கண்ணீர் புகை குண்டு வீச்சில் வாலிபர் மரணம்…!!
காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்துக்கு உட்பட்ட ஹந்த்வாரா பகுதியில் இராணுவத்தினரை கண்டித்து நேற்று முன்தினம் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதில் கல்வீச்சு நடந்ததால் இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இதில் ஒரு பெண் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.இந்த துப்பாக்கிச்சூட்டை கண்டித்து ஹந்த்வாராவுக்கு அருகே உள்ள டிரக்மல்லா பகுதியில் நேற்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில், சுதந்திரத்துக்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதை தொடர்ந்து மாநில பொலிசாரும், பாதுகாப்பு படையினரும் சேர்ந்து போராட்டக்காரர்களை தடியடி நடாத்தி கலைக்க முயன்றனர்.
இதில் பலன் எதுவும் ஏற்படாததால், கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. இதில் ஒரு குண்டு ஜெகாங்கிர் அகமது என்ற வாலிபரின் தலையில் பாய்ந்தது.இதில் காயமடைந்த அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதற்கிடையே இராணுவத்தை கண்டித்த ஹந்த்வாரா, குப்வாரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் பதற்றத்தை தணிக்க பொதுமக்கள் பிரதிநிதிகளுடன் இராணுவம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளது.