால் கூட்டப்பட்ட திம்பு மாநாட்டில் இந்திய அரசின் வார்த்தைக்கு மதிப்பளித்து, ஈழ மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகளும், ஏனைய இயக்கங்களும் கலந்து கொண்டன.

கூட்டாக தமது நிலைப்பாட்டை முன்வைத்தன. அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

1. தமிழ் மக்கள் ஓர் தனியான தேசிய இனம் என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும்.

2. தமிழ் பேசும் மக்கள் தொடர்ச்சியாக வாழும் பாரம்பரிய பிரதேசங்கள் தமிழ் பேசும் மக்களது தாயகம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

3. தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.

இப்பொழுது ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவால் இந்திய அரசு மூலமாக முன்வைக்கப்பட்டுள்ள மாகாண சபை திட்டத்தில் பழையபடி அரைத்த மாவே அரைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் அமைப்புக்கள் திம்புவில் முன்வைத்த திட்டங்களின் வாசனைகூட இல்லை.

பெயரளவில் மாகாண சுயாட்சியே தவிர, சுயாட்சித் தன்மை துளியளவும் இல்லை.

தமிழீழ மக்களின் பாரம்பரிய தாயகம்-அதாவது வடக்கு-கிழக்கு பிராந்தியங்கள்- நிரந்தரமாகவே பிரிக்கப்படுகிறது. அவை இணைந்து ஒரே அரசாக செயற்பட முடியாது.

மாகாணங்களுக்கிடையிலான நீர்ப்பாசனத் திட்டங்கள் யாவும் மத்திய அரசிடமே தொடர்ந்து இருக்கும். சிங்களக் குடியேற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு மாகாண சபைகளுக்கு அதிகாரம் கிடையாது.

தமிழ் மக்களின் மிக முக்கியமான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலைத் துறைமுகம் நிர்வாகம் தழிமர்களின் கைகளில் இருக்காது.

தூக்குக்கயிறு

இவையெல்லாவற்றையும் விட ஜெயவர்த்தனாவின் மாகாணசபைத் திட்டம் ஒரு தூக்குக் கயிறு. இதனை ஏற்றுக் கொண்டால் இலங்கைத்தீவு ஒரே நாடு என்பதனையும், ஒற்றையாட்சி நாடென்பதையும் ஏற்றுக் கொண்டதாகிவிடும்.

பௌத்தம் அரச மதம், சிங்கக் கொடி, சிங்கள தேசிய கீதம் என்பவற்றை உள்ளடக்கிய ஒற்றையாட்சி என்னும் தூக்குக் கயிற்றில் நாமே நமது தலையைக் கொடுத்தது போலாகிவிடும்.

இத்தகைய இழி நிலையை ஏற்பதற்கா 1977இல் இருந்து இதுவரை இருபதினாயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்களை பலிகொடுத்தோம்?

கொடிய விஷத்தை அமிர்தமாகக் கருதிக் கடித்துத் தின்று உயிரைத் தியாகம் செய்த இளைஞர்கள் எத்தனை பேர்?

தமிழீழ இயக்கங்களையும், இந்திய அரசையும் ஏமாற்றி கண்ணாமூச்சி காட்டும் மாகாணசபைத் திட்டத்தை முன் வைத்து உலக அரங்கிலே தான் நியாமாக நடப்பதுபோல நாடகமாடுகிறார் ஜே.ஆர்.

உண்மையில் ஜெயவர்த்தனா நடத்தி முடிக்க விரும்புவது தமிழர்களுக்கு சமவுரிமை அளிக்கும் சமரசமல்ல. தமிழர்களை மீளா அடிமை நிலைக்குள் தள்ளும் சாணக்கியம் நிறைந்த சமரசத் திட்டமாகும்.

தமிழீழ மக்களிடமிருந்து நூற்றுக்கு நூறுவீதம் “இறைமையுள்ள சுதந்திரத் தமிழீழம்” என்று 1977இல் வீர முழக்கமிட்டது கூட்டணி.

1979 இல் மாவட்டத்துக்குப் பின்னால் ஆவலட்டம் பிடித்துக் கொண்டு ஓடியது கூட்டணி.

கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றி தமது நாவன்மையால் வாக்கு வேட்டையாடிய அரசியல் குத்துக்கரண வீரர்கள், இன்றும் அதே பழைய மாவட்டத்தை ‘மாகாணமாக்கி’ தமிழர்களை கிணற்றிலே விழுத்த ஜெயவர்த்தனாவுக்கு ஒத்துழைப்புத் தருகின்றனர்.

