By 15 March 2016 0 Comments

பொள்ளாச்சி என்ஜினீயரிங் மாணவர் கொலை: பெண்ணின் தந்தை கோர்ட்டில் சரண்…!!

b5a13fc2-5294-46de-8e25-2826b41f41cd_S_secvpfதர்மபுரி இளவரசன், திவ்யா காதல் விவகாரமும், அதன் தொடர்ச்சியாக இளவரசன் மர்மமான முறையில் பலியான சம்பவமும் மறக்க முடியாதவையாகவே இன்னமும் உள்ளன. வெவ்வேறு சாதிகளை சேர்ந்த இளவரசனும், திவ்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டதும், அதன் பின்னர் நடந்த கலவர தீயில் காதல் கருதியதும் அப்போது கண்ணீரை வரவழைப்பதாகவே மாறிப் போய் இருந்தது. அந்த சம்பவத்தை அப்படியே நினைவுபடுத்தும் வகையில் உடுமலைப்பேட்டையில் சாதி மாறி திருமணம் செய்து கொண்ட என்ஜினீயரிங் மாணவர் சங்கர், நடுரோட்டில் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கொங்கு மண்டலத்தில் கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்லை சேர்ந்த சின்னச்சாமியின் மகள் கவுசல்யா. திருப்பூர் மாவட்டம் மடத்துகுளம் குமரலிங்கம் சாவடியில் டைல்ஸ் நிறுவனம் ஒன்றில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். இவரும், அதே ஊரைச் சேர்ந்த என்ஜினீயரிங் மாணவரான சங்கரும் காதலித்தனர்.

இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள். இந்த காதலுக்கு திண்டுக்கலில் வசித்து வந்த கவுசல்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் தான் கொண்ட காதல் மீதும், காதலன் சங்கர் மீதும் கவுசல்யா உயிராய்…. உறுதியாய் இருந்தார். இறுதியில் காதல் ஜெயித்தது. சங்கரும், கவுசல்யாவும் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர், சங்கரின் சொந்த ஊரான குமரலிங்கம் சாவடியிலேயே வசித்து வந்தனர். இதனால் கவுசல்யாவின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சங்கரை பிரிந்து தங்களுடன் திண்டுக்கலுக்கு வந்து விடுமாறு வற்புறுத்தி வந்தனர். ஆனால் இதற்கு கவுசல்யா சம்மதிக்க வில்லை.

காதல் கணவருடன் வாழ்வதில் அவர் உறுதியாக இருந்தார். அந்த உறுதியே காதல் கணவரான சங்கரின் உயிருக்கு எமனாக மாறும் என்று கவுசல்யா கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

அவரது கண் எதிரே சங்கர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு விட்டார். அந்த வீடியோ காட்சிகள் செல்போனில் வாட்ஸ்–அப் வழியாக மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

மிகவும் துணிச்சலுடன் மோட்டார் சைக்கிளில் வந்து பொதுமக்கள் முன்னிலையிலேயே சரமாரியாக சங்கரை வெட்டிக்கொலை செய்யும் 3 பேர் சர்வசாதாரணமாக தப்பிச் செல்கின்றனர்.

உடுமலை பஸ் நிலையம் அருகே பொதுமக்கள் கண் முன்பு நடந்த இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். ஒரு சிலர் தடுக்க முயன்றனர். அவர்களை அரிவாளால் மிரட்டிய கும்பல் சாவகாசமாக மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பியது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த சங்கர், கவுசல்யாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே சங்கர் இறந்தார். கவுசல்யா கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் நடந்த வணிக வளாகம் முன்பு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் கொலை கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்து சங்கர், கவுசல்யாவை அரிவாளால் வெட்டும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இவை பதறவைக்கும் வகையில் உள்ளது.

கவுசல்யாவின் குடும்பத்தினர் தூண்டுதலில் கூலிப்படையினர் இந்த சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது தெரியவந்துள்ளதாக தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பல்லடம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்பட பல்வேறு இடங்களுக்கு விரைந்துள்ளனர்.

சங்கரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திரண்டுள்ளனர். கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி வருவதால் பதட்டமான சூழல் நிலவுகிறது.

இச்சம்பவத்தையடுத்து சாலைமறியல், தர்ணா போராட்டம் உடுமலையில் பதட்டம் பற்றிக் கொண்டுள்ளது.

இதற்கிடையே கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி நிலக்கோட்டை கோர்ட்டில் இன்று காலை மாஜிஸ்திரேட்டு ரிஜானா பர்வீன் முன்னிலையில் சரணடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து சின்னச்சாமியை சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர்.

இக்கொலை சம்பவத்தை அரசியல் கட்சி தலைவர்கள் கண்டித்துள்ளனர். இந்த கவுரவ கொலையில் ஈடுபட்டவர்களை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது. சாதி மாறி திருமணம் செய்ததற்காக பெண்ணின் தந்தையே மகளின் கணவரை கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.Post a Comment

Protected by WP Anti Spam