By 8 March 2016 0 Comments

உடலை குளுமையாக்கும் முலாம் பழம்…!!

s77ZO0hvmu-615x359உடலை குளுமையாக்கும் முலாம் பழம்…!

‘பருவகாலத்துக்கு ஏற்ப இயற்கை நமக்கு அளிக்கும் சில பழங்களைத் தவிர்த்து, எப்போதும் எங்கேயும் கிடைக்கும் ‘எவர்க்ரீன்’ பழங்களுக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது முலாம்பழம். இதை நறுக்கியதும் நாசியைத் துளைக்கும் மணமும் பளீர் ஆரஞ்சு நிறமுமே ஈர்க்கும். முலாம் பழத்தின் சத்துக்கள், சிறப்புகள் குறித்து கோவை சித்த மருத்துவர் சசிகலாவிடம் கேட்டோம்.

‘முலாம்பழம் என்றவுடன் நினைவுக்கு வருவது, அதன் மிகுந்த இனிப்பும் சுவையும்தான். நம் மண்ணின் பழமான இது, வெள்ளரிக் குடும்பத்தைச் சார்ந்தது. வெள்ளரிக்காயைப் போன்றே இதுவும் அதிக நீர்ச்சத்தையும், பயன்களையும் கொண்டது. உடலில் குளிர்ச்சியை உண்டாக்கும்.

உடலிலுள்ள வெப்பத்தை உடனடியாகப் போக்கும் தன்மை உடையதால் அதிக உஷ்ணம் உள்ளவர்கள் எப்போதும் உட்கொள்ளலாம். அதுவும், இந்த கோடைக் காலத்தில் முலாம்பழத்துக்கே முதல் இடம். பழத்தில் 60 சதவீகிதம் நீர்ச்சத்து இருப்பதால் சிறுநீர் பெருக்கியாகச் செயல்படும். உடலின் இயல்பான வளர்சிதை மாற்றத்திலும் முக்கியப் பங்கு வகிக்கும். தாதுக்கள் நிறைந்திருப்பதால், உடல் உரமாக்கியாகவும் செயல்படும்.

சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதனை உண்டால், உடனடித் தீர்வு கிடைக்கும். நீர்வேட்கையும் தணியும். சித்த மருத்துவத்தில், முலாம்பழ விதைகள் தனியே எடுக்கப்பட்டு உலர்த்தி, அரைக்கப்பட்டு மருந்துப் பொருட்களுடன் சேர்த்தும் தரப்படுகிறது. காரணம், இதன் விதைகளுக்கு வயிற்றுப் புழுக்களைக் கொல்லும் சக்தி உண்டு. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்னைக்கும் இது நல்ல நிவாரணி.

சரியான உணவுப்பழக்கமின்மை, அதிகம் மருந்துகள் எடுத்துக்கொள்ளுதல் ஆகியவற்றால் பலருக்கும் வயிற்றுப்புண் எனப்படும் அல்சர் பிரச்னை இருக்கும். இவர்கள் இந்தப் பழத்தைத் தொடர்ந்து சில நாட்கள் சாப்பிட்டுவந்தால், வயிற்றுப் புண் பூரண குணமடையும். மிகச் சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுவதால், மலக்கட்டு பிரச்னையும் நீங்கும்

உடலுக்கு பல நன்மைகளைத் தந்தாலும், இந்தப் பழத்தை ஒரு சிலர் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக இது அதிகக் குளிர்ச்சியானது என்பதால், மிக விரைவில் உடலில் கபத்தை தூண்டக்கூடியது. எனவே, எளிதில் சளிப்பிடிக்கும் குழந்தைகளுக்கு, குளிர்காலங்களில் முலாம்பழம் தருவதைத் தவிர்க்கலாம். ஏற்கனவே கபப் பிரச்னை உள்ள பெரியவர்கள், ஆஸ்துமா, மூச்சிறைப்பு உள்ளவர்கள் இதைத் தவிர்க்கவேண்டும். கழுத்து வலி, இடுப்பு வலி, மூட்டு வலி, மூட்டுத் தேய்மானங்கள் ஆகியவை அனைத்தும் வாதப் பாதிப்புகளே. எனவே, வாதத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். இந்தக் குறைபாடு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

இதனை அப்படியே சாப்பிடுவதை விட, சாறாக்கிப் பருகுவது இன்னும் சுவையாக இருக்கும். முலாம்பழச் சாறை எளிதில் தயாரிக்கவும் முடியும் என்பதால் அடிக்கடி எடுத்து கொள்ளலாம்.”
முலாம்பழச் சாறு

தேவையானவை: முலாம்பழம் – 1, பால், சர்க்கரை அல்லது தேன் – தேவையான அளவு.
செய்முறை: முலாம்பழத்தினை நன்கு தோல் சீவி விதைகளை எடுத்துவிட்டு, சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பழத் துண்டுகளை மிக்ஸியில் போட்டு, பால், சர்க்கரை அல்லது தேன் சேர்த்து அரைக்கவும். முலாம்பழச் சாறு தயார். இதில் அதிகம் குளுக்கோஸ் இருப்பதால், உடனடியாக ஆற்றலை அளிக்கும் என்பது சிறப்பு.Post a Comment

Protected by WP Anti Spam