By 14 June 2016 0 Comments

யாழ்ப்பாணத்தில் வைத்து சந்திரிகாவின் கணவர் விஜயகுமாரணதுங்காவுக்கு, துப்பாக்கி சுடப் பயிற்சியளித்த கிட்டு…!!

timthumb (5)யாழ்பாணத்தில் வைத்து சந்திரிகாவின் கணவர் விஜயகுமாரணதுங்காவுக்கு துப்பாக்கி சுட பயிற்சியளித்த கிட்டு!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-76)

யாழ்ப்பாணம் கோட்டை இராணுவ முகாம் அருகே கிட்டுவும், கொத்தலாவலயும் சந்திப்பதற்கு முன்பாக நடைபெற்ற சில சம்பவங்களை முதலில் குறிப்பிட்டு விடுகிறேன்.
சென்றவாரம் அவை விடுபட்டுப் போய்விட்டன.

மன்னார் மோதலில் கொல்லப்பட்ட 13 இராணுவத்தினரின் உடல்களை நல்லூர் கந்தசாமி கோவில் அருகே புலிகள் கண்காட்சிக்கு வைத்திருந்தார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா?

கோவில் அருகே அவ்வாறு உடல்களை வைத்திருப்பதை சைவப் பெரியார்கள் விரும்பவில்லை. அப்போது யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர் பேராசிரியர் வித்தியானந்தன்.

அவரும் மேலும் பலரும் புலிகளிடம் சென்று பேசினார்கள். “கோவில் அருகே இவ்வாறான அஞ்சலி நிகழ்ச்சிகள், உடல்களை வைத்து கண்காட்சி என்பவை நடத்துவது சரியல்ல, மேலும் உடல்களை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்? ஒரு பெட்டியில் போட்டு இராணுவத்தினரிடம் ஒப்படைத்து விடலாமே.” என்று யோசனையும் தெரிவித்தனர்.

சடலங்கள் ஒப்படைப்பு.

அதன் பின்னர்தான் யாழ்கோட்டை இராணுவமுகாம் அதிகாரிகளுடன் புலிகள் தொடர்பு கொண்டனர். “உங்கள் வீரர்களது உடல்களை ஒப்படைக்க விரும்புகிறோம்” என்றனர் புலிகள்.

கோட்டை முகாம் பொறுப்பதிகாரி கப்டன் கொத்தலாவல தனது உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு புலிகளது கருத்தைத் தெரிவித்தார்.

அவர்களும் கொத்தலாவலயைப் புலிகளோடு பேசி உடல்களைப் பொறுப்பெடுக்கச் சொன்னதோடு, பிரிகேடியர் ஆனந்த வீரசேகராவையும் கொழும்பில் இருந்து அனுப்பிவைத்தனர்.

முதலில் கோட்டை முகாமுக்கு அருகில் வைத்து புலிகளால் படையினரது உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. உடல்களை புலிகள் சார்பாக ஒப்படைத்தவர் ரஹீம் என்னும் கனகரத்தினம்.

இராணுவத்தினரின் உடல்கள் கைப்பற்றப்பட்டதும், பின்னர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதும் அதுவே முதற் தடவையாகும். அதன் மூலமாக புலிகளின் பிரசாரத்திற்கும் நல்லதொரு வாய்ப்புக் கிட்டியது.

தாம் ஒன்றும் ஈவிரக்கமற்ற அமைப்பல்ல. சர்வதேச போர்விதிகளைக் கடைப்பிடிக்கும் அரசியல் இராணுவ இயக்கம் என்று புலிகள் சொல்லிக்கொள்ளக் கூடியதாகவிருந்தது.

கிட்டுவின் ஜோக்

உடல்கள் ஒப்படைக்கப்பட்டபின்னர் தான் புலிகளிடம் இருந்த இரண்டு இராணுவத்தினரையும் விடுவிக்கும் பேச்சுவார்த்தையில் கப்டன் கொத்தலாவல ஈடுபட்டார்.

அதன் ஒரு கட்டமாகத்தான் கிட்டுவும், கொத்தலாவலயும் சந்திக்க முன்வந்தனர்.

கோட்டை இராணுவ முகாமுக்கு அருகே சந்திப்பு நடைபெற்றது.

கப்டன் கொத்தலாவலயும் கிட்டுவும் கை குலுக்கிக் கொண்டனர்.

