காரியாபட்டி அருகே பஸ் தீப்பிடித்து எரிந்தது: 60 பயணிகள் உயிர் தப்பினர்…!!
மதுரையில் இருந்து அருப்புக்கோட்டைக்கு நேற்று தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ், காரியாபட்டி அருகே உள்ள வக்கணாங்குண்டு என்ற இடத்தில் மாலை 4 மணியளவில் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
அப்போது பஸ்சின் டிக்கி (பொருட்கள் வைக்கும் இடம்) பகுதியில் இருந்து ‘குபுகுபு’வென புகை வெளிவந்தது. இதை பார்த்த பயணிகள் பஸ்சை நிறுத்துமாறு அலறினர். இதைத்தொடர்ந்து பஸ் டிரைவர் செந்தில்கண்ணன் (வயது 45) உடனடியாக பஸ்சை நிறுத்தினார். கண்டக்டர் வீராச்சாமி, அனைவரும் பஸ்சை விட்டு இறங்குங்கள் என கூறினார். இதைத்தொடர்ந்து பயணிகள் பதற்றத்துடன் பஸ்சில் இருந்து இறங்கி ஓடினர். பயணிகள் அனைவரும் இறங்கி விட்ட நிலையில், பஸ் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
தகவல் கிடைத்ததும் அங்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் பஸ் முற்றிலும் எரிந்து சேதமானது.
பஸ்சில் இருந்து புகை கிளம்பியதும் பயணிகள் உடனடியாக இறங்கிவிட்டதால் பஸ்சில் இருந்த 60-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.