By 21 May 2016 0 Comments

போதைப்பொருள் கடத்தல் மன்னன் குஸ்மான் எல் சாப்போவை அமெரிக்காவுக்கு நாடுகடத்த மெக்சிகோ சம்மதம்…!!

201605211212409552_Mexico-OKs-extradition-of-drug-lord-El-Chapo-Guzman-to-US_SECVPFசர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் குஸ்மான் எல் சாப்போவை அமெரிக்காவுக்கு நாடுகடத்த மெக்சிகோ அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.

உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலை வெளியிடும் ‘போர்ப்ஸ்’ பத்திரிகையின் தரவரிசையில் ஒரு காலத்தில் இடம் பெற்றிருந்த ஜோகின் குஸ்மேனுக்கு ‘எல் சாப்போ’ என்ற பட்டப்பெயரும் உண்டு. அமெரிக்கா முழுவதும் நடைபெறும் கொக்கைன், பிரவுன் ஷுகர், கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட அனைத்து வகையான போதைப்பொருள் கடத்தலையும், வியாபாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த குஸ்மேன், இந்த தொழிலின் முடிசூடா சக்கரவர்த்தியாக முன்னர் வலம் வந்தான்.

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கோஷ்டிகளுக்குள் ஏற்பட்ட தொழில் முறை மோதல்களிலும், இதுதொடர்பான கொலைகளிலும் இவனுக்கு தொடர்பு இருந்ததால் 1993-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குஸ்மேன், கடந்த 2001-ம் ஆண்டு சிறையில் இருந்து தப்பி விட்டான். சிறை கைதிகளுக்கு சலவை செய்த துணிகளை கொண்டுவரும் ஒரு வண்டிக்குள் மறைந்து அவன் தப்பித்து விட்டதாக அப்போது செய்திகள் வெளியாகின.

பின்னர், போலீசாரிடம் பிடிபட்டு மீண்டும் மெக்சிகோ மத்திய சிறைக்கு திரும்பிய ‘எல் சாப்போ’ குஸ்மேன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 13-ம் தேதி இரவு மீண்டும் தப்பியோடி விட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

சிறையில் உள்ள கண்காணிப்பு கேமரா வீடியோ பதிவுகளில் கடைசியாக அவனது நடமாட்டம் பதிவாகி இருந்த பகுதியை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு தரைக்கு அடியில் சுரங்கம் தோண்டப்பட்டிருப்பது தெரிய வந்தது. ஒருவர் மட்டும் நுழைந்து செல்லும் அளவுக்கு ரகசியமாக தோண்டப்பட்டிருந்த அந்த சுரங்கத்தின் வழியாக குஸ்மேன் தப்பியிருக்கலாம் என்று கருதிய போலீசார் அதன் உள்ளே நுழைந்து சென்றபோது, சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் வரை நீண்டிருந்த அந்த சுரங்கத்தின் மறுமுனை சிறைக்கு அருகாமையில் இருக்கும் ஒரு பாழடைந்த கட்டிடத்தை ஒட்டியுள்ள வெட்டவெளியில் முடிவடைந்தது.

குஸ்மேனின் கூட்டாளிகள் இங்கிருந்தபடி, அந்த சுரங்கத்தை தோண்ட ஆரம்பித்திருப்பார்கள். இதுபற்றிய ரகசிய தகவல் அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கலாம். சிறை காவலர்கள் அசந்திருந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு இந்த சுரங்கத்தின் வழியாக அவன் தப்பிச் சென்றிருக்கலாம் என கருதிய போலீசார், எப்படியும் குஸ்மேனை வளைத்துப் பிடித்து, மீண்டும் சிறைக்குள் அடைக்கும் நோக்கத்தில் மெக்சிகோ மற்றும் அமெரிக்க போலீசார் அவனை தீவிரமாக தேடி வந்தனர். அவனது தலைக்கு அமெரிக்கா 33 கோடி ரூபாயை பரிசுத்தொகை அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், சினாலோவா மாகாணத்தில் லாஸ்மொசிஸ் நகரில் அவன் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 8-ம் தேதி ராணுவம், கடற்படை மற்றும் போலீசார் கொண்ட கூட்டுப் படையினர் அங்கு சென்று அவனது இருப்பிடத்தை சுற்றி வளைத்து தாக்கினர். திரைப்படங்களில் வரும் இறுதிக்கட்ட காட்சிபோல பல மணிநேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டைக்கு பிறகு எல்சாப்போ குஸ்மன் பிடிபட்டான். அதைதொடர்ந்து அவனை கைது செய்த போலீசார், மீண்டும் சிறையில் அடைத்தனர். இந்த துப்பாக்கி சண்டையின் போது 5 பேர் பலியாகினர்.

இதற்கு முன்னர் அவன் தப்பியோடிய அதே அல்ட்டிபிலானோ மத்திய சிறையில் தற்போது அடைத்து வைத்துள்ளனர்.

அவனை மெக்சிகோவில் இருந்து நாடுகடத்தும் திட்டத்தில் அந்நாட்டு அரசு உள்ளநிலையில் எல் சாப்போவை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுள்ளது. அவனை காவலில் எடுத்து விசாரிக்க அமெரிக்காவில் உள்ள பல மாகாண அரசுகள் போட்டிப்போட்டு வருகின்றன. எல் சாப்போவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் மெக்சிகோ அரசிடம் தெரிவித்திருந்தது.

இதுதவிர, அமெரிக்காவின் டெக்சாஸ் மற்றும் கலிபோர்னியா மாநில தலைமை நீதிமன்றங்கள் அவனை மெக்சிகோவில் இருந்து நாடுகடத்தி தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தன. இந்நிலையில், குஸ்மேனுக்கு ‘எல் சாப்போ’வை அமெரிக்காவுக்கு நாடுகடத்த மெக்சிகோ நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று சம்மதம் தெரிவித்துள்ளது.

மெக்சிகோ அரசின் முடிவை எதிர்த்து அந்நாட்டின் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்போவதாக எல் சாப்போவின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

மெக்சிகோ நாட்டில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், எல் சாப்போவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட மாட்டாது என அமெரிக்க அளித்துள்ள வாக்குறுதியின்பேரில் அவனை நாடுகடத்த மெக்சிகோ தீர்மானித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.Post a Comment

Protected by WP Anti Spam