போலீஸ் வேன் மோதி பலியான மாணவர்கள் உடலை வாங்க பெற்றோர்கள் மறுப்பு: 6 பேர் மீது வழக்கு…!!

Read Time:6 Minute, 1 Second

201606061158515587_police-van-crash-students-dead-case-against-6-person_SECVPFசென்னை அயனாவரம் ஏகாங்கிபுரம் 1-வது தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது16). இவரது நண்பர் சாலமன் (17). ஏகாங்கிபுரம் 2-வது தெருவில் வசிக்கிறார். இருவரும் இந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று 11-ம் வகுப்பு செல்ல இருந்தனர்.

அயனாவரம் ரெயில்வே மைதானம் அருகே நடந்த கால்பந்து போட்டியை வேடிக்கை பார்ப்பதற்காக இருவரும் ஸ்கூட்டரில் புறப்பட்டனர்.

மாந்தோப்பு ரெயில்வே மைதானம் அருகில் அவர்கள் சென்றபோது அந்த வழியாக வந்த போலீஸ் வேன் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ராம்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். சாலமன் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். அவரை உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9 மணியளவில் சாலமன் பரிதாபமாக இறந்தார்.

விபத்து நடந்ததும் போலீஸ் வேனை ஓட்டி வந்த டிரைவர் ஏழுமலை மற்றும் அதில் அமர்ந்திருந்த போலீசார் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

விபத்தில் மாணவர்கள் பலியான தகவல் அறிந்ததும் அயனாவரம் கான்ஸ்டயார் ரோடு பகுதியைச் சேர்ந்த 75 பேர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் போலீஸ் வேனை அடித்து உடைத்து மறியலில் ஈடுபட்டனர்.

அதே போல் அயனாவரம் ஏகாங்கிபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றொரு பிரிவாக திரண்டு வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் அந்த வழியாக சென்ற 2 மாநகர பஸ்களை அடித்து உடைத்தனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இதில் ஒரு பெண் உள்பட 3 பேருக்கு மண்டை உடைந்தது.

விபத்து தொடர்பாக கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இமாகுலேட் வழக்குப்பதிவு செய்து டிரைவர் ஏழுமலையை கைது செய்தார். அவர் மீது 279 (விபத்து ஏற்படுத்துதல்), 338 (கொடுங்காயம் ஏற்படுத்துதல்), 304ஏ (விபத்தின் போது மரணம் ஏற்படுத்துதல்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைதான டிரைவர் ஏழுமலையை போலீசார் நேற்று இரவு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு வீட்டுக்கு அழைத்து சென்றனர். அவரை இன்று காலை கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு மாஜிஸ்திரேட்டு கூறினார்.

இதையடுத்து இன்று காலை டிரைவர் ஏழுமலை மூர்மார்க்கெட் அருகில் உள்ள அல்லிகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

விபத்தில் பலியான மாணவர் ராம்குமாரின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மாணவர் சாலமனின் உடல் சென்னை அரசு பொது மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறை அருகே சாலமனின் தந்தை டேவிட், தாய் மவுலின் ஆகியோர் காத்திருந்தனர்.

சாலமனின் தந்தை டேவிட் ஆட்டோ டிரைவராக உள்ளார். அவர் நிருபர்களிடம் கூறும்போது, “விபத்து நடந்து இவ்வளவு நேரம் ஆகியும் மக்கள் பிரதிநிதிகள் யாரும் வந்து பார்க்கவில்லை. அவர்கள் வந்து பார்க்கும் வரை எனது மகன் உடலை வாங்க மாட்டேன்” என்றார்

சாலமனின் தாய் மவுலின் கூறும்போது, “விபத்தை ஏற்படுத்தி என் மகன் சாவுக்கு காரணமான டிரைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும் 1 வாரத்திலோ, 10 நாட்களிலோ வெளியே வந்து விடுவார். ஆனால் எனது மகன் திரும்ப வருவானா என்று கண்ணீர் மல்க கூறினார். திடீரென்று அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் மாணவர் ராம்குமாரின் உடல் வைக்கப்பட்டுள்ள பிரேத பரிசோதனை அறை முன்பு அவரது தாய் கவிதா மற்றும் உறவினர்கள் காத்திருந்தனர். அவர்களும் மாணவர்களின் உடலை வாங்க மறுத்ததாக தெரிகிறது.

இதற்கிடையே போலீஸ் வேன் மற்றும் மாநகர பஸ்களை உடைத்தது தொடர்பாக 6 பேர் மீது கும்பலாக கூடி பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 10 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாற்று உறுப்பு ஆபரேசனுக்காக மனித உறுப்புகளை பன்றிக்குள் வளர்க்கும் விஞ்ஞானிகள்..!!
Next post புதுக்கோட்டை அருகே 5 பேர் பலியான விபத்தில் அரசு பஸ் டிரைவர் கைது..!!