தாய் பகிரங்க மெய்வல்லுநர் போட்டி; இலங்கைக்கு 2 தங்கப் பதக்கங்கள்…!!
தாய்லாந்தின் தமாசாத் பல்கலைக்கழக விளையாட்டரங்கில் திங்களன்று ஆரம்பமான தாய் பகிரங்க மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கு 2 தங்கப் பதக்கங்களும் 2 வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன.
கயன்திகா துசித்தா அபேரட்ன, சஞ்சீவ லக்மால் ஆகிய இருவரும் முறையே பெண்கள் மற்றும் ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் வெற்றிபெற்று தங்கப் பதக்கங்களை சுவீகரித்தனர்.
இவர்கள் இருவரும் இவ்வருட முற்பகுதியில் குவாஹாட்டியில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் இதே நிகழ்ச்சிகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க தெற்காசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பாடசாலை மாணவி ருமேஷிக்கா ரத்நாயக்க, தாய் பகிரங்க மெய்வல்லுநர் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.
ஆண்களுக்கான நீளம் பாய்தலில் அமில ஜயசிறிக் கும் வெண்கலப் பதக்கமே கிடைத்தது.
இப் போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்த எம். எஸ். சந்தருவன் (கோலூன்றிப் பாய்தல்), லயனல் சமரஜீவ (5,000 மீ., 10,000 மீ.), டிலிப் ருவன் (400 மீ.) ஆகியோரும் பங்குபற்றுகின்றனர்.