By 5 April 2016 0 Comments

வெளிநாடுகளில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் ரகசிய முதலீடு செய்தனரா? விசாரணை நடத்த பிரதமர் மோடி உத்தரவு..!!

201604050434559317_Panama-Papers-expose-elites-tax-havens-Modi-govt-orders_SECVPFபிரபல நடிகர் அமிதாப்பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் உள்பட 500 இந்திய பிரமுகர்கள் வெளிநாடுகளில் ரகசிய தொழில் முதலீடு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் கணக்கில் வராத சொத்துகளை மத்திய அமெரிக்க நாடான பனாமா மற்றும் உலக நாடுகள் பலவற்றில் ரகசியமாக தொழில் முதலீடு செய்து இருப்பதாகவும், வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு ‘பனாமா ஆவணங்கள்’ என்ற பெயரில் நேற்று பரபரப்பு தகவல்களை வெளியிட்டது.

கடந்த 40 ஆண்டுகளில் மட்டும் 2 லட்சத்து 14 ஆயிரம் நிறுவனங்களில் இதுபோல் முதலீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கு ஆதாரமாக 1 கோடியே 15 லட்சம் வரி ஆவணங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த பட்டியலில், இந்தியாவில் இருந்து பிரபல நடிகர் அமிதாப்பச்சன், அவருடைய மருமகளும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், டி.எல்.எப். நிறுவனத்தின் கே.பி. சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 9 பேர், கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி, இந்தியா புல்ஸ் புரோமோட்டர் சமீர் கெலாத், அப்போலோ டயர் புரோமோட்டர், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் சிஷிர் பஜோரியா மற்றும் டெல்லியைச் சேர்ந்த லோக்சத்தா கட்சியின் முன்னாள் தலைவர் அனுராக் கெஜ்ரிவால் ஆகியோர் உள்பட 500 இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்று இருக்கின்றன.

இதில் அமிதாப்பச்சன் 1993-ம் ஆண்டு 4 நிறுவனங்களின் இயக்குனராக நியமிக்கப்பட்டதாகவும் இதேபோல் 2005-ம் ஆண்டு நடிகை ஐஸ்வர்யா ராயும் அவருடைய குடும்ப உறுப்பினர்களும் அமிக் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனத்தில் இயக்குனர்களாக பதிவு செய்யப்பட்டதாகவும், தகவல் வெளியாகி இருக்கிறது. டி.எல்.எப். புரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் கே.பி.சிங், பிரிட்டிஷ் வெர்ஜீனியா தீவுகளில் 2010-ம் ஆண்டு ஒரு கம்பெனியை வாங்கியதாக பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் இதில் ரூ.65 கோடி செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விரைவில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் கட்ட கூட்டம் தொடங்கவிருக்கும் நிலையில், பனாமா ஆவணங்கள் பற்றிய தகவல் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பனாமா ஆவணங்களில் இந்தியர்களின் பெயர்கள் அதிக அளவில் இடம் பெற்றிருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து பிரதமர் மோடியுடன் நிதி மந்திரி அருண்ஜெட்லி நேற்று காலை விவாதித்தார்.

அப்போது மத்திய நேரடி வரிகள் வாரியம், ரிசர்வ் வங்கி, நிதி புலனாய்வு அமைப்பு, வெளிநாட்டு வரிகள் மற்றும் வரிகள் ஆய்வுத்துறையினர் கொண்ட குழு ஒன்றை அமைத்து இதுபற்றி தீவிரமாக விசாரிக்கும்படி பிரதமர் உத்தரவிட்டார்.

இந்த தகவலை நிருபர்களிடம் தெரிவித்த அருண்ஜெட்லி, “மத்திய அரசின் குழு தொடர்ந்து இந்த கணக்குகள் பற்றி ஆய்வு செய்வார்கள். இதில் முறைகேடாக ஏதாவது நடந்திருப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கணக்கில் வராத பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்யும் சாகசத்தில் ஈடுபடுவோர் நிச்சயம் அதற்கான விலையைக் கொடுப்பார்கள். இன்று வெளியானது போலவே இன்னும் பலருடைய பெயர்கள் வெளியாகலாம். இந்த தகவல்களை வரவேற்கிறேன். அப்போதுதான் இதன் மீது நடவடிக்கை எடுக்க முடியும்’’ என்றார்.

டெல்லியில் நேற்று நடந்த இந்திய தொழில் கூட்டமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் அருண்ஜெட்லி பேசும்போது, ‘‘வெளிநாடுகளில் பணத்தை பதுக்கும் இந்தியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உலகளாவிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2017-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியர்கள் யாரும் வெளிநாடுகளில் கணக்கில் வராத சொத்துகளை வைத்திருக்க முடியாது’’ என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையே வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை கண்டுபிடிக்க சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக்குழு வெளிநாடுகளில் இந்தியர்கள் செய்த ரகசிய தொழில் முதலீடு குறித்து முழுமையாக விசாரணை நடத்தும் என்று அதன் தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான எம்.பி.ஷா கூறினார்.

சிறப்பு விசாரணைக் குழுவின் துணைத் தலைவர் அர்ஜித் பசாயத் கூறும்போது, இந்த விசாரணைக்காக அமலாக்கத்துறை, வருமானவரி இலாகா, வருவாய் புலனாய்வு இயக்குனரகம் ஆகியவை இந்தியர்கள் செய்த முதலீடுகளை மதிப்பீடு செய்து பட்டியலாக அளிக்கும்படி கேட்டுக் கொண்டு இருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

பனாமா உள்ளிட்ட சில நாடுகளில் ரகசிய தொழில் முதலீடு செய்து இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவலை நடிகை ஐஸ்வர்யா ராய் மறுத்தார்.

இந்த செய்தியில் எந்த அளவும் உண்மை கிடையாது. இது முற்றிலும் தவறான தகவல் ஆகும் என்று அவருடைய ஊடக ஆலோசகர் குறிப்பிட்டார்.Post a Comment

Protected by WP Anti Spam