நள்ளிரவில் தொட்டிலில் இருந்து இறங்கி நடுரோட்டுக்கு தவழ்ந்து வந்த 1¼ வயது பெண்…!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள நல்லிக்கவுண்டன் தோட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 26) இவரது மனைவி தெய்வானை (22) இவர்களுக்கு சமந்தா (1¼) என்ற பெண் குழந்தை உள்ளது.
மணிகண்டன் இதே பகுதியில் உள்ள ராமசாமி என்பவருக்கு சொந்தமான செங்கல்சூளையில் மனைவியுடன் வேலை பார்த்து வருகிறார். அவர்கள் சூளை அருகே தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகிறார்கள்.
நேற்று இரவு குழந்தை சமந்தாவை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு கணவன் – மனைவியும் படுத்துத் தூங்கினர்.
நள்ளிரவு 1.30 மணியளவில் திடீரென கண்விழித்த சமந்தா தொட்டிலில் இருந்து இறங்கி தவழ்ந்து கொண்டே வீட்டில் இருந்து வெளியே வந்தது. பின்னர் குழந்தை சமந்தா தட்டுத்தடுமாறி தவழ்ந்து கொண்டே வீட்டைஒட்டி உள்ள கோவை – மதுரை பைபாஸ் ரோட்டிற்கு வந்தாள்.
நடுரோட்டில் குழந்தை தவழ்ந்து கொண்டிருந்ததால் அந்த வழியாக வந்து சென்ற வாகனங்கள் குழந்தை மீது மோதாமல் ஓரமாக மெதுவாக சென்றது. அப்போது, வத்தலகுண்டைச் சேர்ந்த மினி லாரி டிரைவர் தங்கப்பாண்டி என்பவர் லாரியை நிறுத்தி விட்டு யாரும் இல்லாமல் தனியாக ரோட்டில் தவழ்ந்து கொண்டிருந்த குழந்தை சமந்தாவை மீட்டு தாராபுரம் போலீசில் ஒப்படைத்தார்.
போலீசாரின் விசாரணையில் குழந்தை மணிகண்டனின் குழந்தை என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரையும் அவரது மனைவியையும் அழைத்து குழந்தையை ஒப்படைத்தனர். அப்போது குழந்தையின் பெற்றோர் வேலை முடிந்து அயர்ந்து தூங்கியதாலும், வீட்டின் கதவை பூட்டாமல் விட்டதாலும் குழந்தை வெளியே வந்ததாக தெரிவித்தனர்.
அதற்கு போலீசார் குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
போக்குவரத்து மிகுந்த பைபாஸ் சாலையில் குழந்தை அதிர்ஷ்டவசமாக தப்பியது அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.