குஜராத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி : 117 தொகுதிகளை கைப்பற்றியது : மீண்டும் முதல்வர் ஆகிறார் மோடி

Read Time:7 Minute, 38 Second

குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நரேந்திர மோடி மீண்டும் முதல்வர் ஆகிறார். குஜராத்தில் 182 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்தது. முதல் கட்டமாக கடந்த 11ம் தேதி 87 தெகுதிகளிலும், 2வது கட்டமாக 16ம் தேதி 95 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடந்தது. மாநிலத்தில் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் நடந்தது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே பா.ஜ.க. முன்னிலையில் இருந்தது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 117 தொகுதிகளில் பா.ஜ.க.வும், 62 தொகுதிகளில் காங்கரசும், 3 தொகுதிகளில் மற்ற கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. குஜராத் தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க 92 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் போதும். பா.ஜ.க. 117 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் மோடி தலைமையிலான அரசு மீண்டும் பொறுப்பேற்க உள்ளது. முதல்வர் நரேந்திர மோடி மணிநகர் தொகுதியில் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவர் தனக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மத்திய அமைச்சர் தின்ஷா பட்டேலை விட 87 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார். மொத்த வாக்குகளில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 668 வாக்குகள் மோடிக்கு விழுந்துள்ளது. தின்ஷா பட்டேலுக்கு 52 ஆயிரத்து 339 வாக்குகளே கிடைத்துள்ளன.

பா.ஜ.க.வின் வெற்றியை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அக்கட்சியினர் பெரும் உற்சாகத்துடன் காணப்பட்டனர். பட்டாசுள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அவர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றி குறித்து அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி தலைவர் ராஜ்நாத் சிங் மகிழ்த்தி தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வின் சித்தாந்தத்திற்கு கிடைத்த வெற்றி இது என்று அவர் கூறியிருக்கிறார்.

முதல்வர் நரேந்திரமோடியும் பா.ஜ.க.வின் வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொய்ப் பிரசாரம் முறியடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ள அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அனுப்பி உள்ள ஒரு எஸ்.எம்.எஸ்., செய்தியில் நான் சி.எம்., ஆக இருக்கிறேன்; சி.எம்., ஆகவே நீடிப்பேன்; சி.எம்., என்றால் காமன் மேன் (சாதாரண மனிதன்) என பெருள் என்று தெரிவித்துள்ளார்.

வாக்காளர்களுக்கு நன்றி : ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மோடி பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்து ஓட்டு போட்ட மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அவர் கூறுகையில் எதிர்க்கட்சியின் பொய் பிரசாரம் மக்களிடையே எடுபடவில்லை என்றார்.

மோடி தலைமையிலான பா.ஜ.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் மோடியை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். பா.ஜ.க. தலைவர் அத்வானியும் மோடியை வாழ்த்தினார். அவர் கூறுகையில், வரும் 27ம் தேதி மோடி மீண்டும் குஜரத் மாநில முதல்வராக பொறுப்பேற்க இருப்பதாக தெரிவித்தார். இதற்கிடையில் டில்லியில் நாளை பா.ஜ.க. உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா வாழ்த்து : நரேந்திய மோடி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவருக்கு வாழத்து தெரிவித்துள்ளார். போனில் மோடியிடம் பேசி வாழத்திய ஜெயலலிதா, கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். அதில், உங்களுக்குக் கிடைத்துள்ள இந்த மாபெரும் வெற்றி இந்தியாவில் உள்ள பெரும்பான்மை சமூகத்தினருக்கு பெரும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. தாங்கள் இன்னும் அனைத்தையும் இழந்து விடவில்லை. அதிகார வெறியர்களிடம் நாடு சிக்கி விடாது என்ற நிம்மதி அவர்களுக்குப் பிறந்துள்ளது. உங்களது தலைமையில், குஜராத்தில் பா.ஜ.க. பெற்றுள்ள வெற்றியால், குஜராத் மட்டுமல்லாத நாடு முழுமையும் பெரும் வளர்ச்சியைப் பெறும் என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.

தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இது பாஜகவின் மக்கள் நலத்திட்டங்களுக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் கிடைத்துள்ள வெற்றி என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரான தேசியவாதத்திற்குக் கிடைத்துள்ள வெற்றி என்றும் கூறியுள்ளார்.

காங்கிரஸ் மறுப்பு : கடந்த டிசம்பர் 1ம் தேதி குஜராத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற சோனியாதி, மோடியை மரண வியாபாரி என்று வர்ணித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. தற்போதைய தோல்விக்கு சோனியாவின் இந்த பேச்சுதான் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதனை காங்கிரஸ் மறுத்துள்ளது. டில்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கபில்சிபல், தேர்தலில் தோல்வியடைந்தாலும், குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள ஆதரவு திருப்திகரமாக இருப்பதாகவும், குஜராத் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி காங்கிரஸ் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விபச்சாரம் செய்ததாக – மலையாள நடிகை ரேஷ்மா கைது
Next post பெற்றோரிடம் வளரும் குழந்தைகளை விட தத்துப் பெற்றோரிடம் வளரும் குழந்தைகளுக்கு புத்திக் கூர்மையின் அளவு குறைவு