By 6 March 2016 0 Comments

ஆலங்குளம் அருகே துப்பாக்கி சூடு: கார் டிரைவரை கடத்தி வெட்டிக்கொன்ற கும்பல்…!!

b1e0b298-138d-4346-9c12-b9423960be30_S_secvpfநெல்லை மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள ருக்மணியம்மாள்புரம் முதல் தேவர்குளம் வரை காட்டு பகுதி உள்ளது. இங்கு நேற்று சிலர் ஆடு, மாடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது சில ஆடுகள் வழிதவறி சென்றுவிட்டது. இதனை தேடி ஆடு மேய்ப்பவர்கள் நேற்றிரவு டார்ச் லைட்டுகளுடன் காட்டு பகுதிக்குள் ஆடுகளை தேடி சென்றனர்.

அப்போது அங்கு ஒரு ஆண் உடல் கழுத்து, கை உள்பட பல இடங்களில் வெட்டுக்காயங்களுடன் அழுகிய நிலையில் கிடந்தது. இதனையடுத்து அவர்கள் ஊத்துமலை போலீஸ் நிலைய மற்றும் பக்கத்து கிராமங்களுக்கு செல்போன்களில் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கு, ஊத்துமலை இன்ஸ்பெக்டர் செந்தாமரை கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவரது சட்டை பையில் இருந்த ஓட்டுனர் உரிமத்தில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள கெங்குவார்பட்டியை சேர்ந்த ஜெகதீஸ்(39) என தெரியவந்தது.

இவர் சொத்து தகராறு? அல்லது பெண் தகராறில் கடத்தி வெட்டிக்கொலை செய்யப்பட்டாரா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். 5 நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதால் அவரது உடல் அழுகிய நிலையில் உள்ளதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இன்று காலையில் அந்த இடத்திலேயே டாக்டர் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.

தொடர்ந்து இந்த சம்பவம்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. திண்டுக்கல் மாவட்டம் கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் நல்லமலை. தே.மு.தி.க. பிரமுகரான இவர் கொடைக்கானலில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நெல்லை, சுரண்டை பகுதியை சேர்ந்த சிலரிடம் பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டு உள்ளார்.

கொடுக்கும் பணத்துக்கு இரட்டிப்பாக பணம் தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய பலர் நல்லமலையிடம் பணம் கொடுத்துள்ளனர். கொடுத்த பணத்துக்கு நல்லமலை சொன்னபடி இரட்டிப்பாக்கி பணம் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். இதனால் பணம் கொடுத்தவர்கள் பலமுறை நல்லமலையிடம் கேட்டுள்ளார்கள். எனினும் அவர் கொடுக்க மறுத்ததால் பணத்தை இழந்தவர்கள் நல்லமலையை அழைத்து பேச முடிவு செய்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பணம் கொடுத்து ஏமாந்தவர்களில் 6 பேர் நல்லமலையுடன் போனில் பேசினர். அப்போது அவர்கள் தங்களிடம் மேலும் 10 லட்சம் பணம் இருப்பதாகவும், ராஜபாளையம் வந்தால் பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்கள். இதை நம்பிய நல்லமலை தனது காரில் ராஜபாளையம் வந்துள்ளார். காரை டிரைவர் கொலை செய்யப்பட்ட ஜெகதீஷ் ஓட்டியுள்ளார்.

ராஜபாளையம் அருகே வந்ததும் 6 பேரை நல்லமலையை சந்தித்து பேசி பணம் தருவதாக கூறி ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை பகுதிக்கு கடத்தி வந்தனர்.

ஊத்துமலை மலையில் இருந்து வன்னிகோனேந்தல் செல்லக்கூடிய சாலை அருகே வைத்து அவர்கள் 6 பேரும் தாங்கள் கொடுத்த பணத்தை நல்லமலையிடம் கேட்டுள்ளார்கள். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த நல்லமலை தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் பணம் கேட்டவர்களை நோக்கி சுட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 6 பேரும் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் நல்லமலையை வெட்டினர்.

உடனே டிரைவர் ஜெகதீஷ் பாய்ந்து தடுத்தார். இதனால் 6 பேரும் ஜெகதீசை சரமாரியாக வெட்டி உள்ளனர். உடனே நல்லமலை அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். நேராக ஊத்துமலை போலீஸ் நிலையத்துக்கு சென்ற அவர் தன்னையும் டிரைவரையும் கும்பல் வெட்டிய விவரத்தை கூறினார். இதையடுத்து நல்லமலையை போலீசார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இதனிடையே பலத்த வெட்டுக்காயம் அடைந்த ஜெகதீஷ் ரத்தவெள்ளத்தில் சாய்ந்தார். அவரை அப்படியே காட்டுக்குள் போட்டுவிட்டு 6 பேர் கும்பல் நல்லமலையின் காரில் தப்பி ஓடிவிட்டது. வெட்டுக்காயம் பட்ட ஜெகதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் கடந்த 5 நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது. மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே நல்லமலையின் கார் சுரண்டை பகுதியில் ஒரு இடத்தில் நிற்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. காரை போலீசரர் கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Post a Comment

Protected by WP Anti Spam