By 26 April 2016 0 Comments

மக்களே எச்சரிக்கை! வடக்கில் அதிகரிக்கும் வன்முறைகள்: முகம் மறைத்த மர்ம நபர்கள் யார்…!!

gang-attack-300x197யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்கள் கடந்த சில வாரங்களாகவே அதிகரித்து காணப்படுகின்றன. கடந்த சில தினங்களில் மட்டும் யாழ்ப்பாணத்தில் பெருமளவான வீடுகள் உடைக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளன.

இதனைவிட முகமூடி அணிந்த நபர்கள் அடங்கிய குழு வீடுகளில் திருட முற்பட்டதுடன் வீடுகளுக்கு வெளியே நின்ற வாகனங்கள் மற்றும் ஏனைய பொருட்களையும் சேதமாக்கியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை யாழ். நகரிலுள்ள நான்கு வீடுகளுக்கு தொடராகச் சென்ற கொள்ளைக் கும்பல் வீடுகளுக்கு வெளியே இருந்த வாகனங்கள் மற்றும் பொருட்களுக்கு சேதம் விளைவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாம்பழம் சந்திக்கு அருகிலுள்ள விடுதியொன்றில் காலி மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்துள்ளனர்.

அங்கு மூன்று மோட்டார் சைக்கிளில் முகத்தை கறுப்பு துணிகளால் மூடியவண்ணம் வந்த ஆறுபேர் கொண்ட குழுவினர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் பேருந்தை இரும்புக் கம்பிகள், மற்றும் வாள்கள் கொண்டு அடித்து நொறுக்கியுள்ளனர்.

மற்றொரு வீட்டுக்குச் சென்ற இக்குழுவினர் அங்கு நின்ற மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கரவண்டிகளை சேதப்படுத்தி வீட்டின் கதவின் மீதும் கண்ணாடிகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதேபோல் ஏனைய இரு வீடுகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. இவ்வாறு நாள்தோறும் யாழ். குடாநாட்டில் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் அண்மைக்காலமாக திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அடையாளம் தெரியாதவாறு முகத்தை மறைத்துக் கொண்டுவரும் இந்தக் கும்பல் வீடுகளில் உள்ளோரை அச்சுறுத்தி கொள்ளையடித்து வருகின்றது.

கடந்த சில தினங்களில் பல வீடுகளில் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில வாரங்களாக குடாநாட்டில் இத்தகைய தாக்குதல் சம்பவங்களும் கொள்ளைச் சம்பவங்களும் குழுக்களின் அட்டகாசங்களும் அதிகரித்துள்ளமை தொடர்பில் பொதுமக்கள் பெரும் கவலை கொண்டுள்ளனர்.

வீடுகளில் நிம்மதியாக நித்திரை கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. முகமூடி அணிந்து வரும் இத்தகைய குழுவினர் தனித்து கொள்ளையிடும் நோக்கில் மட்டும் செயற்படுவதாக தெரியவில்லை.

மக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தும் விதத்திலேயே வீடுகள் மீதும் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் மீதும் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

திட்டமிட்ட வகையில் குடாநாட்டை அச்சுறுத்தும் செயற்பாடாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றதா என்ற சந்தேகம் தற்போது வலுவடைந்திருக்கிறது.

கடந்த ஆட்சிக் காலத்தில் யாழ். குடாநாடு உட்பட வடக்கு, கிழக்கில் திட்டமிட்ட வகையில் கிறீஸ் மனிதர்கள் களமிறக்கப்பட்டனர்.

இரவுகளில் வீடுகளுக்குள் புகுந்த இந்த மர்ம மனிதர்கள் மக்கள் மீது தாக்குதல்களை நடத்தி வந்தனர். பெண்களை குறிவைத்து இந்த கிறீஸ் மனிதர்கள் செயற்பட்டனர். இதனால் வடக்கு, கிழக்கில் பெரும் பதற்றமான சூழ்நிலை உருவாகியிருந்தது.

உண்மையிலேயே வடக்கு,கிழக்கில் சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலேயே திட்டமிட்ட வகையில் இந்த கிறீஸ் மனிதர்கள் உலாவ விடப்பட்டிருந்தனர்.

இதேபோல் தற்போதும் மக்களை பீதிக்குள் உறையவைக்கும் வகையில் திட்டமிட்ட செயற்பாடாக இந்த முகமூடி மனிதர்கள் இறக்கி விடப்பட்டுள்ளனரா என்ற சந்தேகம் மேலெழுந்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தில் வடக்கு, கிழக்கில் அமைதியான சூழல் நிலவிவருகின்றது. இவ்வாறான சூழலை கெடுத்து மக்களை அச்சுறுத்தி வடக்கில் அச்சுறுத்தலான நிலை நிலவுகின்றது.

மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர் என்ற நிலைப்பாட்டை உருவாக்குவதற்கே யாரேனும் ஒருதரப்பு திட்டமிட்ட வகையில் வன்முறை கலாசாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளதா என்று மக்கள் சந்தேகம் கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

வடமாகாணத்தில் குற்றச்செயல்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள நிலையில் அவை தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் புதிய பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு அவசரக் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

குடாநாட்டில் களவுகள், கொள்ளைகள் நாளாந்தம் நடைபெற்று வருகின்றன. வடமாகாணத்திற்கு சிங்கள மக்களை ஏற்றி வந்த சுற்றுலாப் பேருந்து தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டவர்களின் பின்னணி என்ன? உள்நோக்கம் என்ன? என்பது உடனே கண்டறியப்பட வேண்டும்.

