தமிழக வெள்ள சேத நிவாரண பணிகளுக்கு மத்திய அரசிடம் நிதி கேட்டு கடிதம் கருணாநிதி அறிவிப்பு

Read Time:12 Minute, 47 Second

karunanidhi.jpgதமிழக வெள்ள சேத நிவாரண பணி களுக்காக மத்திய அரசிடம் நிதி கேட்டு கடிதம் எழுத இருக்கிறோம்’ என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார். முதல்-அமைச்சர் கருணாநிதி டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:- 300 மெகாவாட் மின்சாரம் கேள்வி:- டெல்லிப் பயணம் திருப்திகரமாக இருந்ததா? பதில்:- மன நிறைவாக இருந்தது. கேள்வி:- தி.மு.க.விற்கு மேலும் வலுவூட்டத்தக்க வகையில் டெல்லியில் பேசி முடிவெடுக்கப்படும் என்று கடிதம் எழுதியிருந்தீர்கள். அதைப்பற்றி? பதில்:- தி.மு.க. என்றால், தி.மு.கழக ஆட்சியையும் குறிக்கும் அல்லவா? அதற்கு வலுவூட்டும் முகத்தான், பிரதமரிடமும், மற்றும் பல துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களிடமும், கோரிக்கைகள் வைக்கப்பட்டு, சில முக்கியமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று – உடனடி தேவையான மின்சார பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டி, உடனடியாக அதற்காக 500 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு வேண்டுமென்று கேட்டோம். அதில் 300 மெகாவாட் மின்சாரம் – நம்முடைய தேவைக்காக இப்போது ஒதுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

ஐ.ஐ.எம்.- மத்திய பல்கலைக்கழகம்

அதைப்போலவே பிரதமரிடம் வைத்த கோரிக்கை – “சென்ட்ரல் யுனிவர்சிட்டி” ஒன்று தமிழகத்திலே அமைக்கப்பட வேண்டுமென்றும் – இண்டியன் இன்ஸ்டிட்ïட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்.) ஒன்று கோவையில் அமைக்கப்பட வேண்டுமென்றும் பிரதமரிடம் வலியுறுத்தினேன். அதன் தொடர்ச்சியாக மத்திய மந்திரி அர்ஜ×ன் சிங் அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக வாக்களித்ததோடு, அவர் பத்திரிகையாளர்களை தமிழ்நாடு மாளிகையில் சந்தித்த போதும் இந்த இரண்டையும் அனுமதித்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். இவைகளையெல்லாம் நீங்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வீர்கள் என்று நான் கருதுகிறேன்.

மத்திய அரசிடம் நிவாரண உதவி

கேள்வி:- தொடர் மழை காரணமாக தமிழகத்திலே ஏற்பட்டுள்ள பாதிப்புகள், நிவாரணப் பணிகள் குறித்து?

பதில்:- மழையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை வந்துள்ள கணக்குப்படி – 49. இவர்களுக்கெல்லாம் ஒரு லட்சம் ரூபாய் வீதம் குடும்ப நிதி வழங்கப்பட்டு வருகிறது. இறந்த கால்நடைகள் 90. அவற்றில் கறவை மாடுகளுக்கு பத்தாயிரம் ரூபாய் வீதமும், கன்றுகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதமும், ஆடாக இருந்தால் ஆயிரம் ரூபாய் வீதமும் நிதியுதவி வழங்கப்படும்.

மழையினால் முழுமையாக சேதமடைந்த குடிசைகள் 1,137. ஓரளவு சேதமடைந்த வீடுகள் 2,271. நீரில் மூழ்கியுள்ள பயிர்களின் அளவு சுமார் 86 எக்டேர். உடைப்பெடுத்த ஏரிகள் 149. சாலைகளின் சேதாரம் 5,495 கிலோ மீட்டர். பாதிக்கப்பட்ட கிராமங்கள் 1,183. தண்ணீர் சூழ்ந்துள்ள கிராமங்கள் 79. மேட்டுப்பாங்கான பகுதிகளுக்கு குடிபெயர்ந்துள்ள மக்கள் 22,508. திறக்கப்பட்டுள்ள நிவாரண மையங்கள் 109.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவியாக 2000 ரூபாய், 5 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண் எண்ணெய், ஒரு வேட்டி, ஒரு புடவை வழங்கப்பட்டு வருகிறது. அமைச்சர்களும், அதிகாரிகளும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்றும் பஞ்சாயத்து, நகர்மன்ற, மாநகராட்சி மன்றங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகளும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

