வேகமாக பரவுகிறது எலிக் காய்ச்சல் 22 பேர் மரணம்; 2 ஆயிரம் பேர் பாதிப்பு

Read Time:4 Minute, 46 Second

er.gifநாட்டில் வேகமாக பரவிவரும் எலிக் காய்ச்சல் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளதுடன் இக்காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 22 பேர் இதுவரை மரணமடைந்துள்ளதுடன் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது. இதுபற்றிய போதிய விழிப்புணர்வு நாட்டு மக்களுக்கு அவசியமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை உள்ளிட்ட மாவட்டங்களிலேயே எலிக் காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. இது குறித்து சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் நிஹால் அபயசிங்க கூறுகையில்; மழை காலத்தில் எலிக் காய்ச்சல் வேகமாக பரவும் வாய்ப்புகள் உள்ளன. கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் மிக அதிகளவிலானவர்கள் இதன் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளனர். இதுவரை எலிக் காய்ச்சலினால் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இதனால் பீடிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று சென்றோரின் எண்ணிக்கை இதனைவிட பல மடங்காகும். நாட்டு மக்களிடம் இந்நோய் பற்றிய போதிய விழிப்புணர்வு அவசியம் என்றார்.

இந்நோய் குறித்து தொற்று தடுப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் திருமதி டாக்டர் பபா பலியவதன கூறுகையில்,

எலியின் சிறுநீரிலிருந்தே இந்நோய் பரவுகிறது. அதாவது எலியின் சிறுநீர் நீரில் கலந்து அது மனிதனின் உடலில் சேரும்போது இக்காய்ச்சலினால் பீடிக்கப்படும் சந்தர்ப்பம் அதிகரிக்கிறது.

அத்துடன், சிறுபள்ளங்கள் அல்லது நீர் தேங்கும் இடங்களில் எலியின் சிறுநீர் காணப்பட்டால் அதற்குள் சிறு காயங்கள் (புண்) உள்ள ஒருவர் இறங்குவதன் மூலமும் இக்காய்ச்சல் தொற்றிக் கொள்ள வாய்ப்புண்டு.

மேலும், எலியின் சிறுநீர் நீர் தேங்குமிடங்களில் சேர்ந்தால் அந்நீரை கால்நடைகள் அருந்தும்போதும் அக்கால்நடைகள் மூலம் மனிதனுக்கு எலிக்காய்ச்சல் தொற்றவும் வாய்ப்புகளுண்டு.

மனிதனுக்கு மரணத்தை ஏற்படுத்தும் எலிக் காய்ச்சல் ஆரம்பத்தில் சாதாரண நிலையிலேயே காணப்படும். 2 நாட்களுக்கு மேல் இந்நிலை நீடித்தால் அவர் உடனடியாக அருகிலுள்ள வைத்தியரை நாடி சிகிச்சை பெறுவது சிறந்தது.

தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்தை அதிகரிப்பதாக அமையும். நோயாளிக்கு வைத்தியரல்லாதவர்களினால் வழங்கப்படும் தவறான ஆலோசனைகள் நிலைமையை மேலும் பாரதூரமாக்கவே வழிவகுக்கும்.

இதேசமயம், நீர்தேங்கி நிற்கும் பிரதேசங்கள் மற்றும் எலியின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகள் பற்றிய போதிய விழிப்புணர்வு நோயிலிருந்து மீளுவதற்கு துணை புரியும். எமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருப்பது இங்கு பிரதானமானதாகும்.

எலிக் காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு பிரசாரங்களை சுகாதார அமைச்சு ஆரம்பித்துள்ளது. ஊடகங்களும் இதற்கு தமது பூரண ஒத்துழைப்பை நல்கி நோயிலிருந்து பாதுகாப்புப் பெற உதவ வேண்டுமென்றார்.

இதேசமயம், எலியின் சிறுநீர் மூலம் எலிக் காய்ச்சல் பரவுவதாக இதுவரை நம்பப்பட்டபோதும் எருமை மாட்டின் சிறுநீர் மூலமும் இந்நோய் பரவும் அபாயமிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சொந்த செலவிலும் திட்டங்களை அமுல்படுத்த முடியவில்லை: தமிழக அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவேன்- நடிகர் விஜயகாந்த்
Next post திருமலையில் பல கிராமங்களிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற திரைமறைவில் சதி நடவடிக்கை