நல்லுறவைப் பேணுவதற்கு அரசாங்கம் முனைந்து வருகையில் இவ்வாறான நடவடிக்கைகள் அவற்றை முடக்கும் தன்மை கொண்டவையாகும் என்றும் விக்கினேஸ்வரன் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைவிட இத்தகைய சம்பவங்கள் வடக்கில் இராணுவத்தினரை தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு உரமூட்டுகின்ற செயற்பாடுகளா? என்று சந்தேகம் எழுப்பியுள்ள முதலமைச்சர்,

நாங்கள் அனைவரும் சேர்ந்து போருக்குப் பின்னரான எமது மக்களின் பாதுகாப்பை ஊர்ஜிதப்படுத்த வேண்டிய கடப்பாட்டிலுள்ளோம். எனவே, இந்த விடயங்கள் குறித்து உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

பொலிஸ்மா அதிபருக்கு முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ள கடிதமானது யாழ்ப்பாணத்தின் தற்போதைய அச்சுறுத்தலான சூழலை நன்கு புலப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

குடாநாட்டில் களவு, கொள்ளை, அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் மாணவர்களின் செயற்பாடுகளும் கவலையளிப்பதாகவே உள்ளன.

மாணவர்கள் குழுக்களாக பிரிந்து வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரமும் குடாநாட்டைப் பொறுத்தவரையில் பூதாகரமாக மாறியிருக்கிறது.

இவ்வாறு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்பில் யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் எச்சரிக்கையொன்றினையும் விடுத்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் ரவுடித்தனத்திலும் தெருச்சண்டித்தனத்திலும் ஈடுபடும் மாணவர்கள் சிறைத்தண்டனைக்கு உள்ளாக நேரிடும். அத்துடன் இத்தகைய மாணவர்கள் உயர் கல்விக்காக பல்கலைக்கழகம் செல்ல முடியாத நிலையும் உருவாகும்.

எனவே இத்தகைய மாணவர்களை பெற்றோர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு முனையவேண்டும் என்று நீபதிபதி இளஞ்செழியன் தெரிவித்திருக்கின்றார்.

போதைவஸ்து வழக்கொன்றில் மேல் நீதிமன்றத்தில் பிணைகோரிய மனுதொடர்பான விசாரணையின் போதே நீதிபதி மாணவர்களின் ஒழுக்கவிடயம் தொடர்பில் அறிவுரை வழங்கியிருக்கிறார்.

உண்மையிலேயே குடாநாட்டைப் பொறுத்தவரையில் போதைவஸ்துப் பாவனையும், மதுபான பாவனையும் அதிகரித்து காணப்படுகின்றது. மாணவர்கள் கூட போதைவஸ்துப் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக முறைப்பாடுகள் தெரிவிக்கின்றன.

வன்முறைகளிலும் கொள்ளை முயற்சிகளிலும் ஈடுபடுகின்ற குழுவினரும் போதைவஸ்து பாவனைக்கு உட்பட்டவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் உருவாகியிருக்கின்றது.

யாழ். குடாநாட்டில் அரங்கேற்றப்பட்டு வரும் குற்றச்செயல்கள் தொடர்பில் பொலிஸார் இதுவரை உரிய நடவடிக்கைகளை எடுத்ததாக தெரியவில்லை.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலோ அல்லது கொள்ளைச்சம்பவங்கள் குறித்தோ இதுவரையில் எந்தவொரு சந்தேகநபரும் கைதுசெய்யப்படவில்லை.

முகமூடி அணிந்த கும்பல்களின் நடவடிக்கைகள் குடாநாட்டில் தொடர்ந்து வருகின்றன.எனவே, உடனடியாக பொலிஸார் இந்த மர்மக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதேபோல் இந்த சம்பவங்களின் பின்னணி என்ன? உள்நோக்கம் என்ன? என்பவை தொடர்பிலும் கண்டறியப்படவேண்டும்.

புதிய பொலிஸ்மா அதிபராக பூஜித ஜயசுந்தர பதவியேற்றிருக்கின்றார். இவர் கடந்த அரசாங்க காலத்தில் வடமாகாணத்தில் மூன்று வருடங்களுக்கு மேல் கடமையாற்றியிருந்தார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவி வகித்த போது வன்முறைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.

அதேபோன்று தனது பதவிக் காலத்தில் இவ்வாறான திட்டமிட்ட செயற்பாடுகள் இடம்பெறுவதற்கு அவர் அனுமதிக்கக்கூடாது.

குடாநாட்டில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசேட குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

அத்துடன் அங்கு வீதிரோந்து நடவடிக்கை அதிகரிக்கப்பட்டு பொலிஸாரை 24 மணிநேரமும் உஷார் நிலையில் வைத்திருக்கவேண்டும்.

வன்முறைகளில் ஈடுபடும் கும்பல்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதன் மூலமே மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச நிலையை இல்லாதொழிக்க முடியும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.Post a Comment

Protected by WP Anti Spam