மொத்த இழப்பீட்டுத் தொகை எவ்வளவு என்று கணக்கிடப்பட்டு அதற்கென மத்திய அரசிடம் நிவாரண உதவி குறிப்பிட்டுக் கேட்டு கடிதம் எழுதப்படவுள்ளது.

கேள்வி:- பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி எதுவும் அளிக்கப்படுமா?

பதில்:- தற்போது நான் கூறியதெல்லாம் நிவாரண உதவிகள் தான். உதாரணமாக இறந்த கால்நடைகளுக்காக உதவித் தொகை கொடுக்கிறோம் என்றால், அது கால்நடைகளின் பெற்றோருக்கு அல்ல- அந்தக் கால்நடைகளின் உரிமையாளர்களான விவசாயிகளுக்குத் தான் அந்த உதவிப் போய்ச் சேரும்.

கேள்வி:- விவசாயிகளுக்கு வரித் தள்ளுபடி செய்வது போன்ற உதவி இடம் பெறுமா?

பதில்:- நிவாரண உதவிகளில் நீங்கள் சொல்வதும் ஒரு வகை.

தீவிரவாதம் வளருவதை தடுக்க

கேள்வி:- நேற்றையதினம் (20-12-2007) நடைபெற்ற மாநாட்டில் பேசிய சிவராஜ் பட்டீல் சமூகப் பொருளாதார உதவிகள் கிடைக்காததால் தான் இளைஞர்களிடையே தீவிரவாதம் வளருகிறது என்று சொன்னார். தர்மபுரியில் இத்தகைய சம்பவம் நடைபெற்று 25 ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு அரசு சார்பில் என்ன உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன?

பதில்:- செய்யாமல் இல்லை, செய்து கொண்டு தான் இருக்கிறோம்.

விவாதத்தின் போது

கேள்வி:- 2007-2012-ம் ஆண்டுகளுக்கான 11-வது ஐந்தாண்டுத் திட்டத் தொகை தமிழகத்திற்கு 85 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டிருந்ததை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதா?

பதில்:- மாநில அரசு கேட்டுக் கொண்டதைப் பற்றி திட்டக்குழுவின் சார்பில் ஒவ்வொரு மாநில வாரியாக தனித்தனியாக விவாதம் நடைபெறும்போது தான் எவ்வளவு தொகை என்பது இறுதியாகும்.

கேள்வி:- 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் விவசாயத்திற்கும், கிராமப்புற மேம்பாட்டிற்கும் அதிக அளவிற்கு ஒதுக்கீடு வேண்டுமென்று கேட்டிருந்தீர்களே, அதை ஏற்றுக் கொண்டார்களா?

பதில்:- எதிர்பார்க்கிறோம்.

நக்சல் ஊடுருவல் எதுவரை

கேள்வி:- நக்சல் ஊடுருவல் தற்போது எந்த அளவிற்கு இருப்பதாக உளவுத் துறை உங்களிடம் சொல்லியிருக்கிறார்கள்?

பதில்:- தேனி இங்கேயிருந்து எவ்வளவு தூரம் இருக்கிறதோ, அவ்வளவு தூரம் இருக்கிறது. தேனி வரையில் வந்த நக்சல் ஊடுருவலை நாங்கள் சமாளித்து தற்போது கண்டுபிடித்திருக்கிறோம். அதற்கு மேல் அவர்கள் வராமல் தடுக்கப்பட்டிருக்கிறார்கள். வேறு மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் அவர்களின் ஊடுருவல் குறைவு தான்.

கேள்வி:- விவசாயிகளின் கோரிக்கையான நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் கேட்டுக் கொண்டிருக்கிறார்களே, அதைப்பற்றி மத்திய அரசிடம் பேசினீர்களா?

