திருப்பரங்குன்றத்தில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை: போலீஸ் விசாரணை…!!
மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் கல்லால் தாக்கி வாலிபரை கொலை செய்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை அருகே திருப்பரங்குன்றம் ஆஞ்சநேயர் கோவில் வளாக பகுதியை சேர்ந்த பாண்டி மகன் சிவன்காளை (வயது31), கூலி தொழிலாளி. இவர் நேற்றிரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் திருப்பரங்குன்றம் ரெயில்வே கேட்–சந்திரப்பாளையம் இடையேயுள்ள பகுதியில் ரத்த காயத்துடன் சிவன்காளை உயிருக்கு போராடி கொண்டு இருப்பதாக திருநகர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று சிவன்காளையை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிர் இழந்தார்.
இது குறித்து திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில் நேற்றிரவு சிவன்காளை 4 நண்பர்களுடன் மது அருந்த சென்றதாகவும், அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சிவன்காளையை கல்லால் தாக்கிவிட்டு தப்பி ஓடியதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.