நீராடியவரின் வலது காலை துண்டாடிய முதலை…!!
கதிர்காமம், மாணிக்கக் கங்கையில் நீராடிக்கொண்டிருந்த 47 வயதுடைய நபரின் காலை, முதலையொன்று கடித்து துண்டாடிய சம்பவமொன்று நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
ஹங்குரங்கெத்த பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், திங்கட்கிழமை இரவு 07 மணியளவில் மாணிக்க கங்கையில் நீராடிக்கொண்டிருந்த போதே முதலையொன்று, அவரது வலது காலை கவ்வி இழுத்துச்சென்றுள்ளது. இருப்பினும் அருகிலிருந்த ஏனையோர், முதலையின் பிடியிலிருந்து அவரை காப்பாற்றியுள்ளனர். எனினும், வலது காலில் முழங்காலுக்கு கீழான பகுதியை, முதலை கவ்விச்சென்றுவிட்டது.
மேலும் காயமுற்ற நபர், சிகிச்சைகளுக்காக திஸ்ஸமஹாரம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கதிர்காமத்துக்கு யாத்திரை வந்திருந்த ஹங்குராங்கெத்த பிரதேசத்தைச் சேர்ந்த யாத்திரிகர்கள் 40பேர் மாணிக்க கங்கையின் பாதுகாப்பான இடம் என கூறப்பட்ட இடத்தில் அன்றைய தினம் இரவு 7 மணியளவில் குளித்துக்கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சம்பவ இடத்தில் இருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
மாணிக்க கங்கையில் 10க்கும் மேற்பட்ட முதலைகள் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் பிடிக்கப்பட்டு வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்படட போதிலும் இன்னும் நூற்றுக்கு அதிகமான முதலைகள் மாணிக்க கங்கையில் காணப்படுவதாக பிரதேசவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.