கப்டன் கொத்தலாவல மாமிசமலை போன்ற தோற்றமுடையவர். உயரமான மனிதர். கிட்டுவோ ஒல்லியான தேகம், குள்ளமான உருவம். கொத்தலாவலயின் மார்பளவு உயரம்தான் இருந்தார் கிட்டு.

கொத்தலாவலயுடன் பேசும்போது கிட்டு ஒரு ஜோக் அடித்தார். “உங்களைச் சுடுவது என்றால் இலக்குப் பார்க்கும் சிரமமே இல்லை” என்றார் கிட்டு. அதனைக்கேட்டு பெரிதாகச் சிரித்தார் கொத்தலாவல.

அந்தச் சந்திப்பு சுமுகமாக நடந்து முடிந்தது. யாழ்ப்பாண பத்திரிகைகளில் கிட்டு கொத்தலாவல சந்திப்பு முன்பக்கச் செய்தியாகியது. கிட்டு, கொத்தலாவல, ஆனந்த வீரசேகர, ரஹீம் ஆகியோர் ஒன்றாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வெளியாகியிருந்தன.

ஏனைய இயக்கங்களை தடைசெய்து விட்டு இராணுவத்தினருடன் புலிகள் கைகோர்த்துக்கொண்டார்கள். ‘சக போராளிகளுக்கு வேட்டு. இராணுவத்தினருக்கு வரவேற்பு.’ என்று இந்தியாவில் இருந்த தமிழ் இயக்கங்கள் அதனை விமர்சித்திருந்தன.

“எங்களை இந்திய இராணுவத்தினரின் கைக்கூலி என்றனர். இப்போது புலிகள் இலங்கை இராணுவத்தினருடன் கைகுலுக்குகின்றனர்” என்று விமர்சனம் செய்தது ரெலோ.

அதேவேளை கிட்டு பேச்சுக்களைத் தொடர்ந்தார். கோட்டை இராணுவ முகாமிலிருந்து பிரிகேடியர் ஆனந்த வீரசேகரா புலிகளது அலுவலகம் சென்று பேச முன்வந்தார்.

கோட்டை முகாமுக்கு அருகில் இருந்து புலிகள் அவரையும் அவருடன் வந்த சில வீரர்களையும் வரவேற்று அழைத்துச் சென்றனர். யாழ்ப்பாணம் சுண்டிக்குளியில் இருந்த புலிகளது முகாமில் வைத்து ஆனந்த வீரசேகராவுடன் பேசினார் கிட்டு.

தம்மிடமுள்ள இராணுவத்தினர் இருவரையும் விடுதலை செய்வதற்கு தாம் விதிக்கும் நிபந்தனைகளைக் கூறினார் கிட்டு. மேலிடத்தில் பேசிவிட்டு முடிவு தெரிவிப்பதாகக் கூறினார் ஆனந்த வீரசேகரா.

பேச்சு முடிந்ததும் ஆனந்த வீரசேகரா யாழ்ப்பாணத்தில் உள்ள தனது நண்பர்கள் சிலரைப் பார்க்க விரும்பினார். அவர் பார்க்க விரும்பியவர்களில் முக்கியமான ஒருவர் ஈ. கனகலிங்கம். அவர் ஒரு தலைசிறந்த உதைபந்தாட்ட வீரர். கோல் காப்பாளர்.

பரமேஸ்வராக் கல்லூடயிணீல் அதிபராகவும் கடமையாற்றியவர். யாழ் மத்திய கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கடமையாற்றிய ஈ. சபாலிங்கத்தின் சகோதரர்தான் கனகலிங்கம்.

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகில் இருந்த கனகலிங்கம் வீட்டுக்கு ஆனந்த வீரசேகராவை அழைத்துச் சென்றனர் புலிகள்.

ஆனந்த வீரசேகராவும் ஒரு உதைப்பந்தாட்ட வீரர். தனது விருப்பத்தை புலிகள் நிறைவேற்றியதற்காக தனிப்பட்டரீதியிலும் தனது நன்றியைத் தெரிவித்தார் ஆனந்த வீரசேகரா.

(1986 ஆம் ஆண்டு விஜயகுமாரணதுங்கா யாழ்ப்பாணம் விஜயம் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் கணவர் விஜயகுமாரணதுங்காவுக்கு துப்பாக்கி சுடப் பழக்கிய கிட்டு, பின்பு சந்திரிக்கா அரசாங்கம் வந்து யாழ்பாணத்தை பிடித்தபோது.. துண்டக்காணோம் துணியயை காணோம் என புலிகள் ஓடிய வரலாறும் உண்டு.)

