இந்தியாவிடம் ‘சாம்-7’ ஏவுகணைகள் கேட்ட இயக்கங்கள்!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 71) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!

Read Time:20 Minute, 1 Second

timthumbஈழம் கம்யுனிஸ்ட்

ஈழம் கம்யுனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர் பாலசுப்பிரமணியம். அவர் முன்னர் ஜே.வி.பியில் முக்கிய பிரமுகராக இருந்தவர்.

ஜே.வி.பி ஈழக்கோரிக்கையை ஆதரிக்கவில்லை. அதனால் தனி இயக்கம் தொடங்குவதாகக் கூறி ஈழம் கம்யுனிஸ்ட் கட்சியை ஆரம்பித்தவர் பாலசுப்பிரமணியம்.

இயக்கங்களில் சேர விரும்பிய இளைஞர்கள் பலருக்கு யாருடன் தொடர்பு கொள்வது என்று தெரிந்திருக்கவில்லை.

எந்த இயக்கத்தில் இணைந்தாவது ஆயுதம் ஏந்திப்போராடவேண்டும் என்பதுதான் 1983 கலவரத்தின் பின்னர் தமிழ் இளைஞர்களின் எண்ணமாக இருந்தது.

அந்த மனநிலை பாலசுப்பிரமணியம் போன்றவர்கள் இயக்கம் நடத்தி ஆள் திரட்டவும் வசதியாகப்போனது.

இளைஞர்களையும், பெண்களையும் திரட்டிக்கொண்டு ஆயுதப்பயிற்சி கொடுக்க தமிழ்நாட்டுக்குச் சென்றார் பாலசுப்பிரமணியம்.

அங்கு அவரது நடத்தை சரியில்லை: இளைஞர்கள் பலர் விலகினார்கள்.

கேரள மாநிலத்திற்கு சென்ற பாலசுப்பிரமணியம் தன்னை நம்பிச்சென்ற பெண்களை தவறான முறையில் கையாளத் தொடங்கினார்.

ஏனைய இயக்கங்களுக்குப் பயந்து தலைமறைவானார். அத்தோடு ஈழம் கம்யுனிஸ்ட் கட்சியின் கதையும் முடிந்தது.

வரையறைக்குள் வழங்கப்பட்ட இந்தியாவின் ஆயுதங்கள்

1986 இன் மத்திய பகுதியில் விமானத் தாக்குதல்கள் அதிகரித்தன. பொம்பர்கள் அடிக்கடி தாழப்பறந்து குண்டுகளை வீசின.

ஹெலிகொப்டரிலிருந்து துப்பாக்கிப் பிரயோகங்கள் செய்யப்பட்டன.

இயக்கங்கள் தரையிலிருந்து எல்.எம்.ஜி துப்பாக்கி மூலமாக ஹெலியை நோக்கி தாக்குதல் தொடுத்தன.

எல்.எம்.ஜியின் சுடுதூரத்துக்கப்பால் உயரே நின்று ஹெலிகொப்டர்கள் தாக்குதல் நடத்தியதால் இயக்கங்களின் தாக்குதல்களால் அவற்றுக்கு பாதிப்பிருக்கவில்லை.

விமான எதிர்ப்பு ஆயுதங்கள் இருந்தால்தான் வான்மூலமான தாக்குதலை முறியடிக்கலாம் என்று இந்தியாவிடம் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் கேட்கப்பட்டது.

இந்தியா அவற்றை வழங்குவதற்கு தயக்கம் காட்டியது.

ஈழப்போராளி இயக்கங்களுக்கு கனரக ஆயுதங்கள், விமான எதிர்ப்பு ஆயுதங்கள் என்பவற்றை வழங்குவதற்கு இந்திய அரசு விரும்பவில்லை.

இந்தியா நினைத்திருந்தால் தம்மால் ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்ட ஐந்து பிரதான இயக்கங்களுக்கும் குறைந்த பட்சம் விமான எதிர்ப்பு ஆயுதமான ‘சாம்-7’ஐ தலா ஒன்றுவீதம் வழங்கியிருக்கமுடியும்.

ஆனால், இறுதிவரை அதனை இந்தியா வழங்க முன்வரவில்லை.

