தெலுங்கானாவில் அனல் காற்றுக்கு 7 பேர் பலி…!!
கோடை வெயில் வழக்கமாக ஏப்ரல் மாதம்தான் உக்கிரம் அடையத் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு இந்த மாத தொடக்கத்திலேயே வெயில் தாங்க முடியாத அளவுக்கு உள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று 9 நகரங்களில் வெயில் சராசரியாக 100 டிகிரியை கடந்தது. ஏப்ரல், மே மாதங்களில் வெயில் 110 டிகிரியை எட்டி விடக்கூடும் என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை விட ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெயில் தாக்கம் மிக கொடூரமாக மாறியுள்ளது. மதிய வேளைகளில் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வதைக்கிறது.
தெலுங்கானாவிலும் ஆந்திராவிலும் அதிகபட்ச வெயில் காரணமாக அனல் காற்று வீசுகிறது. குறிப்பாக நலகொண்டா, வாரங்கல், கரீம்நகர் மாவட்டங்களில் அனல் காற்று ஏராளமானவர்களை பாதித்தது.
நேற்று மட்டும் கடுமையான வெயில் மற்றும் அனல் காற்றுக்கு 7 பேர் பலியானார்கள். அவர்களில் அனிதா, சரத் இருவரும் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
நேற்று அவர்கள் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய போது அனல் காற்றில் சிக்கி மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.
பலியான மற்றவர்கள் அப்துல்லா பீ, பாரதி, ஷேக்மவுலானா, மைசயா, நரசம்மா என்று தெரிய வந்துள்ளது. வெயில் தாக்கம் காரணமாக நீர்வறட்சி ஏற்பட்டு அவர்கள் மரணம் அடைந்ததை டாக்டர்கள் உறுதிபடுத்தினார்கள்.