By 26 April 2016 0 Comments

பிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள்!! (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)

timthumb (1)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் தமதுயிரை இழந்திருந்தனர்.
• 2000.04.22ஆம் திகதி ஆனையிறவு புலிகளால் கைப்பற்றப்பட்டபோது இயக்கத்தின் பல வருடக் கனவு அன்று நனவாகியது.

• பல்லாயிரக்கணக்கான உயிர்களின் குருதியில் நனைந்த ஏ9 வீதி 2002 திறக்கப்பட்டபோது புலிகள் இயக்கம் இராணுவ பலத்தின் உச்சத்தில் இருந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

• யாழ்பாணத்தையும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் பூநகரி சங்குப்பிட்டிப் பாதையூடாக ஒரு பெரும் நகர்வு மேற்கொள்ளப்பட்டது.

• இயக்கம் எதிர்பார்த்த வகையில் யாழ்ப்பாணத்தை நோக்கித் தொடர்ந்து முன்னேறிச் செல்ல முடியாதிருந்த காரணத்தால் படையணிகள் மீண்டும் வன்னிக்குப் பின் நகர்த்தப்பட்டன……

அப்போது தலைவருடைய பிரதான கட்டளை மையத்தில் நின்றிருந்த தமிழ்ச்செல்வனிடம் ஒரு முக்கியமான பணியைத் தலைவர் கொடுத்திருந்தாராம்.

அது என்னவெனில், தாக்குதலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தளபதிகளின் மனநிலை எவ்வாறு அமைந்துள்ளது என்பதை அறிந்து வருவதாகும்.

தலைவரின் அறிவுறுத்தலின்படி தமிழ்ச்செல்வன் சென்று தாக்குதல் தளபதிகளான பால்ராஜ், தீபன், விதுஷா ஆகியோருடன் கதைத்தபோது அவர்கள் தாக்குதலின் வெற்றி குறித்துப் பெருத்த நம்பிக்கையைக் கொண்டிருக்கவில்லை.

அரசியல்துறைப் பொறுப்பாளரான தமிழ்ச்செல்வன் இத்தகவலைத் தலைவரிடம் தெரிவித்தபோது, அவருக்கு உச்சமான கோபம் ஏற்பட்டதுடன் “இந்த சண்டையை நான் வெண்டு காட்டுறன்” எனக் கூறித் தனது கையை மேசையில் குத்தினாராம்.

அதன்பின் இயக்கத்திடம் இருந்த புதிய ரக மோட்டார் எறிகணைகள் சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்டதன் காரணமாகக் கிளிநொச்சி புலிகளின் வசமானது.

இந்தச் சம்பவத்தை ஒரு கூட்டத்தில் தமிழ்ச்செல்வன் அவர்களே நேரடியாக எம்மிடம் தெரிவித்திருந்தார்.

இந்நடவடிக்கையில் பெண் போராளிகள் உட்பட ஐநூறுக்கும் மேற்பட்ட போராளிகள் உயிர் இழந்திருந்தனர்.

கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கிய இராணுவத்தினர் அதிக தூரம் செல்லாமல் பரந்தன் இரசாயனக் கூட்டுத் தாபனம் அமைந்திருந்த இடத்தில் நிலைகொண்டிருந்தனர்.

1999 நடுப்பகுதியில் அரசியல்துறை மகளிர் தாக்குதலணி மன்னார் பிரதேசத்தின் பள்ளமடு சன்னார் பகுதியில் லெப்.கேணல் தணிகைச்செல்வி தலைமையில் நிலைகொண்டிருந்தது.

எதிர் பாராதவிதமாக அப்பகுதியைச் சுற்றிவளைத்த இராணுவத்தினரின் நடவடிக்கையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட போராளிகள் இழந்திருந்தார்.

அவர் யாழ்ப்பாணம் ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆரம்பகாலச் சுதந்திரப் பறவைகள் அமைப்புடன் சேர்ந்து இயங்கியவர்.

1989இல் மணலாற்றுக் காட்டில் மகளிர்ப் படையணியின் நாலாவது பயிற்சி முகாமில் ஆயுதப் பயிற்சி எடுத்தவர்.