ஈழப்போராளி இயக்கங்களின் ஆயுதபலம் ஒரு வரையறைக்குள் இருப்பதையே இந்திய அரசு விரும்பியிருந்தது என்று நினைக்கக் கூடியதாக இருக்கிறது.

இந்திய அரசிடம் ஐந்து இயக்கங்களும் ஆயுதப் பயிற்சி பெற்று திரும்பியதும் முதற்கட்டமாக குறிப்பிட்டளவு ஆயுதங்கள் வழங்கப்பட்டன.

பயிற்சி பெற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே முதற்கட்டமாக வழங்கப்பட்ட ஆயுதங்களின் எண்ணிக்கையும் இருந்தன.

அதனால் ரெலோ இயக்கத்திற்கு ஏனைய நான்கு இயக்கங்களைவிடவும் கூடுதலான ஆயுதங்கள் கிடைத்தன. ஐந்து இயக்கங்களுக்குள் குறைந்தளவான ஆயுதங்கள் கிடைத்தது ஈரோஸ் இயக்கத்திற்கே.

முதற்கட்டமாக வழங்கப்பட்ட ஆயுதங்களில் உப-இயந்திரத் துப்பாக்கிகள், ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் போன்றவையே இருந்தன. எல்.எம்.ஜி. போன்ற ஆயுதங்கள் தலா ஒன்றுதான் வழங்கப்பட்டன.

இந்திய உலவுப்பிரிவான ‘றோ’ மூலமாகவே ஆயதங்கள் தமிழ்நாட்டில் வைத்து வழங்கப்பட்டன.

கடற்கரையோர பகுதிக்கு வேனுடன் வரச்சொல்லுவார்கள். அந்தப் பகுதி ஆள் நடமாட்டமில்லாத பகுதியாக இருக்கும். அங்கு வைத்து ஆயுதங்களை கையளிப்பார்கள் ‘றோ’ அதிகாரிகள்.
முன் ஜாக்கிரதை

இந்தியாவும் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை சொந்தமாக உற்பத்தி செய்தது. அவை தரத்தில் உயர்ந்தவையாகவும் இருந்தன.

எனினும், தனது சொந்த உற்பத்திகளான ஆயுதம் எதனையும் இயக்கங்களுக்கு வழங்காமல் ஜாக்கிரதையாக இருந்தது இந்தியா.

இந்திய எல்லைப்பகுதியில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், மற்றும் வெளிநாடுகளில் வாங்கப்பட்ட ஆயுதங்கள் என்பவற்றையே இயக்கங்களுக்கு வழங்கியது இந்தியா.

இயக்கங்களின் ஆயுதங்கள் இலங்கை அரசின் கையில் மாட்டினால் அவை இந்தியாவின் தயாரிப்புக்களாக இருக்கும் பட்சத்தில் இராஜதந்திர பிரச்சனைகள் தோன்றும்.

இந்தியா ஆயுதம் வழங்கியது ஆதாரபூர்வமாக வெளிப்படையாகிவிடும் என்பதால்தான் முன்ஜாக்கிரதையாக நடந்தது இந்தியா.

இந்தியா மட்டுமல்ல, பிறிதொரு நாட்டுக்குள் இயக்க போராட்ட அமைப்புக்களுக்கு இரகசியமாக ஆயுத உதவி செய்யும் எந்தவொரு நாடும் தனத சொந்த ஆயுதங்களை வழங்குவதில்லை.

இரண்டாம், மூன்றாம் கட்டமாக ஆயுதங்கள் வழங்கியபோது இயக்கங்களின் ஆட்பலம் தொடர்பாக தமக்கிருந்த தகவல்களின் அடிப்படையில் ஆயுதங்களை வழங்கியது ‘றோ’.

ஒவ்வொரு இயக்கமும் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகமாகக் காட்டுவதற்கு போட்டி போட்டன.

தலைகளை எண்ணி ஆயுதம் வழங்கப்படும் என்பதால், தலைக் கணக்குக் காட்டுவதில் இயக்கத் தலைமைகளுக்குள் கடும் போட்டி.

குறிப்பாக, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., புளொட் இயக்கங்கள் மத்தியில்தான் உறுப்பினர்களின் எண்ணிக்கை காட்டுவதில் போட்டி இருந்தது.

புலிகள் அமைப்பும், ஈரோசும் அதிலிருந்து சற்று விலகியே நின்றன.