இல்லாவிட்டால், மாகாணசபை திட்டத்தில் கூட்டணியினரோடு 90 வீத உடன்பாடு கண்டுவிட்டதாக ஜே.ஆர். துணிந்து கூறுவாரா?

டில்லியில் இனி நடைபெறும் மூன்றாவது சுற்றுப் பேச்சில், வடக்கு-கிழக்கு இணைப்பு விவகாரமே முக்கிய இடம்பெறும் என்று, 11.9.86இல் வீரகேசரிக்கு அளித்த பேட்டியில் அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதிலிருந்தே ஏனைய பிரச்சனைகளில் கூட்டணிக்கு ஜே.ஆர். அரசோடு உடன்பாடு ஏற்பட்டுவிட்டது என்பது தெரிகிறதல்லவா?

தமிழீழ மக்களையும், தமிழீழ போராளிகளையும் அமிர்தலிங்கம் கூட்டணியினர் ஏமாற்றுவதை உணரமுடியாத அறிவிலிகள நாங்கள்?”

இவ்வாறு கூட்டணியையும், ஜே.ஆரின் மாகாணசபைத் திட்டத்தையும் கடுமையாக சாடியிருந்தது ‘வீரவேங்கை’.

19.9.86 திருக்கோணமலை மாவட்டத்தில் உள்ள தெகிவத்தை இராணுவ முகாமில் இருந்து ரோந்து அணியொன்று புறப்பட்டது.

முன்னால் கால் நடையாக 15 பேர் வந்தனர். அவர்களின் பின்னால் ஜீப் ஒன்றில் ஏனையோர் வந்தனர்.

3ம் யூனிட் என்ற இடத்துக்கு அந்த ரோந்து அணிவந்த போது புலிகள் தாக்கினார்கள்.

திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத இராணுவத்தினர் பின்வாங்கினார்கள். ஒருவர் கொல்லப்பட்டார். அவரிடமிருந்த வு.56 ரக துப்பாக்கி புலிகளால் கைப்பற்றப்பட்டது.

அதே தினம் யாழ் மாவட்டத்திலும் ஒரு தாக்குதல் நடந்தது.

தொண்டமானாறு பாலத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவவீரர்கள் புலிகளால் தாக்கப்பட்டனர். இராணுவத்தினர் திருப்பிச் சுட்டனர். மோதலின் முடிவில் இராணுவத்தரப்பினர் ஒருவர் பலியானார்.

புலிகளது தரப்பில் சேதமில்லை.

21.9.86 அன்று பருத்தித்துறை இராணுவ முகாமில் இருந்து பலத்த ஷெல் அடிகள், மற்றும் துப்பாக்கி வேட்டுக்களை பொழிந்தபடி வெளியேறியது இராணுவம்.

புலிகளும், ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பினரும் இணைந்து இராணுவத்தினரின் முன்னேற்றத்தைத் தடுத்தனர்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். அடித்த மோட்டார் ஷெல்கள் விழுந்து வெடிக்க ஆரம்பித்ததும் இராணுவத்தினர் பின்வாங்கிச் சென்று விட்டனர்.

‘ஷெல்’மாரி

யாழ்ப்பாணம் கோட்டை இராணுவ முகாமிலிருந்து தினமும் ‘ஷெல்’மாரி பொழிவது வழக்கமாகிக் கொண்டிருந்தது.

கோட்டை முகாமைச்சுற்றியிருந்த ஆயிரம் மீட்டர் பகுதியை பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தியிருந்தனர். அப்பகுதிக்குள் யாரைக் கண்டாலும் இராணுவத்தினர் கண்ணை மூடிக்கொண்டு சுட்டுத் தள்ளிவிடுவர்.

கோட்டை முகாமிலிருந்து ஷெல் அடிப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

‘யாழ் மக்கள் ஒன்றியம்’ என்ற பெயரில் நடைபெற்ற அந்த ஊர்வலத்தில் பெருந் தொகையான மக்கள் கலந்து கொண்டனர். 27.8.86 இல் அந்த ஊர்வலம் நடைபெற்றது.

“கோட்டைக்குள் வீரமா? வெளியே வந்தால் ஓட்டமா?”
“வடக்கில் வீடுக்ள அழிப்பு. தெற்கில் வீடமைப்பு.”
“அழிக்காதே, அழிக்காதே, யாழ் நகரை அழிக்காதே!”
“எங்கள் பிள்ளைகளை அழிக்காதே, பள்ளி மாணவர்களைக் கொல்லாதே”

என்றெல்லாம் கோஷங்கள் எழுப்பியபடி, சுலோக அட்டைகளைத் தாங்கியபடி ஊர்வலம் நடந்து கொண்டிருந்தது.