அரசியல்துறையில் வன்னி, யாழ்ப்பாணம் உட்பட பல இடங்களில் அரசியல் பணிசெய்து அரசியல்துறை மகளிர் பொறுப்பாளராகச் செயற்பட்டு அதன்பின் யாழ் செல்லும் படையணிப் பொறுப்பாளராகவும், அரசியல் துறை தாக்குதலணியின் பொறுப்பாளராகவும் செயற்பட்டவர்.

இவரது இழப்பின் பின்னர் தாக்குதலணியின் பொறுப்பாளராக லெப்.கேணல் தாரணி நியமிக்கப்பட்டார்.

அதுவரை அவர் செயற்பட்டு வந்த அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் பணிக்கு நான் நியமிக்கப்பட்டேன்.

அரசியல்துறையின் கீழ் செயற்பட்டு வந்த பல மகளிர் பிரிவுகளின் நிர்வாகங்களை இணைத்துச் செயற்பட வேண்டி யிருந்ததுடன் சமூகப் பெண்களுக்கான பல வேலைத் திட்டங் களையும் முன்னெடுக்க வேண்டியிருந்தது.

சமூகப் பெண்களின் வாழ்வில் கல்வி, பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தி அவர்களை வாழ்வில் ஒரு உயர்ந்த நிலையை எட்டச் செய்ய வேண்டும் என்கிற கனவு எனக்கு இருந்தது.

ஆனால் நிர்வாகப் பிரச்சனைகளைக் கையாள்வதும் இயக்கத்திற்கு ஆளணியைத் திரட்டுவதுமே நாங்கள் செய்ய வேண்டிய முக்கியப் பணிகளாக இருந்தன.

தமிழீழ விடுதலைப் புலிகள் மகளிர் அமைப்பு

இதன் பின்னர் 1999 நவம்பர் 02ஆம் திகதி இயக்கத்தின் பலமான படையணிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ‘ஜெயசிக்குறு’ இராணுவத்திற்கெதிரான ‘ஓயாதஅலைகள்-03‘ என்ற பாரிய எதிர்த் தாக்குதல் நடவடிக்கை புலிகளால் ஆரம்பிக்கப்பட்டது.

முத்தையன்கட்டு, சமளங்குளம், முள்ளிய வளை, தண்ணீரூற்று, கற்பூரப்புல்வெளி, கோடாலிக்கல், இத்திமடு ஆகிய பகுதிகளுக்கூடாகப் புலிகளின் அணிகள் களமிறக்கப்பட்டிருந்தன.

‘வோட்டசெட்’ நடவடிக்கை மூலமாக இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருந்த ‘ஒட்டிச்சுட்டான்’பகுதியை உடைத்துக்கொண்டு முன்னேறிச் செல்வதே இதன் நோக்கமாயிருந்தது.

அந்தப் பகுதியில் இலங்கை கடற்படையினர் நிலைகொண்டிருந்தனர். இந்த நடவடிக்கையில் ஏற்கனவே கைப்பற்றுவதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த பிரதேசங்களைவிடவும் அதிகமான பிரதேசங்களைப் புலிகள் கைப்பற்றியிருந்தனர்.

இதற்குப் பிரதான காரணம் புலிகளிடம் வந்து சேர்ந்திருந்த 122மி.மீ ஆட்லறி பீரங்கிகளின் எறிகணை வீச்சின் பலமாகும்.

1999 நவம்பர் 02ஆம் திகதி ஒட்டுச்சுட்டான் கற்சிலை மடுவில் ஆரம்பமான புலிகளின் தாக்குதலால் 07ஆம் திகதி ஓமந்தை பனிக்க நீராவிப் பகுதி வரையான நிலப்பரப்பு புலிகளால் வெற்றிகரமாகக் கைப்பற்றப்பட்டிருந்தது.

1997 மே மாதம் முதல் 1999 நவம்பர் வரையான காலப் பகுதியில் நடந்து முடிந்திருந்த‘ஜெயசிக்குறு’ இராணுவ நடவடிக்கையில் மட்டும் புலிகள் தரப்பில் 1500 போராளிகளும் 3000 இராணுவத்தினரும் உயிரிழந்ததாகப் புலிகள் அறிவித்திருந்தனர்.

அதுவேளை தமது தரப்பில் 1350 பேர் உயிரிழந்ததாகவும் 4000 பேர் காயமடைந்ததாகவும் புலிகள் தரப்பில் 3614 பேர் கொல்லப்பட்டதுடன் 1899 பேர் காயமடைந்ததாகவும் இலங்கை இராணுவத்தினர் அறிவித்திருந்தனர்.

