சேலம் அருகே கோவில் விழாவில் மோதல்: கல்லால் தாக்கி வாலிபர் கொலை…!!
சேலம் அருகே கோவில் விழாவில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
சேலத்தை அடுத்த பன மரத்துப்பட்டி அருகே உள்ள வேங்கம்பட்டி, அம்பேத்கார் நகரில் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா தற்போது நடந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 27–ந் தேதி வேங்கம்பட்டியை சேர்ந்தவர்களுக்கும், அம்பேத்கர் நகர் பகுதியினருக்கும் இடையே கோவில் திருவிழா தொடர்பாக மோதல் ஏற்பட்டது. பின்னர் ஊர் பெரியவர்கள் மற்றும் போலீசார் அவர்களை அழைத்து பேசி சமாதானப்படுத்தினர். ஆனாலும் அவர்களுக்கிடையே பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்றிரவு கோவில் விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வேங்கம்பட்டியை சேர்ந்த 30–க்கும் மேற்பட்டோர் கலை நிகழ்ச்சி பார்க்க வந்தனர். பின்னர் கலை நிகழ்ச்சி பார்த்து கொண்டிருந்தவர்கள் மீது வேங்கம்பட்டியை சேர்ந்தவர்கள் சிலர் கற்களை வீசியதாக கூறப்படுகிறது.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. இதில் இரு தரப்பினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்கி கொண்டனர். இதை பார்த்த பலர் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
வேங்கம்பட்டியை சேர்ந்த பாலுவின் மகன் கார்த்திக் (வயது28) மட்டும் அம்பேத்கர் நகர் மக்களிடம் சிக்கி கொண்டார். அவரை அந்த பகுதியினர் கல்லால் சரமாரியாக தாக்கினர். இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
இந்த தகவல் காட்டு தீ போல அந்த பகுதியில் பரவியதால் ஏராளமானோர் அங்கு கூடினர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது.
தகவல் அறிந்த சேலம் சரக டி.ஐ.ஜி. நாகராஜன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார் சிங் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் நேற்றிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.