வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத் திறனாளிகளின் நெகிழ வைத்த சுயம்வரம்…!!

Read Time:7 Minute, 35 Second

201606121434467002_touched-swayamvara-of-disabilities_SECVPFவச்சி காப்பாத்தும் திறமை இருக்கு… எனக்கொரு மணமகள் கிடைப்பாளா…?

-இரண்டு கால்களும் பழுதான நிலையில் தவழ்ந்தே வந்து சுயம்வரம் மேடை ஏறி தனது ஏக்கத்தை வெளியிட்ட அந்த 26 வயது இளைஞனை பார்த்தவர்கள் பரிதாபப்பட்டனர்.

ஊனம் ஒரு குறையல்ல என்று வெளிப்பேச்சாக நாம் பேசினாலும் ஊனத்தோடு வாழ்பவர்களுக்குத்தான் வாழ்க்கையின் வேதனையும், வலியும் தெரியும்.

அந்த வலிதான் அந்த வாலிபரை அப்படி பேச வைத்தது. அவரையும் அறியாமல் விழியோரம் துளிர்த்த கண்ணீரை துடைத்து விட்டு பேசினார்…

‘என் பெயர் பலராமன். அமிஞ்சிக்கரையில் வசிக்கிறேன். பிளஸ்-2 வரை படித்து இருக்கிறேன். ஒரு லெதர் கம்பெனியில் வேலை பார்த்து மாதம் 15 ஆயிரம் சம்பாதிக்கிறேன். எனக்கு நல்ல மணமகள் வேண்டும். நிச்சயமாக கடைசி காலம்வரை என்னால் அவரை வைத்து காப்பாற்ற முடியும்!’

என்று மனம் திறந்து பேசிய அவரிடம், உங்கள் விருப்பம் நிச்சயமாக நிறைவேறும். நல்ல மணமகள் கிடைப்பாள் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆறுதல் வார்த்தை கூறி அனுப்பி வைத்தார்.

பலராமனைப்போல் பல இளைஞர்களும், இளம்பெண்களும் திரண்டு இருந்த டவுட்டன் விநாயகா அரங்கம் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை மனிதர்களுக்கு நேரில் காட்டியது.

ஓம் டிவைன் கான்ஷியஸ் என்ற தொண்டு நிறுவனம் நடத்திய 4-வது ஆண்டு சுயம்வரத்தில்தான் இந்த காட்சிகள்.

யாரையும் பார்ப்பதற்கு எந்த குறையும் தெரியவில்லை. அஞ்சனம் தீட்டிய கண்கள் – உச்சி வகிடெடுத்து பூச்சூடிய கூந்தலுடன் அழகிய தமிழ் பெண்களாய் அணிவகுத்து இருந்தார்கள்.

அழகாய், பேரழகாய் ஜொலித்த அவர்களுக்கு வாய் பேச முடியாது… காது கேளாது…

என்னடா கொடுமை இது… அழகு, திறமை, நல்ல படிப்பு, கைநிறைய சம்பளம் எல்லாம் இருக்கிறது. ஆனால் இந்த குறைகள் அவர்களிடம் விஞ்சி நிற்பதால் வாழ்க்கையோடு போராடுகிறார்கள்.

தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல துணையை ஏற்படுத்தி கொடுத்து விட்டால் நிம்மதியாய் இருக்கலாம் என்ற தவிப்புடன் பெற்றோர்களும் உடன் வந்திருந்தார்கள்.

நாகப்பட்டினம் ஐஸ்வர்யா. உண்மையிலேயே ஐஸ்வர்யா போல் முத்துப் பற்கள் ஜொலிக்க சிரித்தார்.

எம்.பி.ஏ. படித்து இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு, தனக்கு மாப்பிள்ளையாக வருபவர் ஓரளவு படித்து வேலை பார்ப்பவராக இருக்க வேண்டும் என்று ஆசை.

ஆனால் கணவர் வீட்டு குடும்பம் சின்ன குடும்பமாக இருக்க வேண்டுமாம்!