ஆக மொத்தத்தில் இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் தமதுயிரை இழந்திருந்தனர்.

இக்காலகட்டத்தில் தலைவர் பிரபாகரன் புதிய பல படையணிகளை உருவாக்கியிருந்தார்.

ஆனாலும் அந்த நேரத்தில் வன்னியிலிருந்த தமிழ் மக்களின் பிள்ளைகள் அதற்குத் தேவையான ஆளணியை ஈடு செய்வதற்குப் போதாமல் இருந்தார்கள்.

ஓயாத அலைகள் சமருக்குப் பின்பு தாக்குதல் படையணிகளுக்குச் சற்று ஓய்வு கொடுக்கப்பட்டது.

மாலதி படையணிப் போராளிகளுக்கும் அலம்பில் கடற்கரையில் மூன்று நாட்கள் விசேட ஓய்வு கொடுக்கப்பட்டது. சிறப்பு உணவு ஏற்பாடு களுடன், கலை நிகழ்வுகள், கடற் குளிப்புகள் எனக் கழிந்த உல்லாசப் பொழுதுகள் அவை.

தலைவர் நாளாந்தம் வருகை தந்து போராளிகளுடன் உரையாடிச் செல்வார். அந்த நாட்களில் தளபதி விதுஷாவுடன் நானும் அங்கு நின்றிருந்தேன்.

கடந்த சமர்களில் சிறப்பாகச் செயற்பட்ட போராளிகளுக்குத் தலைவர் பல பரிசுகளையும் வழங்கியிருந்தார். பரந்தன் சண்டையில் தனது ஆர்.பி.ஜீ ஆயுதத்தால் இராணுவத்தினரின் டாங்கியொன்றைத் தாக்கியழித்த பெண் போராளிக்குத் தனது தூர நோக்குக் கருவியைத் தலைவர் தனிப்பட்ட பரிசாக வழங்கியிருந்தார்.

அடுத்தகட்ட பாரிய தாக்குதல் நடவடிக்கை ஒன்றுக்கான தயார்ப்படுத்தலாகவே இந்த ஓய்வு அமைந்திருந்தது என்பது அப்போது எம்மில் எவருக்கும் தெரியாதிருந்தது.

2000 மார்ச் 26ஆம் திகதி குடாரப்பு தரையிறக்கத் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆனையிறவை மேவி இத்தாவில் பகுதியில் ஒரு பெட்டி வடிவிலான தாக்குதல் வியூகம் தளபதி பால்ராஜ் தலைமையில் புலிகளால் அமைக்கப்பட்டது.

இத்தாக்குதலில் மாலதி படையணி ஆனையிறவைப் பார்த்தபடியும், மேஜர் சோதியா படையணி சாவகச் சேரியைப் பார்த்தபடியும், கூடவே சாள்ஸ் அன்ரனி படையணியும் நிலைகளை அமைத்திருந்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து ஏ9 வீதியூடாக ஆனையிறவுக்கு வரும் விநியோகத்தைத் தடைசெய்வதே இதனுடைய நோக்கமாக இருந்தது.

வடமராட்சி கிழக்குத் தாளையடி வீதி கைப்பற்றப் பட்டதன் பின்னர் இத்தாவில் பகுதிக்கு என்னை வரும்படி தளபதி விதுஷா அறிவித்திருந்தார்.

நானும் சில பெண் போராளிகளும் கண்டாவளை கொம்படி வழியாக ஆனையிறவு நீரேரியைக் கடந்துசென்று மீண்டும் தொண்டைமானாறு நீரேரியைக் கடந்துசென்றுகொண்டிருந்தோம்.

இக்கடல் நீரேரிகளைக் கடப்பதற்காகக் கடற்புலிகள் சாதாரண ‘புளுஸ்ரார்’ படகுகளையும் குறைந்த அளவு குதிரைவலுச் சக்திகொண்ட இயந்திரங்களையுமே பயன்படுத்தினர்.

தொண்டைமானாறு கடல் நீரேரியை உயிருடன் கடப்பதென்பத அதிர்ஷ்டமாகவே கருதப்பட்டது.

மிகவும் குறுகிய பகுதியில் புலிகளின் நிலைகள் அமைந்திருந்த காரணத்தால் இராணுவத்தினரின் எறிகணைகள் இடைவெளியில்லாது வந்து வீழ்ந்து கொண்டிருந்தன.