அருணாவுக்கு சூடு

இரண்டு இராணுவத்தினரையும் விடுதலை செய்வதற்குப் பதிலாக, தமது உறுப்பினர்களான அருணாவையும், காமினியையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் கிட்டுவின் பிரதான நிபந்தனையாகும்.

அருணாவும், காமினியும் கோட்டை இராணுவ முகாமில் தடுத்துவைத்திருக்கும் போது நடைபெற்ற சம்பவம் ஒன்றையும் குறிப்பிட்டாக வேண்டும்.

அருணா ஒருநாள் கோட்டை முகாம் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது கோட்டை முகாமுக்குள் ஷெல் ஒன்று விழுந்து வெடித்தது. அது ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பால் ஏவப்பட்ட ஷெல்.

ஷெல் விழுந்து வெடித்ததும் முகாமுக்குள் பதட்டம். ஆத்திரமடைந்த ஒரு இராணுவவீரரின் பார்வை குளித்துக் கொண்டிருந்த அருணாமீது சென்றது.

அருணாவை நோக்கிச் சுட்டார் அந்த இராணுவ வீரர். அதனால் அருணாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது.

விஷயமறிந்ததும் கொத்தலாவல விசாரித்தார். “அருணா தப்பியோட முற்பட்டார். அதனால் காலில் சுடவேண்டியதாகிவிட்டது.” என்று சொன்னார் அந்த இராணுவ வீரர்.

கொத்தலாவலக்கு உண்மை தெரிந்துவிட்டது. அந்த இராணுவ வீரரைக் கைதுசெய்யுமாறு உத்தரவிட்டதோடு, அருணாவை கொழும்பில் இருந்த இராணுவ வைத்தியசாலைக்கு அனுப்பி சிகிச்சை கொடுக்க ஏற்பாடும் செய்தார்.

அப்போதும் அருணா புலிகளில் முக்கியமான ஒருவர் என்பது கொத்தலாவலக்குத் தெரியாது.

முக்கியமான உறுப்பினர்கள் உயிருடன் பிடிபடமாட்டார்கள், சயனைட் அடித்துவிடுவார்கள் என்றுதான் நம்பப்பட்டது.

புலிகளால் கொடுக்கப்பட்ட விடுவிக்கப்படவேண்டியோர் பட்டியலை வைத்துத்தான் அருணா முக்கியமான புள்ளிதான் என்று தெரியவந்தது.

விஜய் விஜயம்

அருணாவையும், காமினியையும் விடுதலை செய்ய இராணுவத்தரப்புக்கு அனுமதி கொடுத்துவிட்டது அரசாங்கம். அக்கட்டத்தில்தான் சிறீலங்கா மக்கள் கட்சித் தலைவர் விஜயகுமாரணதுங்கா யாழ்ப்பாணம் சென்று புலிகளை நேரில் சந்திக்கவும், சமாதான விஜயம் மேற்கொள்ளவும் முன்வந்தார்.

அதற்கு முன்னரும் விஜயகுமாரணதுங்கா 1982இல் ஒரு முறை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். அப்போது அவர் சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட கொப்பேகடுவவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக அப்போது யாழ்ப்பாணம் வந்திருந்தார் விஜய்.

அத் தேர்தலில் கொப்பேகடுவவுக்கு யாழ் குடாநாட்டில் விவசாயிகள் செறிவாக உள்ள பகுதிகளில் கணிசமான வாக்குகள் கிடைத்தன. அதன்பின்னர் 1986 நவம்பரில்தான் விஜயகுமாரணதுங்கா யாழ்ப்பாணம் விஜயம் செய்தார்.

அவரது சமாதான விஜயம் பரபரப்பாகப் பேசப்பட்டது. கொழும்பு பத்திரிகைகளும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்திருந்தன.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறி, சிறீலங்கா மக்கள் கட்சியை ஆரம்பித்திருந்த விஜயகுமாரணதுங்காவுக்கு அரசியல்
ரீதியாக பயன்கொடுக்கக்கூடிய விஜயமாக அது அமைந்தது.

(யாழ்ப்பாணத்தில் விஜயகுமாரணதுங்கா வந்தபோது எடுக்கப்ட்ட வீடியோ)

ஹெலிகொப்டர் ஒன்றில் யாழ் கோட்டை முகாமில் வந்திறங்கினார்கள் விஜயகுமாரணதுங்கா குழுவினர்.

அவர்களை கோட்டை இராணுவ முகாமின் அருகில்வைத்து சிறப்பான வரவேற்புக் கொடுத்து அழைத்துச் சென்றனர் புலிகள்.