அப்போது கோட்டைக்குள்ளிருந்த இராணுவத்தினர் என்ன செய்தார்கள் தெரியுமா?

வழமைபோல ‘ஷெல்’ மாரி பொழிந்தார்கள். யாழ்-பழைய சந்தை, கே.கே.எஸ். வீதி, யாழ்-மத்திய கல்லூரி, சத்திரத்துச் சந்தி ஆகிய இடங்களில் n~ல்கள் வந்து விழுந்து கொண்டிருந்தன.

களத்தில் பிரகடனம்

யாழ்ப்பாணத்திலிருந்து புலிகள் இயக்கத்தினரால் வெளியிடப்பட்ட பத்திரிகையின் பெயர் ‘களத்தில்’.
புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த திலீபன்தான் ‘களத்தில்’ பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி ஜே,ஆர். அரசுடன் நடத்தும் பேச்சுவார்த்தைகள், மாகாண சபைத் திட்டங்கள் என்பவற்றையெல்லாம் கேட்டு மக்கள் ஊசலாடிவிடக்கூடாதல்லவா.

அதனால் ‘களத்தில்’ பத்திரிகையில் ஆசிரியர் கலையங்கத்தில் எழுதப்பட்டது இப்படி:

“தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று முக்கியமான காலகட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இரத்த ஆற்றிலும், சாம்பல் மேட்டிலும் தியாக வேள்வியால் கட்டி வளர்க்கப்பட்ட எம் சந்ததிக்கான மக்கள் விடுதலைப் போராட்டம் இன்றைய நேரத்தில் நாம் எடுத்து வைக்கும் மிகச் சரியான அடிவைப்பிலேயே தங்கியுள்ளது.

தீரம் – தியாகம்.
வெற்றிகள் – தோல்விகள்.
சாதனைகள் – வேதனைகள்.
தடங்கல்கள் – முன்னேற்றங்கள்
இறுதியாக தெளிந்த இலட்சியப்பாதை.

இத்தனையூடும் வளர்ந்த போராட்டம் இன்று ஓர் முக்கிய கட்டத்தில் இருக்கிறது. இறுதியிலும், இறுதியான, உறுதியிலும், உறுதியான எமது ஒரே பிரகடனமாக:

“சுதந்திர தமிழீழம் தவிர்ந்த வேறெந்த தீர்வும் இனிவரும் எமது அரசியல் அகராதியில் கிடையாது.” இவ்வாறு ‘களத்தில்’ பத்திரிகையில் எழுதியிருந்தார் தலீபன்.

அன்னையர் முன்னணி
அன்னையர் முன்னணி என்னும் அமைப்பும் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றி வந்தது. யாழ் மாவட்ட அன்னையர் முன்னணித் தலைவிகளில் ஒருவர் திருமதி. ரி. குணநாயகம்.

“சிறைகளில் உள்ள எமது பிள்ளைகளை விடுதலை செய்யுங்கள்.” என்பதுதான் அன்னையர் முன்னணியின் பிரதான கோஷம்.

யு.என்.ஐ. செய்தி நிறுவன நிருபருக்கு அளித்த பேட்டியில் திருமதி ரி.குணநாயகம் சொன்னது இது:

“அண்மைக் காலமாக சிறீலங்கா படைகள் மேற்கொண்ட வன்முறைகள் காரணமாக 2 ஆயிரம் பேர்வரை இளம் பெண்கள் – பெரும்பாலும் கரையோரக் கிராமங்களில் விதவைகளாக்கப்பட்டுள்ளனர்.

யாழ்-குடாநாட்டில் வாழும் பொரும்பாலான பெற்றோர்களுக்கு அவர்கள் இறந்தால் கூட இறுதிக்கரியை செய்ய பிள்ளைகள் கிடையாது.

அவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள், அல்லது வெளிநாடுகளுக்கு தப்பியோடி இருப்பார்கள். அதுவும் இல்லாவிட்டால் ஏதாவது ஒரு தீவிரவாத இயக்கத்தில் பணியாற்றுவார்கள்.

எமது பிள்ளைகளை சிறீலங்கா அரசு கைதுசெய்து சித்திரவதை செய்தமை காரணமாகவே அவர்கள் ஆயுதமேந்தி போராட ஆரம்பித்தனர். இதற்கான முழுப்பொறுப்பையும் சிறீலற்கா அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.”