எமது படகுக்கு முன்பாக வேறொரு படகில் கனரக ஆயுத அணியொன்று போய்க்கொண்டிருந்தது.

துல்லியமாக விழுந்த எறிகணையில் அந்தப் படகில் சென்ற போராளிகள் எனது கண்களுக்கு முன்பாகவே படகுடன் எரிந்து கடலுக்குள் அமிழ்ந்துபோன அதிர்ச்சி நிறைந்த துயரம் நடந்தேறியது.

ஒருவிதமாகத் தப்பிப் பிழைத்துத் தளபதி விதுஷாவின் நிலையை அடைந்தபோது, தற்காலிகமாக அமைக்கப்பட்ட சாதாரணப் பதுங்குக் குழியின் மீது தடிகளைப் போட்டு மண் மூடைகள் அடுக்கப்பட்டிருந்தன.

உயர் அலைவரிசை கொண்ட தொலைத் தொடர்புக் கருவியில் அவரது குரல் ஒலித்த மறுகணமே அந்த இடம் அதிர்ந்து மண்மூடைகளும் மரக் குற்றிகளும் எழும்பிப் பறந்தன.

கதிரையின் நுனியில் அமர்ந்துகொண்டு பார்க்கும் அதி விறுவிறுப்பூட்டும் ஆங்கிலத் திரைப்படத்தின் திடுக்கிடும் வேகக் காட்சி மாற்றங்களைப்போல இத்தாவில் சமர்க் களம் கொடிய போரின் பயங்கரத் தரிசனமாக இருந்தது.

2000.04.22ஆம் திகதி ஆனையிறவு புலிகளால் கைப்பற்றப்பட்டபோது இயக்கத்தின் பல வருடக் கனவு அன்று நனவாகியது. அந்த உப்புக் கடல் நீரேரியில் நடந்த சமர் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலியெடுத்திருந்தது.

ஆனையிறவு கைப்பற்றப்பட்டதன் பின்பு யாழ்ப்பாணத்திற் கான பாதை திறக்கப்பட்டுவிட்டதாகவே இயக்கம் கருதியது.

அடுத்ததாக யாழ்பாணத்தையும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் பூநகரி சங்குப்பிட்டிப் பாதையூடாக ஒரு பெரும் நகர்வு மேற்கொள்ளப்பட்டது.

புலிகளின் நீண்டதூர எறிகணை வீச்சுப் பலம் மீண்டும் முழுமையாகப் பிரயோகிக்கப்பட்டது.

பூநகரி கல்முனையில் நிலைப்படுத்தப்பட்ட பீரங்கிகள் தென்மராட்சி இராணுவ நிலைகள் மீது எறிகணை மழை பொழிந்தது. இராணுவத்தினரும் பயங்கரமான எதிர்தாக்குதலைத் தொடுத்தனர்.

புலிகளின் தாக்குதலணிகள் தென்மராட்சி மறவன்புலவு வீதியைக் கைப்பற்றியதுடன் சாவகச் சேரியையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தன.

அரசியல்துறைப் பொறுப்பாளர் எனக்கு அவசரமான வேலை ஒன்றினைப் பணித்திருந்தார்.

உடனடியாகப் போராளிகளைக் கைதடி முதியோர் இல்லத்திற்கு அனுப்பி அங்கிருக்கும் முதியோர்களை மீட்டு வன்னிக்குக் கொண்டு வரும்படி அறிவித்திருந்தார்.

இந்தப் பணியில் ஆண் போராளிகளும் இணைக்கப்பட்டிருந்தனர். நான் போராளிகளைத் தயார்படுத்திச் சங்குப்பிட்டிப் பாதையூடாக அனுப்பிக்கொண்டிருந்தேன்.

வான் படையினரின் தாக்குதல்கள் அகோரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. பூநகரியின் மணல் வீதியில் எனது மோட்டார் சைக்கிளை ஓட்ட முடியாமல் ஒரு காலை ஊன்றியபடி முழுப் பலத்துடன் தள்ளிக் கொண்டிருந்தேன்.

