பிரேஸில் முன்னாள் அழகுராணி சடலமாக மீட்பு…!!
பிரபஞ்ச அழகுராணிப் போட்டிகளிலும் பங்குபற்றிய பிரேஸிலின் முன்னாள் அழகுராணி ஒருவர் தனது வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஃபாபியன் நிக்லோட்டி என்பவரே சில தினங்களுக்கு முன் இறந்து கிடந்தார்.
2004 ஆம் ஆண்டு மிஸ் பிரேஸில் அழகுராணியாகத் தெரிவானவர் ஃபாபினே நிக்லோட்டி.
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரபஞ்ச அழகுராணி போட்டி யிலும் பிரேஸில் சார்பாக அவர் பங்குபற்றியிருந்தார்.
31 வயதான ஃபாபியன் நிக்லோட்டி, பிரேஸிலின் தென் பிராந்தியத்திலுள்ள கிரமடோ நகரிலுள்ள தனது வீட்டிலி ருந்து சடலமாக மீட்கப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 28 ஆம் திகதி இரவு ஃபாபியன் நிக்லோட்டிக்கு அவரின் சகோதரர் பல தடவைகள் தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட போதிலும் ஃபாபியன் பதிலளிக்காததால் இது தொடர்பாக அவரின் சகோதரர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார் என பொலிஸ் இன்ஸ்பெக்டர் கஸ்டாவோ பார்செலோஸ் தெரிவித்தார்.
ஃபாபியன் நிக்லோட்டியின் உடலில் காயங்கள் எதுவும் காணப்படவில்லை எனவும், அவரின் வீட்டுக்குள் பலவந்தமாக எவரும் புகுந்தமைக்கான தடயங்கள் தென்படவில்லை எனவும் இன்ஸ்பெக்டர் கஸ்டாவோ கூறினார்.
இந்நிலையில் ஃபாபினே நிக்லோட்டியின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
2004 ஆம் ஆண்டு ஈக்வடோரில் நடைபெற்ற பிரபஞ்ச அழகுராணி (மிஸ் யூனிவர்ஸ்) போட்டிகளில் ஃபாபியன் நிக்லோட்டி பங்கு பற்றினார்.
எனினும் அவர் அரையிறுதிச் சுற்றுக்குத் தெரிவாகவில்லை.
அவ்வேளையில் 19 வயது யுவதியாக இருந்த ஃபாபினே நிக்லோட்டி, மருத்துவத் தாதியாகுவதற்கான கற்கை நெறியை பயின்று வந்தார்.
மிஸ் பிரேஸில் அழகுராணியாகத் தெரிவாகியதன் மூலம் கிடைத்த பரிசுப் பணத்தைப் பயன்படுத்தி இங்கிலாந்தில் ஆங்கில மொழியை கற்க ஆரம்பித்தார் ஃபாபியன்.
பின்னர் அவர் மொடலாகவும் வர்த்தக நிலையமொன்றின் முகாமை யாளராகவும் பணியாற்றினார்.
அத்துடன் பிரேஸில் பல்கலைக்கழகமொன்றில் சமூக விஞ்ஞான கற்கை நெறியையும் அவர் பயின்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating