மாநில அரசுகளுக்கு மன்மோகன்சிங் யோசனை

Read Time:7 Minute, 12 Second

manmohan-20.jpgநக்சலைட்டுகளை ஒடுக்க விசேஷ படையை உருவாக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு பிரதமர் மன்மோகன்சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். வைரஸ் போன்ற நக்சலைட் தீவிரவாதத்தை அழிக்கும்வரை அமைதியாக இருக்க முடியாது என்று அவர் கூறினார். முதல்-மந்திரிகள் மாநாடு உள்நாட்டு பாதுகாப்பு குறித்த மாநில முதல்-மந்திரிகள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் மாநில முதல்-மந்திரிகள், மாநில அரசின் தலைமைச் செயலாளர்கள், போலீஸ் டி.ஜி.பி.கள், துணை ராணுவப்படை தலைவர்கள், உளவு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது:- இடதுசாரி தீவிரவாதம், நேபாளத்தில் இருந்து ஆந்திரா வரை பரந்து விரிந்துள்ளது. நக்சலைட்டுகள், தங்களது எல்லைகளை விரிவுபடுத்துவதில் வெற்றி பெற்றுள்ளனர் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். அழிக்க வேண்டும் சமீபத்தில், சத்தீஷ்காரில் ஜெயிலை உடைத்து தீவிரவாதிகளை மீட்டுச் சென்றுள்ளனர். இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல. நக்சலைட்டுகளின் வன்முறை இல்லாத நாளே இல்லை என்ற அளவுக்கு ஆகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளில் நக்சலைட்டுகளின் தாக்குதல்களை கவனித்து பார்த்தால், அவர்கள் பொருளாதார வசதிகளையும், முக்கிய தலைவர்களையும் குறிவைத்து தாக்குவதை உணர்ந்து கொள்ளலாம். இந்த வைரஸை அழிக்கும்வரை நாம் அமைதியாக இருக்க முடியாது. விசேஷ படை எல்லா வழிமுறைகளையும் பயன்படுத்தி நக்சலைட் தீவிரவாதத்தை நாம் அழிக்க வேண்டும். இதற்காக மாநில அரசுகள் விசேஷ படையை உருவாக்க வேண்டும். இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் தேவையான ஒத்துழைப்பை அளிக்கும். மேலும், மாநில அரசுகள் ஒன்றுக்கொன்று இணைந்து கூட்டு நடவடிக்கையிலும் ஈடுபடலாம்.

சத்தீஷ்காரில் நக்சலைட் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய ஜெயிலில் 3 ஊழியர்கள் மட்டுமே இருந்ததாக கேள்விப்பட்டேன். இதுபோல், குறைந்த எண்ணிக்கை கொண்ட, பயிற்சியற்ற, ஆயுதம் இல்லாத போலீசாரை கொண்டு நக்சலைட் தீவிரவாதிகளை எதிர்கொள்ள முடியாது. நக்சலைட்டுகள் நவீன ஆயுதங்களுடன் இருக்கிறார்கள்.

யோசனை

ஆகவே, நக்சலைட்டுகளுக்கு கட்டமைப்பு வசதிகள் வரும் வழியை அடைக்க வேண்டும். அவர்களின் கொள்கைகளால் இளைஞர்கள் ஈர்க்கப்படுவதை தடுக்க வேண்டும். பின்தங்கிய நிலைமை மற்றும் வறுமையால் நக்சல் தீவிரவாதம் பரவுகிறது. ஆகவே, நக்சலைட் தீவிரவாதம் நிறைந்த மாவட்டங்களில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும். நக்சலைட்டுகளிடம் இருந்து பொதுச்சொத்துகளை பாதுகாக்க வேண்டும்.

தீவிரவாதம்

நக்சலைட் தீவிரவாதம், ஒருசில பகுதிகளில்தான் உள்ளது. ஆனால் பயங்கரவாதம் அனைத்து மாநிலங்களையும் பாதித்துள்ளது. இந்த ஆண்டில் ஐதராபாத், ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய இடங்களில் பெரிய அளவில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. இன்னும் தாக்குதல்கள் தொடரும் என்று உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

தீவிரவாதிகள் ஏராளமான வசதிகளுடன் திட்டமிட்ட முறையில் தாக்குதல்கள் நடத்துகிறார்கள். அவர்களின் தொடர்புகள், சர்வதேச எல்லைகளை தாண்டி செல்கிறது. அவர்கள் நம்நாட்டில் ஆதரவாளர்களை தேர்வு செய்யாதபடி, நாம் தடுக்க வேண்டும். தீவிரவாதிகள், அப்பாவி மக்களை குறிவைக்கிறார்கள். இதை தடுக்க கண்காணிப்பு மற்றும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

தீவிரவாதத்தை அனைத்து வழிகளிலும் எதிர்த்து போராட மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக உளவு அமைப்புகளை மேம்படுத்த வேண்டும். மத்திய-மாநில அரசுகளிடையே சிறப்பான ஒருங்கிணைப்பு உருவாக வேண்டும். போலீஸ் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்க விசேஷ வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். இவற்றுக்கெல்லாம் நிறைய செலவாகும் என்பது உண்மைதான். ஆனால் பொதுமக்களின் பாதுகாப்புக்காக நாம் இந்த செலவை ஏற்க வேண்டும்.

பொதுமக்கள் பங்கு

தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்களும் பங்கேற்க வேண்டும். பல நேரங்களில் பொதுமக்கள் முன்கூட்டியே தெரிவித்த தகவலால்தான், மிகப்பெரிய அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டு உள்ளன.

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உணரும்வகையில், போலீசாரின் சாதாரண பணிகளை மேம்படுத்த வேண்டும். இது பொதுமக்களின் சாதாரண எதிர்பார்ப்புதான். இருப்பினும், இந்த அடிப்படை நோக்கத்தை நிறைவேற்றுமாறு போலீசாரை காவல்துறையினர் அறிவுறுத்த வேண்டும். பொதுமக்கள், போலீசாரை நண்பர்களாக கருதும் நிலை உருவாக வேண்டும்.

காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நிலைமை முன்னேறி உள்ளது. மணிப்பூர், நாகாலாந்து மாநிலங்களில் மட்டும் தீவிரவாதம் தொடருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும்.

இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மசூதியில் குண்டுவெடிப்பு
Next post தமிழ்நாட்டில் மழைக்கு மேலும் 21 பேர் பலி சாவு எண்ணிக்கை 48 ஆக உயர்வு