எனக்குப் பின்பாக உழவு இயந்திரம் ஒன்று வேகமாக வரும் சத்தம் கேட்டது. சற்று விலகி இடம் கொடுக்க முயற்சித்தபோது மோட்டார் சைக்கிள் சில்லு உருள மறுத்ததால் வீதிக்கு குறுக்கே மோட்டார் ச மீது எழும்பி நிற்பது தெரிந்தது.

கட்டுப்பாட்டை இழந்திருந்த உழவு இயந்திரத்தின் முன்சக்கரம் எனது இடது தோள் பகுதியில் உதைத்து ஏறி நின்றது.

என்னையும் எனது மோட்டார் சைக்கிளையும் அந்த உழவு இயந்திரத்தில் ஏற்றி வந்து எமது பூநகரி முகாமில் அவர்கள் விட்டுச் சென்றனர்.

அந்த உழவு இயந்திரப் பெட்டியில் ஏற்றப்பட்டிருந்த உயிரிழந்திருந்த போராளிகளின் உடல்களின் நடுவே உயிர்க் கொல்லும் வலியுடன் நானும் படுத்திருந்தேன்.

சில வலி நிவாரணி மருந்துகளுடன் பண்டேஜால் கையைக் கட்டிக்கொண்டு சங்குப்பிட்டிப் பாதையூடாகக் கைதடி முதியோர் இல்லத்திற்குச் சென்றேன்.

அங்கு ஏற்கனவே சென்றிருந்த எமது போராளிகள் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். கண்கொண்டு பார்க்க முடியாத அவலம் அங்கு நிகழ்ந்தேறியிருந்தது.

சுயமாக இயங்க முடியாத முதியோர்கள் பலர் படுத்த படுக்கையிலும், அந்தக் கட்டடத்தின் பல பகுதிகளிலும் இறந்து கிடந்தனர்.

பலர் காயப்பட்டிருந்தனர்; எஞ்சியிருந்தவர்கள் அச்சத்தால் நடுங்கியவாறு அடுப்புப் புகடுகளுக்குக் கீழும் அறைகளுக்குள்ளும் ஒளிந்திருந்தனர், இருந்த இடத்தில் மலசலம் கழித்திருந்த நிலையில்.

இரத்த வாடையும் உயிரற்றுப்போன சடலங்களிலிருந்து எழுந்த நாற்றமும் ஒன்றாகச் சேர்ந்து முகத்தில் அறைந்தன. இரு தரப்பினருக்கும் மோதல்கள் தொடங்கியவுடன் சாவகச் சேரி, கைதடிப் பகுதி மக்கள் போட்டது போட்டபடிக் கிடக்க வலிகாமப் பகுதியை நோக்கி ஓடிச்சென்றுவிட்டிருந்தனர்.

சாந்தியகத்தின் பராமரிப்பாளர்களும் பாதுகாப்பு தேடிச் சென்றுவிட்ட நிலையில் வயோதிபர்கள் கைவிடப்பட்டிருந்தனர்.

அரசியல் துறையின் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர், படகுகளின் மூலமாக இம்முதியவர்களை வன்னிக்குக் கொண்டுவந்து ஆனைவிழுந்தானில் அமைந்திருக்கும் ‘மகாதேவ ஆச்சிரமத்தில்’ சேர்த்திருந்தனர்.

நாவற்குழி சந்தியைக் கடந்து அரியாலை வீதி பிரியும் இடத்தில் மாலதி படையணியின் நிலைகள் அமைந்திருந்தன.

இந்தத் தாக்குதலின்போது மோதல்களுக்குள் அகப்பட்டு மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். சாவகச் சேரி நகரம் இரு தரப்பினரதும் எறிகணை வீச்சினால் நொறுங்கிப் போயிருந்தது.

கடைகள் உடைந்து தகர்ந்துபோய்ப் பொருட்கள் வீதியில் சிதறிக் கிடந்தன. மக்களுக்கான விடுதலைப் போராட்டம் ஏன் இத்தகைய அழிவுகளை மக்களுக்கு ஏற்படுத்துகிறது என்று இதயத்தில் எழுந்த கேள்வியைச் சிந்தனைக்கு எடுத்துச்செல்ல முடியாதபடி வெற்றி மயக்கம் விடுதலைப் புலிகள் அனைவரையுமே ஆட்கொண் டிருந்தது.