யாழ்ப்பாணத்தில் விஜயகுமாரணதுங்காவின் வருகைக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது.

இனப்பிரச்சனைக்கு சமாதானத் தீர்வொன்றைக் காண்பதற்காக விஜயம் செய்த தென்னிலங்கை சிங்களத் தலைவர் விஜயகுமாரணதுங்கா தான்.

சிறந்த நடிகரான் விஜய் தென்னிலங்கையில் பிரபலமானளவுக்கு வடக்குகிழக்கில் பிரபலமானவராக இருக்கவில்லை.

சமாதான விஜயம் மேற்கொண்டமையினால் வடக்கில் பிரபலமானதோடு, தமிழ் மக்களது நேசத்துக்குரியவராகவும் மாறினார் விஜய்.

நல்லூர் கந்தசாமி கோவில் வீதியில் விஜயகுமாரணதுங்கா கலந்து கொள்ளும் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தனர் புலிகள்.
பெரும்திரளான மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அங்கு விஜய் உரையாற்றனார்.

கூட்டம் நடைபெறும் இடத்துக்கு அருகில் பெரிய பீரங்கி போன்ற ஒன்றை நிறுத்திவைத்திருந்தனர் புலிகள். உண்மையில் அதனால் சுட முடியாது. பார்வைக்கு பிரமாண்டமாகத் தெரியும் அவ்வளவுதான்.

விடுவிப்பு

யாழ்ப்பாணத்தில் தனக்கும், தனது குழுவினருக்கும் கிடைத்த வரவேற்பைக் கண்டு நெகிழ்ந்து போனார் விஜய்.

விஜய் குமாரணதுங்கா குழுவினர் கோட்டைக்குத் திரும்பும்போது, அவர்களோடு தம் பிடியில் இருந்த இரண்டு இராணுவத்தினரையும் விடுதலை செய்து அனுப்பி வைத்தனர் புலிகள்.

அதனையடுத்து இராணுவத்தினரிடமிருந்த அருணாவும், காமினியும் விடுதலையாகி யாழ் வந்தனர். பட்டாசுகள் கொளுத்தி மகிழ்ச்சி தெரிவித்தனர் புலிகள்.

யாழ் சென்று புலிகளிடமிருந்து இரண்டு இராணுவத்தினரையும் அழைத்து வந்தது மூலம் தென்னிலங்கையிலும் சமாதானத் தூதுவராக மதிக்கப்பட்டார் விஜயகுமாரணதுங்கா.

விஜயகுமாரணதுங்காவுடன் யாழ் விஜயம் செய்தவர்களில் வணபிதா யோகான் தேவானந்தா, ஓ.சி.அபயகுணசேகர, வின்சன்ட் பெரேரா ஆகியோர் முக்கயமானவர்கள்.

கைதிகள் விடுவிப்பை அடுத்து புலிகளோடு பேச்சு நடத்த இலங்கை அரசு முயற்சிகளை மேற்கொண்டது. எனினும் அந்த முயற்சிகளில் பெரியளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

சதி?

இதற்கிடையே யாழ்ப்பாணத்தில் கிட்டு ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தினார். அந்த பத்திரிகையாளர் மாநாட்டில் வைத்து ஒரு தமிழ் இளைஞர் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார்.

“இவர்தான் கிட்டுவைக்கொலை செய்ய இராணுவத்தினரால் அனுப்பப்பட்டவர், இவரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டது” என்று விளக்கம் கொடுத்தனர் புலிகள்.

“புலிகள் சொல்வது உண்மைதான். கிட்டுவைக் கொலை செய்யவே நான் வந்தேன்.” என்று அந்த இளைஞரும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

அச்செய்தி மறுநாளே பத்திரிகைகளில் பெரிதாக வெளிவந்தது.

‘கிட்டுவைக் கொல்லச் சதி’ என்று செய்திகள் வெளியானதை மக்கள் பார்த்தனர். அதனால் இராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுக்கள் பற்றிய எதிர்பார்ப்புக்கள் அடங்கிப் போயின.

அதேசமயம் கப்டன் கொத்தலாவலக்கு பிற்காலத்தில் சில கசப்பான அனுபவங்களும் ஏற்பட்டன. அவருக்கும் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் சந்தேகிக்ப்பட்டது.

அப்படியிருந்தும் 1990இல் கிட்டு வெளிநாடு செல்ல கடவுச்சீட்டு கேட்டு விண்ணப்பித்தபோது அதற்கு ‘ஸ்பொன்சர்’ பண்ணியவர் கொத்தலாவலதான்.

