திருச்சியில் பெல் ஊழியர் உள்பட 3 பேரை வெட்டி சாய்த்த என்ஜினீயர்: விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி..!!
திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் எழில் நகர் ரோஜா தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் எழில்வேந்தன் (வயது 30). என்ஜினீயரிங் படித்துள்ள இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (62), ஓய்வு பெற்ற பெல் ஊழியர்.
இந்த நிலையில் இன்று காலை எழில்வேந்தன், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு, ராதாகிருஷ்ணன் வீட்டிற்குள் புகுந்தார். திடீரென அவர் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி சுஜாதா, மருமகள் நிஷாதேவி ஆகியோரை சரமாரி அரிவாளால் வெட்டினார். உடலில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த 3 பேரும் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தனர். இதையடுத்து எழில்வேந்தன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதனிடையே 3 பேரின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் வீட்டிற்கு விரைந்து சென்றனர். பின்னர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெல் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 3 பேரையும் அரிவாளால் வெட்டி சாய்த்த எழில்வேந்தன் திடீரென விஷம் குடித்து விட்டார். அவரை பொதுமக்கள் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மருமகளை எழில்வேந்தன் அரிவாளால் வெட்டி தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் என்னவென்று தெரிய வில்லை.
முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொல்ல முயன்றாரா? அல்லது சைக்கோவாக மாறி இந்த செயலில் ஈடுபட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராதாகிருஷ்ணனின் மகன் ஹரிஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.