புலிகள் அமைப்பும், ஈரோஸ் இயக்கமும் உறுப்பினர் திரட்டலில் கதவுகளை அகலத்திறக்காமல் கவனமாகவே இருந்தன.

1986 இன் பிற்பகுதியில்தான் இந்தியா கலிபர் 30 ரக ஆயுதங்களை இயக்கங்களுக்கு வழங்கியது. கலிபர் 50 ரக ஆயுதம்தான் இயக்கங்கள் கேட்டிருந்தன. எனினும், கலிபர் 30 ரக துப்பாக்கிதான் வழங்கப்பட்டன.

கலிபர் 30 ரக துப்பாக்கியால் விமானங்களை தாக்க முடியும். விமானங்கள் தாழப் பறந்து வந்தால்தான் தாக்குதல் பயனளிக்கும்.

எப்படியாவது விமான எதிர்ப்பு ஆயுதமான ‘சாம்-7’ ஒன்றே ஒன்று கிடைத்தாலும் போதும் என்று இயக்கங்கள் ஒற்றைக்காலில் நின்று பார்த்தன.

இந்தியா மசியவேயில்லை.

சொந்த முயற்சி

இந்தியா சாம்-7 தரப்போவதில்லை என்று தெரிந்ததும், சொந்த முயற்சியில் வெளிநாடுகளில் விலைகொடுத்தாவது சாம்-7 வாங்க புலிகளும், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கமும் முற்பட்டன.

சாம்-7 வாங்குவதற்கு பணம் தேவை என்று யாழ்ப்பாணத்தில் புலிகள் நிதி திரட்டலில் ஈடுபட்டனர். ஈ.பி.ஆர்.எல்.எஃப்.வும் நிதி திரட்டலில் ஈடுபடத் தொடங்கியது.

அதனால், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்று தொழில் செய்த பிரபல வர்த்தகர்கள் பலர் யாழ்ப்பாணம் செல்லுவதற்கு பயந்தனர்.

அங்கு சென்றால் தம்மிடம் நிதி கேட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் அவர்கள் ஊர் செல்வதையே நிறுத்திக்கொண்டனர்.

கொழும்பில் பிரபலமான தமிழ் வர்த்தகர் ஒருவர் இரகசியமாக யாழ்ப்பாணம் சென்றார். யாழ்ப்பாணத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் அவரும் ஒரு பங்குதாரராக இருந்தார்.

இரகசியமாக செல்வதாக அவர்தான் நினைத்துக்கொண்டிருந்தாரே தவிர, அவர் யாழ்ப்பாணம் வரப்போகும் செய்தி ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது.

தனியார் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, அவர் திரும்பியபோது, இடைநடுவே வைத்து அவரை தமது வேனில் அழைத்துச் சென்றுவிட்டது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.

அவரை விடுதலை செய்வதற்கு கேட்கப்பட்ட தொகை 25 இலட்சம். அப்போது அது மிகப்பெரிய தொகைதான்.

பின்னர் 10 இலட்சம் கொடுத்துவிட்டு அவர் கொழும்பு திரும்பினார்.

அந்த நேரத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டு பிரிவாக இருந்தது.

நிதி திரட்டலில் ஈடுபட்டவர்கள் டக்ளஸ் தேவானந்தா அணியினர்தான்.

அப்போது தமிழ்நாட்டிற்கு சென்றிருந்தார் டக்ளஸ் தேவானந்தா. வெளிநாடொன்றில் ஆயுதங்களை விலைக்கு வாங்குவதற்குரிய தொடர்பு அவருக்குக் கிடைத்திருந்தது.

குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய்க்காவது ஆயுதங்கள் கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டது.

அதற்குரிய பணத்தில் ஒரு பகுதியை திரட்டுவதில்தான் டக்ளஸ் தேவானந்தா அணியினர் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

வட்டுக்கோட்டைத் தொகுதியில் அப்போது பொறுப்பாக இருந்தவர் ஜெகன் (தற்போது ஈ.பி.டி.பியில் இருக்கிறார்) காரைநகரில் மட்டும் பலர் தாமாகவே முன்வந்து கிட்டத்தட்ட பத்து இலட்சம் ரூபா வரையான நகைகளை வழங்கினார்கள்.

