பெரு நாட்டில் ஆற்றுக்குள் பஸ் பாய்ந்த விபத்தில் 23 பேர் பலி…!!
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவின் தென்கிழக்கு பகுதியில் மலைப்பாதை வழியாக சென்ற பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெரு நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புவெர்ட்டோ மல்டோனாடோ நகரில் இருந்து குஸ்க்கோ என்ற பெருநகரை நோக்கி சென்ற அந்த பஸ், அன்டேஸ் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் சுமார் 60 பயணிகள் இருந்தனர். இவர்களில் பலர் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்று கொண்டிருந்தனர்.
உர்கோஸ் என்ற புறநகர் பகுதியை நெருங்கியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், மலையில் இருந்து உருண்டு, மாப்பாச்சோ ஆற்றுக்குள் பாய்ந்து, கவிழ்ந்தது. இந்த விபத்தில் 23 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 32 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் குஸ்கோ நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.