பதில்:- மத்திய அரசு ஆயிரம் ரூபாய் என்பதைக் கொடுக்கவில்லை. மத்திய அரசை நாம் இரண்டு முறை கேட்ட போது, ஒவ்வொரு முறையும் ஐம்பது ரூபாய் வீதம், முதலில் ஐம்பது ரூபாயும், மறுபடியும் 50 ரூபாயும் என்று கொடுத்தார்கள். அதற்குப் பிறகும் தமிழக விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை வந்தது. அதை எடுத்தெடுத்துச் சொன்னோம். ஆனால் மத்திய அரசு அவர்களுடைய இயலாத நிலையைத் தெரிவித்தது. அவர்களால் இயலவில்லை என்றதும், விவசாயிகளின் நலன் கருதி நாமே குவிண்டால் ஒன்றுக்கு மேலும் ஐம்பது ரூபாய் தருவதாக ஏற்றுக் கொண்டு, தற்போது குவிண்டால் ஒன்றுக்கு 825 ரூபாய் வீதம் கொள்முதல் விலை தரப்படுகிறது.

அதிகாரத்தை பயன்படுத்தி

கேள்வி:- மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிறந்த நாள் கொண்டாடிய போது அளித்த பேட்டியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பற்றி அதிருப்தி தெரிவித்திருக்கிறாரே?

பதில்:- சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்று சொன்னால், அவரிடம் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கட்டும்.

ஜெயலலிதா பேட்டி

கேள்வி:- தென்பிராந்திய ராணுவ தளபதி நோபிள் தர்மராஜ், பிரதமரின் ஆலோசகர் எம்.கே.நாராயணன், மத்திய பாதுகாப்புத் துறையின் இணை மந்திரி ஆகியோரெல்லாம் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் நடமாட்டமோ, அச்சுறுத்தலோ, வேறு எந்தவிதமான ஆபத்தோ இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ச்சியாக விடுதலைப் புலிகளுக்கு நீங்கள் ஆதரவாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டேயிருக்கிறாரே?

பதில்:- கருணாநிதி விடுதலைப் புலிகளுக்கு எந்த ஆதரவும் தரவில்லை என்று இந்து பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தவர் தான் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர். விடுதலைப் புலிகளுக்கு அளித்த ஆதரவில் ஒரு துளி அளவு கூட கருணாநிதி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு கொடுக்கவில்லை, எம்.ஜி.ஆரும், நானும் (ஜெயலலிதாவும்) தான் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு என்று சொன்னது ஆங்கில ஏடுகளான இந்துப் பத்திரிகையிலும், எக்ஸ்பிரஸ் பத்திரிகையிலும் – ஜெயலலிதாவின் சிறப்புப் பேட்டியாக வெளிவந்திருப்பதை எடுத்து அவரே படித்துப் பார்த்துக் கொள்ளலாம்.

கேள்வி:- பகத்சிங் நூற்றாண்டு விழா தள்ளி வைக்கப்பட்டது, மீண்டும் எப்போது நடைபெறும்?

பதில்:- பகத்சிங் நூற்றாண்டு விழா பெருமழை காரணமாக சென்னையில் மட்டும் தள்ளி வைக்கப்பட்டது. எனினும் மற்ற மாவட்டத் தலைநகர்களிலும் பகத்சிங் விழா சிறப்பாக அரசின் சார்பில் நடைபெற்றுள்ளது.

அனல்மின் நிலையம்

கேள்வி:- அனல் மின் நிலையம் செய்ïரில் அமையவுள்ளதா? மரக்காணத்தில் அமையவுள்ளதா?

பதில்:- மரக்காணம், கடலூர்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அடர்ந்த காட்டில் 40 அடி ஆழ பாதாள அறைக்குள் பிரபாகரன் வசித்து வருகிறார் பாலசிங்கம் மனைவி எழுதிய புத்தகத்தில் தகவல்
Next post சார்லி சாப்ளின் வேடத்தில் நடிக்க வேண்டும்! -ஆர்யாவின் ஆசை