ஈரோஸ் இயக்கத்தினால் ஈழவர் முன்னணி என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்காக முன்னின்று செயற்பட்டவர்களில் ஒருவர் பரராஜசிங்கம்.

மக்களைத் திரட்டி வெகுஜனப் போராட்டங்களை நடத்தினார்கள்.

ரெலோ இயக்கம் புலிகளால் தடை செய்யப்பட்ட போதும் யாழ்ப்பாணத்தில் ஏனைய நான்கு இயக்கப் பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., புளொட், புலிகள் ஆகிய நான்கு இயக்கங்களும் வாரத்தில் ஒரு தடவை சந்தித்து பிரச்சனைகள் குறித்து கலந்து பேசிக்கொண்டன.

86ல் ஏழு நாள் போர்

யாழ்ப்பாணத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர 1986 மே மாதத்தில் முப்படைகளும் பாரிய நடவடிக்கையில் இறங்கினார்கள்.

மே 17 முதல் மே 24 வரை யாழ்ப்பாணத்திற்குள் முன்னேறும் முயற்சியில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கும் இயக்கங்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

விமானக் குண்டுவீச்சுக்கள் மத்தியில் பலத்த மோதல் தொடர்ந்தது.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். மோட்டார் தாக்குதலில் ஈடுபட்டது.

கோட்டை இராணுவ முகாமுக்கருகே இருந்து ஈ.பி.ஆர்.எல்.எஃப். மோட்டாரிலிருந்து ஷெல்கள் சீறிக் கிளம்பிக் கொண்டிருந்தன.

திடீரென்று ஒரு ஷெல் மோட்டாருக்குள்ளேயே வெடித்தது. இரண்டு போராளிகளின் உயிரை எடுத்தது. அதன் பின்னரும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். தொடர்ந்து மோட்டார் ஷெல் தாக்குதலில் ஈடுபட்டது.

ஏனெனில் மோட்டார் தாக்குதலை விட்டால், இராணுவத்தினரை அச்சுறுத்த வேறு மார்க்கம் இருக்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் ஏழு நாள் மோதலின் பின்னர் இராணுவத்தினர் தமது முயற்சியைக் கைவிட்டனர்.

ஏழுநாள் மோதல் முடிந்தவுடன் அதன் வெற்றியை புலிகள் அமைப்பின் தனித்த வெற்றியாக பிரச்சாரம் செய்யப்பட்டது.

உளி-மோகன் என்ற பெயரில் புலிகளின் பத்திரிகையில் ஒருவர் எழுதிய கவிதையில் ஒரு பகுதி இது:

“ஈண்டு பகையழித்து ஈழத் திருநாட்டை
ஆண்டு வருவதெல்லாம் ஆகா! நம் புலிப்படையே!
மீண்டு(ம்) பகைவன் படை மீறி வந்தால் – நம் புலிகள்
வேண்டும் வரை கொடுப்பர்! வெல்லும் தமிழீழம்”

ஏனைய இயக்கங்கள் மத்தியில் இதனால் கசப்புணர்வு ஏற்பட்டது.

5.12.95 அன்று மட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்பில் விசேட அதிரடிப்படை முகாம்மீது கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதுதான் கிழக்கு மாகாணத்தில் தரையில் நடத்தப்பட்ட முதலாவது கரும்புலித் தாக்குதலாகும்.

அத்தாக்குதலில் கரும்புலியாக பங்குகொண்டவர் மேஜர் ரங்கன் என்றழைக்கப்படும் தினே~;குமார். கரும்புலி ரங்கன் உட்பட 24 புலிகள் அத்தாக்குதலில் பலியானார்கள்.

கரும்புலி ரங்கனின் நினைவாக 5.01.96 அன்று மட்டக்களப்பு மியாங்குளம் சந்தியில் இராணுவத்தினர் மீது புலிகள் தாக்குதல் தொடுத்தனர். ரோந்து சென்ற படையினர் மீது புலிகள் நடத்திய தாக்குதல் அது.

ஒரு அதிகாரி உட்பட எட்டு இராணுவத்தினர் பலியானதாகவும், தமது தரப்பில் மூன்று பேர் பலியானதாகவும் புலிகள் அறிவித்தனர். பலியான புலிகளில் இருவர் பெண்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேலையற்ற பட்டதாரிகள்; அரசின் தீர்வு? -நிருபா குணசேகரலிங்கம்…!!
Next post ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை அமெரிக்கா அழிக்கும்: ஒபாமா ஆவேசம்…!!