குடும்பத்தில் நிறைய பேர் இருந்தால் எல்லோரிடமும் பேச முடியாது. அதனால் அவர்களுக்கும் மனக்கஷ்டம் ஏற்படும். அதனால்தான் சின்ன குடும்பமாக இருக்க வேண்டும். அவரும் என்னைப் போல் குறைபாடு உடையவராக இருந்தால் பரவாயில்லை என்று நினைக்கிறேன் என்றார்.

அந்த சின்ன மனசுக்குள் எவ்வளவு பெரிய ஆசைகள்? ஏக்கங்கள்! தந்தை ராஜசேகரனுக்கோ, உறவுக்குள் திருமணம் செய்ததால் பிள்ளைகளுக்கு குறை வந்து விட்டதோ என்ற தவிப்பு!

அரியலூர் மாவட்டம் செம்பியத்தை சேர்ந்த ராஜேஷ் (32). எம்.ஏ.,பி.எட். படித்து விட்டு ஆசிரியராக வேலை பார்க்கிறார்.

ராஜேசின் ஆசை வித்தியாசமானது. படிக்காத விவசாய குடும்பத்து பெண் வேண்டாம். மனைவி சோறு ஆக்கி போடுவதற்கு மட்டுமல்ல, படித்தவராக, வேலை பார்ப்பவராக இருந்தால்தான் நல்லா இருக்கும். குழந்தைகளையும் நன்றாக வளர்க்க முடியும். அப்படிப்பட்ட பெண்ணை தான் தேடிக் கொண்டிருக்கிறேன் என்றார்.

பி.காம். படித்து விட்டு டி.சி.எஸ். நிறுவனத்தில் வேலை பார்க்கும் நுங்கம்பாக்கம் ரோசி மனதில் பல எதிர்பார்ப்புகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட வரன்களை வைத்த கண் வாங்காமல் பார்த்து தனக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைப்பாரா? என்று தேடி கொண்டிருந்தார்.

துணையாக வந்திருந்த தாய் ஷீலா சொன்னார், “நாங்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். என் மகளுக்கும் இதேபோல் குறைபாடு உடைய ஆர்.சி. மணமகன், வேலை பார்ப்பவராக எதிர்பார்க்கிறேன்’ என்றார்.

பி.டெக். என்ஜினீயரிங் பட்டதாரியான கிரண்குமார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை பார்க்கிறார்.

ஆங்கிலம் மட்டுமே புரியும் என்பதால் ஆங்கிலம் தெரிந்த மணமகள் எந்த சாதியாக இருந்தாலும் பரவாயில்லை. இந்துவாக மட்டும் இருக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளியிட்டார்.

விப்ரோ நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்க்கும் சித்தார்த் என்பவரும் தனக்கு ஆங்கிலம் தெரிந்த இந்து மணமகள் வேண்டும். சாதியை பற்றி பிரச்சனை இல்லை என்றார்.

பலர் சைகை மட்டுமின்றி உதட்டால் பேசவும் தெரியும் என்ற தங்கள் தனித் திறமைகளையும் கூடுதல் தகுதியாக தெரிவித்தார்கள்.

குறைகளோடு பிறந்துவிட்ட அவர்களும் நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதுதான் எல்லோரது மனப்பூர்வ ஆசையும். அந்த நிறுவனத்தின் நிர்வாகி மோகன கிருஷ்ணசாமியும் அதைத்தான் கூறினார்.

‘குறைகளை மறந்து சந்தோசமான, நிறைவான வாழ்க்கை வாழ நாங்கள் ஒரு வழியை ஏற்படுத்தி இருக்கிறோம். ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தமான, தகுதியான துணையை தேர்வு செய்ய வேண்டியது அவர்கள் பொறுப்பு. அவர்களுக்கு நாங்கள் பக்க பலமாக இருப்போம்’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மெக்சிகோவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சுட்டுக்கொலை..!!
Next post ஆண்டிப்பட்டி அருகே வரதட்சணை தராத மனைவியை எரித்த கணவன்…!!