யாழ்ப்பாணத்தில் பணம் கேட்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பால் கொண்டு செல்லப்பட்ட வர்த்தகர்களில் சிலர் தமது ஆதரவாளர்கள் என்றும், அவர்களை விடுதலை செய்யுமாறும் புலிகள் அமைப்பினர் கோரினார்கள்.

புலிகள் இயக்க நிதிப் பொறுப்பாளர் மதன், ஈ.பி.ஆர்.எல்.எஃப். அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று ரமேசுடன் பேசினார்.

“உங்கள் ஆதரவாளர்களை நாமும் பிடிக்கமாட்டோம். எமது ஆதரவாளர்களை நீங்களும் பிடிக்க வேண்டாம்” என்றார் மதன்.

முதலில் மறுத்தாலும், பின்னர் புலிகளுக்கு ஆதரவான வர்த்தகர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டனர்.

வருமானமுள்ள ஆலயங்கள்

யாழ்ப்பாணத்தில் வருமானமுள்ள ஆலயங்களில் முதன்மையானவை நல்லூர் கந்தசுவாமி போவில், துர்க்கையம்மன் கோவில் போன்றவையாகும்.

துர்க்கையம்மன் கோவிலை திறம்பட நிர்வகித்துவந்தவர் தங்கம்மா அப்பாக்குட்டி.

அவரிடம் சென்று, ஆலய வருமானத்தில் ஒரு பகுதியை தந்துதவுமாறு கேட்டது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.

மறுப்பேதும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட பணத்தை கொடுத்தார் தங்கம்மா அப்பாக்குட்டி.

நல்லூர் கோவில் முதலாளியிடமும் கேட்டார்கள். “முன்பு போல வருமானம் இல்லை. பெரியளவில் எதிர்பார்க்காதீர்கள்” என்றார் அவர்.

“உங்களால் தரக்கூடியது எவ்வளவு?”என்று கேட்டார்கள். “என் மனைவியின் கையிலுள்ள தங்க வளையல்களைத் தருகிறேன்.” என்றார்.

“வேண்டாம், சரியாகக் கஷ்டப்படுகிறீர்கள் போல இருக்கிறது. நாங்கள் இனி உங்களிடம் பணம் கேட்கமாட்டோம்.” என்று சொல்லிவிட்டு திரும்பிவிட்டது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.

அவர்கள் சொன்ன தொனியில் மறைபொருள் இருக்கலாம் என்று பயந்து போனார் கோவில் முதலாளி.

அதனால், ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்கு நெருக்கமானவர்கள் மூலமாக தொடர்பு கொண்டு, ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்தை வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்தார்.

இதற்கிடையே டக்ளஸ் தேவானந்தா அணியினர் பரவலான நிதி திரட்டல்களில் ஈடுபட்டமை பத்மநாபா அணியினருக்கு சந்தேகத்தைக் கொடுத்தது.

தற்காப்புக் குழுக்கள்

யாழ்ப்பாணத்தில் பொதுக் கூட்டங்கள், கருத்தரங்குகள் என்பவற்றை நடத்தியதோடு, கிராமரீதியாக தற்காப்புக் குழுக்களை உருவாக்கும் வேலைகளிலும் டக்ளஸ் தேவானந்தா அணியினர் ஈடுபடத் தொடங்கினர்.

பொதுக்கூட்டங்களில் டேவிற்சன் உரையாற்றினார். தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டங்களின் பின்னர், இயக்கங்கள் எதுவும் தொகுதி ரீதியாக பொதுக்கூட்டங்கள் நடத்தியதில்லை.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பினர்தான் தொகுதி ரீதியாக பொதுக்கூட்டங்களை நடத்த் ஆரம்பித்த்னர்.

பொதுக் கூட்டங்களின் டேவிற்சன் உரையாற்றுவார். கருத்தரங்குகளில் ரமேஷ் உரையாற்றினார். இருவருமே டக்ளஸ் தேவானந்தா அணியில் இருந்தவர்கள்.

எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்து பத்மநாபா அணியினர் செய்த முடிவு இதுதான்.

தனியான இயக்கமாக செயற்பட திட்டமிட்டுவிட்டனர் டக்ளஸ் தேவானந்தா அணியினர்’ என்ற முடிவுக்குத்தான் அவர்கள் வந்தனர்.