சாவகச் சேரிச் சமரில் 25க்கு மேற்பட்ட எல்லைப் படை போராளிகள் உயிரிழந்திருந்தனர்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த உறவினர்களான அவர்களுடைய இழப்பானது மக்கள் மத்தியில் மிகுந்த கோபத்தையும் ஆத்திரத்தையும் சம்பவங்களும் நடைபெற்றிருந்தன.

இயக்கம் எதிர்பார்த்த வகையில் யாழ்ப்பாணத்தை நோக்கித் தொடர்ந்து முன்னேறிச் செல்ல முடியாதிருந்த காரணத்தால் படையணிகள் மீண்டும் வன்னிக்குப் பின் நகர்த்தப்பட்டன.

2001க்குப் பின்னர் கிளிநொச்சிநகரம் மீண்டும் செழிப்படையத் தொடங்கியது. விடுதலைப் புலிகளும் தமது அரசியல் மற்றும் நிர்வாக அலகுகளைக் கிளிநொச்சிக்கு நகர்த்தத் தொடங்கினார்கள்.

ஆயினும் புதுக்குடியிருப்புப் பிரதேசப் பாதுகாப்பில் இருந்த உறுதியான அக்கறை கிளிநொச்சியின் பாதுகாப்பில் புலிகளுக்கு ஆரம்பத்தில் இருக்கவில்லை.

இயக்கத்தின் தலைமைச் செயலகம் உட்பட பல இராணுவக் கட்டமைப்புகள் தொடர்ந்து புதுக்குடியிருப்புப் பகுதியிலேயே அமைந்திருந்தன.

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் அரசியல் துறையின் பிரதான செயலகம், அரசியல் கல்லூரி என்பன அமைக்கப்பட்டன. அதே வளாகத்தில் அரசியல்துறை மகளிர் பிரிவு நடுவப் பணியகத்தையும் அமைத்துக்கொண்டோம்.

பகிரங்கமாக அறிவிக்கப்படாமலேயே ஒரு மூன்றாந் தரப்பினர் ஊடாக இரகசியமான முறையில் புலிகளுக்கும் அரசாங்கத்தினருக்குமிடையே சமாதான பேச்சுவார்த்தை ஒன்றுக்கான ஆரம்ப கட்ட வேலைத் திட்டங்கள் இயக்கத்தினுள்ளே ஆரம்பிக்கப்பட்டிருப்பதை உணரக்கூடியதாக இருந்தது.

ஆனாலும் அந்தச் சந்தர்ப்பத்தில் புலிகளிடம் இருந்த இராணுவத் தாக்குதல் பலத்தைக்கொண்டு யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றிய பின்னர் பேச்சுவார்த்தைக்குப் போவதையே புலிகளின் தலைமை விரும்பியிருந்தது.

அதேநேரம் மீண்டும் ஆனையிறவைக் கைப்பற்றி யாழ்ப்பாணத்திற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னரே சமாதான பேச்சுவார்த்தைக்கு வருவதையே இலங்கையரசும் விரும்பியிருக்க வேண்டும்.

இதனால் யாழ்ப்பாணத்திலுள்ள முகமாலை யுத்தக் களமுனை தொடர்ந்து நெருப்பு முனையாகவே கனன்று கொண்டிருந்தது.

2001 (ஹீனி கல) இராணுவ நடவடிக்கை ஒன்று இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது.அந்தத் தீச்சுவாலை நடவடிக்கையைப் புலிகள் வெற்றிகரமாக முறியடித் திருந்தனர். இதன் பின்னர் கிளிநொச்சி நகரம் புலிகளின் அரசியல் தலைநகரமாகத் துரிதமாகக் கட்டியெழுப்பப்பட்டது.

பல்லாயிரக்கணக்கான உயிர்களின் குருதியில் நனைந்த ஏ9 வீதி 2002 திறக்கப்பட்டபோது புலிகள் இயக்கம் இராணுவ பலத்தின் உச்சத்தில் இருந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

அப்பலத்தை அரசியல் மற்றும் ராஜதந்திர ரீதியான பலமாக மாற்றியமைக்கும் தந்திரோபாயத்தில் புலிகளின் தலைமைக்கு ஏற்பட்ட படுதோல்வி, பின்னொரு நாளில் முள்ளிவாய்க்கால் வீதியை மக்கள் தாமாகவே தள்ளித் திறந்துகொண்டு வெளியேறிச் செல்லக் காரணமாய் அமைந்தது.

தமிழினி
தொடரும்..Post a Comment

Protected by WP Anti Spam