இலங்கை இராணுவத்தில் புலிகளுடன் நெருங்கிப்பழகிய ஒரே ஒரு இராணுவ அதிகாரி கொத்தலாவலதான். அதேநேரம் புலிகள் மதிப்பு வைத்திருந்த ஒரே ஒரு இராணுவ அதிகாரியும் அவர்தான்.

புலிகள் அறிவிப்பு (ஜனவரி 1ல் புலிகள் யாழ் சிவில் நிர்வாகத்தை பொறுபேற்றனர்)

1987 ஜனவரி மாதத்தில் புலிகள் ஒரு அறிவித்தலை வெளியிட்டனர்.

யாழ்குடாநாட்டில் சகல சிவில் நிர்வாக நடவடிக்கைகளும் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து தமது கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாக புலிகளின் அறிவித்தல் கூறியது.

அதற்கு முன்னரே சிவில் நிர்வாக நடிவடிக்கைகள் இயக்கங்களின் கட்டுப்பாட்டில்தான் நடந்து வந்தன. ஏனைய இயக்கங்களை (ஈரோஸ் தவிர) தடை செய்த பின்னர் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் புலிகளது கட்டுப்பாடு மேலோங்கியது.

எனினும், முதன் முதலாக வெளிப்படையாக அறிவிப்புச் செய்து, யாழ்குடாநாட்டு சிவில் நிர்வாகத்தை தாம் கையேற்பதாகப் புலிகள் சொன்னது ஜனவரி 1ம் திகதிதான்.

புலிகள் வெளிப்படையாக அவ்வாறு அறிவித்தமை அரசுக்குப் பெரும் சவாலாக இருந்தது. அதனையடுத்து யாழ் குடாநாட்டுக்கு எரிபொருள் தடைவிதிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது.

பிரபாவின் நகர்வு
யாழ்குடாநாட்டில் புலிகளின் ஆட்சி என்று தென்னிலங்கை பத்திரிகைகள் எழுதியதோடு, அரசாங்கத்தைக் கண்டிக்கவும் செய்தன. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த சிறீலங்கா சுதந்திரக்கட்சியும் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சனம் செய்தது.

யாழ்ப்பாணத்தை புலிகளிடம் தாரை வார்த்துவிட்டது அரசாங்கம் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினார்கள். இதேவேளை யாழ்ப்பாணம் புலிகளின் தளப் பிரதேசம் என்றநிலை உறுதியாக உருவானதால், கிட்டுவின் புகழும் வளரத்தொடங்கியது.

கிட்டுவின் வளர்ச்சியானது அவர்தான் பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் உள்ள தலைவர் என்று அனைவரையும் நினைக்க வைத்தன.

உள்நாட்டுப் பத்திரிகைகளில் மட்டுமல்ல, வெளிநாட்டுப் பத்திரிகைகளிலும் கிட்டுவின் பெயர் அடிபடத் தொடங்கியது. அதனையிட்டு பொறாமைப்பட்டவர்களில் முதன்மையானவர் மாத்தையா.

புலிகள் இயக்கத்தின் பிரதித் தலைவர் என்ற தனது நிலை கிட்டுவால் பறிபோய்க் கொண்டிருப்பதாக நினைத்தார் மாத்தையா. ஏற்கனவே பல்வேறு விடயங்களில் மாத்தையாவும், கிட்டுவும் முரண்பாடு கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கிட்டுவின் அதீத வளர்ச்சி மாத்தையாவை மேலும் மேலும் எரிச்சல் ஊட்டியது. அதற்கிடையே மன்னார் மாவட்டத்தில் விக்ரரின் மறைவை அடுத்து, ராதா தளபதியாக நியமிக்கப்பட்டார்.

வன்னித் தளபதியாக மாத்தையா இருந்தாலும், மன்னார் மாவட்ட புலிகளோடு கிட்டுவுக்குத்தான் தொடர்பு கூடுதலாக இருந்தது.

தளத்திலுளள் நிலவரங்களை தமிழ்நாட்டில் இருந்து அறிந்து கொண்டிருந்த பிரபாகரன் 1987 ஜனவரி மாதத்தில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார்.

பிரபாகரனுடன் வந்தவர்களில் முக்கியமானவர் பொன்னம்மான். பிரபாகரனின் வருகையோடு யாழ்ப்பாணத்தில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

(தொடர்ந்து வரும்)
-எழுதுவது அற்புதன்-Post a Comment

Protected by WP Anti Spam