அதனால்- ஈ.பி.ஆர்.எல்.எஃப். செயற்பாடுகளில் ஒருமித்ததன்மை இல்லாமல் போகத் தொடங்கியது.

யாழ்ப்பாணத்தில் கோப்பாயில்வைத்து மோட்டார் சைக்கிள் ஒன்றை கடத்தினார்கள் இரண்டு இளைஞர்கள்.

அந்த வழியால் வந்த புலிகள் இயக்கத்தினர் அவர்கள் இருவரையும் பிடித்துவிட்டார்கள்.

முதலில் தாம் யார் என்பதை இருவரும் சொல்லவில்லை. அதனால் அடி விழுந்தது. பின்னர்தான் தாங்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினர் என்று அவர்கள் சொன்னார்கள்.

புலிகள் யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளர் திலீபன்தான் அவர்கள் இருவரையும் விசாரித்தார்.

இருவரும் திலீபனிடம் சொன்னார்கள்- “எங்களை டக்ளஸ் தேவானந்தா ஆட்களிடம் கொடுக்க வேண்டாம். நாங்கள் பத்மநாபாவின் ஆட்கள்.”

திலீபன் உடனே தமது உறுப்பினர்கள் இருவரை ரமேசிடம் அனுப்பினார். “உங்கள் ஆட்கள் இரண்டுபேர் இருக்கிறார்கள். உங்களிடம் அனுப்ப வேண்டாம் என்கிறார்கள். நேரடியாக வந்து அழைத்துச் செல்லுங்கள்” என்று சொல்லியனுப்பி இருந்தார்.

இயக்கத்தின் தலைமைப்பீடத்தில் பிரச்சனைகள் இருப்பதைவைத்து, கட்டுப்பாட்டை மீறி நடர்பவர்களும் பயன் அடைந்து கொள்ள முற்படுவது வழக்கம்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்திற்குள் ஏற்பட்ட பிரச்சனையின்போது உறுப்பினர்கள் சிலர் அவ்வாறுதான் நடந்து கொண்டார்கள்.

முஸ்லிம்கள் மீது தாக்குதல்

பேசாலைக் கடலில் ஐந்து படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.

தள்ளாடி முகாமில் இருந்து மூன்று படகுகளில் வந்த இராணுவத்தினரே தாக்குதலில் ஈடுபட்டனர்.

1.7.86 அன்று நடைபெற்ற அந்த சம்பவத்தில் 5 முஸ்லிம் மீனவர்களும், ஒரு தமிழ் மீனவரும் கொல்லப்பட்டனர்.

திராவிடர் கழகத் தலைவர் அமரர் தந்தை பெரியாரை இலங்கைத் தமிழர் தலைவர் தந்தை செல்வா சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சென்றவாரம் வெளியாகி இருந்தது. திராவிடர் கழகம் என்பதற்கு பதிலாக திராவிர் முன்னேற்றக் கழகம் என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டு விட்டது.

தமிழ் நாட்டின் அன்றைய ஆளுநரை தந்தை செல்வா சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இங்கு காணப்படுகின்றது. இந்திய அனுதாபத்தை திரட்டுவதில் தந்தை செல்வா கூடிய கரிசனம் காட்டியிருந்தார்.

கடைசிக்கட்டப் போரில்… இப்படியான ஆயுதங்களை புலிகள் ஏன் புதைத்து வைத்தார்கள்? இவற்றை ஏன் பயன்படுத்தவில்லை என்பது கேள்விக்குறியாகும்.

கடைசிக்கட்டப் போரில்.. இலங்கை இராணுவத்தினரே உலகுக்கு காட்ட இந்தமாதிரியான ஆயுதங்களை தாங்களே புதைத்து வைத்திருந்து விட்டு, பின்பு தாங்கள் தோண்டியெடுத்து படம் காட்டினார்களோ தெரியவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொமடியை விமர்சித்ததால் ஆத்திரம்: மதுக்கிண்ணத்தால் முகத்தில் தாக்கிய கொமடியன்…!!
Next post வெளிநாட்டிலிருந்து எப்படி? பிரபாகரனின் மனைவி, பிள்ளைகள் பாதுகாப்புடன் வன்னிக்குத் திரும்பினார்கள் தெரியுமா…?