போத்தனூரில் பெண்ணை தாக்கி 36 பவுன் நகை – பணம் கொள்ளை…!!
கோவையை அடுத்துள்ளது போத்தனூர். இங்குள்ள ஜோதி நகரைச் சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி கவுரி(வயது 60). இவர்களுக்கு பாபு, பிரபு என்ற 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. ஒருவர் குனியமுத்தூரிலும், மற்றொருவர் வெள்ளலூரிலும் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காரைக்காலில் உள்ள நடராஜின் உறவினர் இறந்து விட்டார். இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள நடராஜன் அங்கு சென்று விட்டார். கவுரி மட்டும் வீட்டில் தனியே இருந்தார்.
இன்று அதிகாலை கழிவறைக்கு செல்வதற்காக கவுரி வீட்டுக்கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார். அந்த சமயத்தில் 2 வாலிபர்கள் வீட்டுக்குள் புகுந்து பதுங்கிக் கொண்டனர்.
கவுரி வீட்டுக்குள் வந்ததும் அந்த 2 வாலிபர்களும் கவுரியை தாக்கி அவரது கைகளை கட்டினர். பின்னர் அவர் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலி, கைகளில் கிடந்த வளையல் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த நகை மற்றும் ரொக்கம் ரூ.12 ஆயிரம் ஆகியவற்றை வாரிச் சுருட்டிக் கொண்டனர். கொள்ளையர்கள் சுருட்டிய நகைகளின் எடை 36 பவுன். கொள்ளையர்கள் தப்பிச் செல்லும் போது வெளிப்பக்கமாக கதவை பூட்டிவிட்டுச் சென்றனர்.
கொள்ளையர்கள் சென்ற பின்னர் கவுரி சத்தம் போட்டார். அவரது அபயக்குரல் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிவந்தனர். அவர்கள் கவுரியின் கைகளில் கட்டப்பட்டிருந்த கட்டுகளை அவிழ்த்து விட்டனர்.
துணிகர கொள்ளை குறித்து கவுரி போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். கைரேகை நிபுணர்களும் விரைந்து வந்து அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.
கடந்த சில மாதங்களாக போத்தனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள்.
இன்று பெண்ணை தாக்கி கட்டிப்போட்டு நகை–பணத்தை பறித்துச் சென்றிருக்கிறார்கள். தொடர்ந்து நடைபெறும் கொள்ளை சம்பவங்கள் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
தலைமறைவான கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.