By 24 December 2007

தன்னை கொல்ல சார்ள்ஸ் திட்டமிட்டுள்ளதாக டயானா எழுதிய கடிதம் விசாரணைக் குழுவிடம் ஒப்படைப்பு

டயானா மர்ம மரணம் பற்றிய விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. என் கணவர் சார்ள்ஸ் காரை ஏற்றி என்னைக் கொல்ல சதி நடக்கிறது என்று டயானா தன் கைப்பட எழுதிய கடிதம் விசாரணை குழுவிடம் தாக்கல் செய்யப்பட்டது. இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸ் மனைவி டயானா கார் விபத்தில் பாரீஸ் நகரில் பலியானார். அவருடன் காரில் பயணம் செய்த அவரது காதலர் டோடி அல் பயட்டும் பலியானார். இந்த விபத்து உண்மையான விபத்து அல்ல என்றும், டயானாவை கொல்ல நடந்த சதி தான் என்றும் ஒரு சிலர் கூறி வந்தனர். இதைத் தொடர்ந்து உண்மையை கண்டறிய விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு இப்போது விசாரணையை நடத்தி வருகிறது. இந்த விசாரணை குழுவிடம் டயானா எழுதிய கடிதம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த கடிதத்தில் அவர், என்னை கார் ஏற்றி கொலை செய்ய சதி நடக்கிறது என்று எழுதி இருக்கிறார். இது இந்த விசாரணையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. டயானா இறப்பதற்கு 10 மாதங்களுக்கு முன்பு இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதாவது, 1996 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. தங்கள் குழந்தைகளின் பொறுப்பாளராக இருக்கும் லெக்கே போர்க் என்ற பெண்ணை தன் கணவர் காதலிப்பதாகவும் அவரையே அவர் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அதற்கு தடையாக இருக்கும் தான் கொல்லப்படுவேன் என்று டயானா அஞ்சினார். இந்த அச்சம் காரணமாகவே அவர் இப்படி ஒரு கடிதம் எழுதினார் என்றும் கூறப்படுகிறது.

டயானா இந்த கடிதத்தை தனது பட்லர் பால் பாரெல் வசம் ஒப்படைத்தார். அவர் இப்படி ஒரு கடிதத்தை டயானா எழுதி இருப்பதை 2003 ஆம் ஆண்டு அவர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அந்த கடிதத்தில் அவர் மேலும் கூறுகையில், `நான் என் மேஜை மீது உட்கார்ந்து இருக்கிறேன். யாராவது ஒருவர் என்னை அணைத்துக் கொள்ளமாட்டார்களா, என்னை உற்சாகப்படுத்த மாட்டார்களா என்று நான் ஏங்கிக் கொண்டு இருக்கின்றேன்’ என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.



Comments are closed.